Thirukkural Piranil Vizhayamai Adhikaram-15 (Piranil Vizhayamai) திருக்குறள் பிறனில் விழையாமை அதிகாரம்-15 இல்லறவியல் அறத்துப்பால் Thirukkural Piranil Vizhayamai Adhikaram-15 Illaraviyal Arathupal in Tamil. திருக்குறள் பிறனில் விழையாமை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-15 இல்லறவியல் அறத்துப்பால். பிறனில் விழையாமை Piranil Vizhayamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Piranil Vizhayamai Chapter-15 | பிறனில் விழையாமை அதிகாரம் 15.
Thirukkural Piranil Vizhayamai Adhikaram-15
திருக்குறள் பா: 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
திரு மு.வரதராசனார் பொருள்:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
மணக்குடவர் பொருள்: பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
கலைஞர் பொருள்: பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
சாலமன் பாப்பையா பொருள்: இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
திருக்குறள் பா: 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
திரு மு.வரதராசனார் பொருள்:
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
மணக்குடவர் பொருள்: காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.
கலைஞர் பொருள்: பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
சாலமன் பாப்பையா பொருள்:
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.
திருக்குறள் பா: 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
திரு மு.வரதராசனார் பொருள்:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
மணக்குடவர் பொருள்:
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
கலைஞர் பொருள்:
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
சாலமன் பாப்பையா பொருள்:
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
திருக்குறள் பா: 144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
திரு மு.வரதராசனார் பொருள்:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
மணக்குடவர் பொருள்:
எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?. பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.
கலைஞர் பொருள்:
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
சாலமன் பாப்பையா பொருள்:
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.
திருக்குறள் பா: 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
திரு மு.வரதராசனார் பொருள்:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
மணக்குடவர் பொருள்:
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது.
கலைஞர் பொருள்:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
சாலமன் பாப்பையா பொருள்:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
திருக்குறள் பா: 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
திரு மு.வரதராசனார் பொருள்:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
மணக்குடவர் பொருள்:
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.
கலைஞர் பொருள்:
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
சாலமன் பாப்பையா பொருள்:
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
திருக்குறள் பா: 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
திரு மு.வரதராசனார் பொருள்:
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
மணக்குடவர் பொருள்:
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
கலைஞர் பொருள்:
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்..
சாலமன் பாப்பையா பொருள்:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
திருக்குறள் பா: 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
திரு மு.வரதராசனார் பொருள்:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
மணக்குடவர் பொருள்:
பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம். இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.
கலைஞர் பொருள்:
வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
சாலமன் பாப்பையா பொருள்:
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
திருக்குறள் பா: 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
திரு மு.வரதராசனார் பொருள்:
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
மணக்குடவர் பொருள்:
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
கலைஞர் பொருள்:
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
சாலமன் பாப்பையா பொருள்:
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.
திருக்குறள் பா: 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
மணக்குடவர் பொருள்:
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
கலைஞர் பொருள்:
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா பொருள்:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)