விநாயகர் நான்மணிமாலை பக்திப் பாடல் Vinayagar Naanmani Malai By Subramaniya Bharathiyar சுப்ரமணிய பாரதியார்

0
841

Vinayagar Naanmani Malai விநாயகர் நான்மணி மாலை | Vinayagar Naanmani Malai Song

Vinayagar Naanmani Malai

வெண்பா (1) Vinayagar Naanmani Malai

(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா ) அத்தனே
(நின்)றனக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே.

கலித்துறை (2)

நீயே சரணம்நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

விருத்தம் (3)

செய்யுந் தொழிலுடன் தொழிலேகாண்; சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும் வானத் தையுமுன் படைத்தவனே!
ஐயா, நான்முகப் பிரமா, யானை முகனே, வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே, கமலா சனத்துக் கற்பகமே.

அகவல் (4)

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றேங்ங்கலாம்;
அச்சந் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;1
அமரத் தன்மையு ம்எய்தவும்
இங்குநாம் பெறலாம்; இஃதுணர் வீரே.2 4

வெண்பா (5)

(உண)ர்வீர், உணர்வீர் உலகத்தீர் இங்குப்
(புண)ர்வீ(ர் அமரரு)றும் போக(ம்) — கண(ப)தி(யைப்)
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்.)

கலித்துறை (6) Vinayagar Naanmani Malai

காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.

விருத்தம் (7)

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே.

அகவல் (8)

கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,

வெண்பா (9)

களியுற்று நின்று கடவுளே யிங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் — ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து.

கலித்துறை (10)

துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

விருத்தம் (11)

தவமே புரியும் வகையறியேன், சலியா துறநெஞ் சறியாது,
சிவமே நாடிப் பொழுதனைத்தும் தியங்கித் தியங்கி-நிற்பேனை, நவமா ணிகள் புனைந்தமுடி நாதா, கருணா லயனே, தத்
துவமா கியதோர் பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே.

அகவல் (12) Vinayagar Naanmani Malai

சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானுந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய்
வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை
ஆழ்ந்து கருதியாய்ந் தாய்ந்து, பலமுறை
சூழ்ந்து, தெளிந்துபின் சூழ்ந்தார்க் கெல்லாம்,
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறிநான் சித்திபெற்றிடவே,
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னா லுனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே, எனைநீ வாழ்வித் திடுவாய்.
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே.

வெண்பா (13)

புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே — இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்.

கலித்துறை (14)

வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமுங் காய்ந்தெறிந்து
‘சிரமீதெங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர்’ என்றுளத் தேகளி சார்ந்ததுவே.

விருத்தம் (15)

சார்ந்து நிற்பாய் எனதுளமே, சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து, பரம சிவாநந்தர் பேற்றை நாடி, நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும் ஐயன், சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங் கோமான் பாதக் குளிர்நிழலே.

அகவல் (16)

நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினு எனக்குய
பகைமை யொன் றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத் தோங்க நோக்குறும் விழியும்
மௌன வாயும் வரந்தரு கையும்
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூலவித் தாவான்
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்
ஏழையர்க் கெலாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே.

வெண்பா (17)

முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே,
இறையேனும் வாடாய் இனிமேல் கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை.

கலித்துறை (18)

துணையே, எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும்
மணியே; எனதுயிர் மன்னவனே, என்றன் வாழ்வினுக்கோர்
அணியே, எனுள்ளத்தி, லார முதே என தற்புதமே,
இணையே துனக்குரைப் பேன்கடை வானில் எழுஞ்சுடரே.

விருத்தம் (19)

சுடரே போற்றி, கணத்தேவர் துரையே போற்றி, எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி
இடரா தோடு மண்டலங்கள் இசைத்தாய், வாழி இறையவனே.

அகவல் (20)

இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
தேவ தேவா, சிவனே, கண்ணா,
வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
வாணீ, காளீ, மாமக ளோயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே,
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

வெண்பா (21)

கடமை தானேது கரிமுகனே வையத்
திடம்நீ யருள்செய்தாய் எங்க-ள் உடைமைகளும்
இன்பங்களு மெல்லாம் ஈந்தாய் நீ யாங்களுனக்கு
என்புரிவோம் கைம்மா றியம்பு.

கலித்துறை (22)

இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும் எடுத்தவினை
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே.

விருத்தம் (23)

மேன்மைப் படுவாய் மனமேகேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை,
யான்முன் உரைத்தேன் கோடிமுறை, இன்னுங் கோடிமுறை சொல்வேன்,
ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே.

அகவல் (24) Vinayagar Naanmani Malai

அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
நடுங்குத லில்லை, நாணுத லில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு,
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காணநல் லுலகுமு
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்றுமிங் குளவாம்; சலித்திடாய், ஏழை
நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி,
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல். மன்னோ
தஞ்ச முண்டு, சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.

வெண்பா (25)

நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்;-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றும் செய்.

கலித்துறை (26)

செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே.

விருத்தம் (27)

பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார்,
சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

அகவல் (28)

எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்;
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறிஅதிற் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்;
மங்கள குணபதி மணக்குளக் கணபதி
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் அசை மகனே.
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி
ஆள்வதும் பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
காத்தருள் புரிக, கடவுளே, உலகெலாம்
கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே,
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா, போற்றி!
சங்கரன் மகனே தாளிணை போற்றி!

வெண்பா (29)

போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத் தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு.

கலித்துறை (30)

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கிஎன்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே.

விருத்தம் (31)

செய்யாள் இனியால் ஸ்ரீ தேவி, செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்
கையா ளெனநின் றடியேன்செய் தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்; புகழ்சேர் வாணியுமென்னுள்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள், சக்தி துணைபுரிவாள், பிள்ளாய், நின்னைப் பேசிடிலே.

அகவல் (32) Vinayagar Naanmani Malai

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி

வெண்பா (33)

உனக்கேஆன் எவியும் உள்ளமும் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி (எனக்கே நீ)
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

கலித்துறை (34)

விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத்தி லேதிரு மாதுடன் பள்ளிகொண் டான்மருகா!
வரங்கள் பொழியும் முகிலே என்னுள்ளத்து வாழ்பவனே!

விருத்தம் (35)

வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே;
ஆழ்கம் உள்ளஞ் சலனமிலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா (இன்பம் விளைந்திடுக)
வீழ்க கலியின் வலியெல்லாம், கிருத யுகந்தான் மேவுகவே.

அகவல் (36) Vinayagar Naanmani Malai

மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்; எதற்குமினி அஞ்சேல்
ஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான்
அபயமிங் களித்தேன் நெஞ்(சே)
நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத் தி(டவே)
தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்,
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்;
மூட நெஞ்சே, முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்; இன்னும் மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும் ‘நமக்கேன்’ என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்;
நமக்கேன் பொறுப்பு? “நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை; நானெனும் எண்ணமே வெறும்பொய்”
என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன்பதம்.
இனியெப் பொழுதும் உரைத்திடேன். இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!
கவலைப் படுதலே கருநர கம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

வெண்பா (37)

செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்! வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு.

கலித்துறை (38)

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.

விருத்தம் (39)

மொய்க்குங் கவலைப் பகைபோக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி, யுடலை யிரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று, பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியிஃதே.

அகவல் (40)

விதியே வாழி, விநாயகா வாழி,
பதியே வாழி, பரமா வாழி,
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே; போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி,
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி,
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி, வீரம் வாழி!
பக்தி வாழி, பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி,
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதங்களாம், கண்டீர், பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே.

பாரதியார் பாடல்கள் தொகுப்புYoutube

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: