Thirukkural Thoothu Adhikaram-69 திருக்குறள் தூது அதிகாரம்-69 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil

0

Thirukkural Thoothu Adhikaram-69 (Thuthu) திருக்குறள் தூது அதிகாரம்-69 அமைச்சியல் பொருட்பால் Thirukkural Thoothu Adhikaram-69 Amaichiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-69 அமைச்சியல் தூது. Thoothu Thirukkural by Thiruvalluvar. Thirukkural Thoothu Chapter-69 Thuthu.

Thirukkural Thoothu Adhikaram-69

Thirukkural Thoothu Adhikaram-69

திருக்குறள் பா: 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

kural 681: anputaimai aandra kutippiraththal vendhavaam panputaimai thoodhuraippaan panpu

திரு மு.வரதராசனார் பொருள்:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

மணக்குடவர் பொருள்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

கலைஞர் பொருள்: அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

திருக்குறள் பா: 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

kural 682: anparivu aaraaindha solvanmai thoodhuraippaarkku indri yamaiyaadha moondru

திரு மு.வரதராசனார் பொருள்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

மணக்குடவர் பொருள்: அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.

கலைஞர் பொருள்: தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

சாலமன் பாப்பையா பொருள்: அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

திருக்குறள் பா: 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

kural 683: noolaarul noolvallan aakudhal velaarul vendri vinaiyuraippaan panpu

திரு மு.வரதராசனார் பொருள்:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

மணக்குடவர் பொருள்: எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

கலைஞர் பொருள்: வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

திருக்குறள் பா: 684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

kural 684: arivuru vaaraaindha kalviim moondran serivutaiyaan selka vinaikku

திரு மு.வரதராசனார் பொருள்:
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

மணக்குடவர் பொருள்: அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.

கலைஞர் பொருள்: தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

திருக்குறள் பா: 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

kural 685: thokach chollith thoovaadha neekki nakachcholli nandri payappadhaan thoodhu

திரு மு.வரதராசனார் பொருள்:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

மணக்குடவர் பொருள்: சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.

கலைஞர் பொருள்: சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

திருக்குறள் பா: 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

kural 686: katrukkan anjaan selachchollik kaalaththaal thakkadhu arivadhaam thoodhu

திரு மு.வரதராசனார் பொருள்:
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

மணக்குடவர் பொருள்: தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.

கலைஞர் பொருள்: கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

சாலமன் பாப்பையா பொருள்: அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

திருக்குறள் பா: 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

kural 687: katanarindhu kaalang karudhi itanarindhu enni uraippaan thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

மணக்குடவர் பொருள்: காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.

கலைஞர் பொருள்: ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

சாலமன் பாப்பையா பொருள்: தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

திருக்குறள் பா: 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

kural 688: thooimai thunaimai thunivutaimai immoondrin vaaimai vazhiyuraippaan panpu

திரு மு.வரதராசனார் பொருள்:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

மணக்குடவர் பொருள்: தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.

கலைஞர் பொருள்: துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

திருக்குறள் பா: 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

kural 689: vitumaatram vendharkku uraippaan vatumaatram vaaiseraa vanka navan

திரு மு.வரதராசனார் பொருள்:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

மணக்குடவர் பொருள்: தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.

கலைஞர் பொருள்: ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

திருக்குறள் பா: 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

kural 690: irudhi payappinum enjaadhu iraivarku urudhi payappadhaam thoodhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

மணக்குடவர் பொருள்: தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.

கலைஞர் பொருள்: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

சாலமன் பாப்பையா பொருள்: தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Mannarai Sernthozhudhal Adhikaram-70 திருக்குறள் மன்னரைச் சேர்ந்தொழுதல் அதிகாரம்-70 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil மன்னரைச் சேர்ந்து தொழுதல்
Next articleThirukkural Vinai Seyal Vagai Adhikaram-68 திருக்குறள் வினைசெயல்வகை அதிகாரம்-68 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil வினை செயல் வகை Vinai Seyal Vakai