Thirukkural Vinai Seyal Vagai Adhikaram-68 (Vinaiseyalvagai) திருக்குறள் வினைசெயல்வகை அதிகாரம்-68 அமைச்சியல் பொருட்பால் Thirukkural Vinai Seyal Vagai Adhikaram-68 Amaichiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-68 அமைச்சியல் வினைசெயல்வகை. வினை செயல் வகை Vinai Seyal Vagai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Vinai Seyal Vagai Chapter-68 Vinai Seyal Vakai.
Thirukkural Vinai Seyal Vagai Adhikaram-68
திருக்குறள் பா: 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
kural 671: soozhchchi mutivu thuniveydhal aththunivu thaazhchchiyul thangudhal theedhu
திரு மு.வரதராசனார் பொருள்:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
மணக்குடவர் பொருள்: சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.
கலைஞர் பொருள்: ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.
திருக்குறள் பா: 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
kural 672: thoonguka thoongich cheyarpaala thoongarka thoongaadhu seyyum vinai
திரு மு.வரதராசனார் பொருள்:
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
மணக்குடவர் பொருள்: தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க: தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.
கலைஞர் பொருள்: நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
சாலமன் பாப்பையா பொருள்: காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
திருக்குறள் பா: 673
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
kural 673: ollumvaa yellaam vinainandre ollaakkaal sellumvaai nokkich cheyal
திரு மு.வரதராசனார் பொருள்:
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
மணக்குடவர் பொருள்: இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.
கலைஞர் பொருள்: இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
திருக்குறள் பா: 674
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
kural 674: vinaipakai endrirantin echcham ninaiyungaal theeyechcham polath therum
திரு மு.வரதராசனார் பொருள்:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
மணக்குடவர் பொருள்: வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.
கலைஞர் பொருள்: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
சாலமன் பாப்பையா பொருள்: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
திருக்குறள் பா: 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
kural 675: porulkaruvi kaalam vinaiyitanotu aindhum iruldheera ennich cheyal
திரு மு.வரதராசனார் பொருள்:
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
மணக்குடவர் பொருள்: பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.
கலைஞர் பொருள்: ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.
திருக்குறள் பா: 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
kural 676: mutivum itaiyoorum mutriyaangu eydhum patupayanum paarththuch cheyal
திரு மு.வரதராசனார் பொருள்:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
மணக்குடவர் பொருள்: வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.
கலைஞர் பொருள்: ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.
திருக்குறள் பா: 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
kural 677: seyvinai seyvaan seyanmurai avvinai ullarivaan ullam kolal
திரு மு.வரதராசனார் பொருள்:
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.
மணக்குடவர் பொருள்: செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.
கலைஞர் பொருள்: ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.
திருக்குறள் பா: 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
kural 678: vinaiyaan vinaiyaakkik kotal nanaikavul yaanaiyaal yaanaiyaath thatru
திரு மு.வரதராசனார் பொருள்:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
மணக்குடவர் பொருள்: ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.
கலைஞர் பொருள்: ஒரு செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.
திருக்குறள் பா: 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
kural 679: nattaarkku nalla seyalin viraindhadhe ottaarai ottik kolal
திரு மு.வரதராசனார் பொருள்:
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
மணக்குடவர் பொருள்: தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.
கலைஞர் பொருள்: நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா பொருள்: ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.
திருக்குறள் பா: 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
kural 680: uraisiriyaar ulnatungal anjik kuraiperin kolvar periyaarp panindhu
திரு மு.வரதராசனார் பொருள்:
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
மணக்குடவர் பொருள்: உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர். இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.
கலைஞர் பொருள்: தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா பொருள்: சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)