Thirukkural Neethar Perumai Adhikaram-3 திருக்குறள் நீத்தார் பெருமை அதிகாரம்-3 பாயிரவியல் அறத்துப்பால் Payiraviyal Arathupal in Tamil

0

Thirukkural Neethar Perumai Adhikaram-3 (Neethar Perumai) திருக்குறள் நீத்தார் பெருமை அதிகாரம்-3 பாயிரவியல் அறத்துப்பால் Thirukkural Neethar Perumai Adhikaram-3 Payiraviyal Arathupal in Tamil. திருக்குறள் நீத்தார் பெருமை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-3 பாயிரவியல் அறத்துப்பால். நீத்தார் பெருமை Neethar Perumai Thirukkural by Thiruvalluvar | Thirukkural Neethar Perumai Chapter-3 | நீத்தார் பெருமை அதிகாரம் 3.

Thirukkural Neethar Perumai Adhikaram-3

Thirukkural Neethar Perumai Adhikaram-3

பொய்யில் புலவரான வள்ளுவர் தமது மூன்றாவது அதிகாரமாகிய நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துபுலன்களையும் அடக்கி வாழ்பவரின் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். ஒருவன் தன்னுடைய ஆசைகளை அடக்கி ஒழுக்க வாழ்வில் நிலைத்திருக்கவேண்டும் என வள்ளுவனார் கூறுகின்றார். இந்த உலகத்தில் பெருமையாக கருதப்படுவது யாதெனில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஆசைகளை துறந்து வாழ்வில் உயர்ந்த மேன்மக்களின் பெருமையே சிறந்ததாகும். அதுவே உலகுக்கு பெருமை. இந்த உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கையை எவ்வாறு அளவிட முடியாதோ அதேபோல் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துபுலன்களின் பற்றுக்களை துறந்த மக்களின் பெருமையை இந்த உலகம் அளவிட முடியாது என்று கூறுகிறார் நம் புலவர் வள்ளுவர்.

நல்லது கெட்டது நன்மை தீமை என்பவற்றை அறிந்து நன்மை செய்பவன் உலகின் பெருமைக்குரியவனாகிறான். ஐம்பொறிகளின் புலன்களான ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். ஆசை ஐந்தையும் துறந்த ஒருவனுடைய வலிமைக்கு இறைவனாகிய இந்திரனே சான்றானவன். பெருமை தரும் செயல்களைப் செய்பவர்கள் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும். ஐந்து புலன்களின் வழியில் வருவதான ஆசைகளை துறந்தவனின் வசப்பட்டதே இவ்வுலகம். அவவாறான சான்றோர்களின் பெருமையை அவர்களின் வழிவந்த‌ நூல்களே எடுத்துக் காட்டும். நல்ல பண்பு என்று சொல்லப்படும் மலையின் மேல் ஏறி நின்ற பெரியோர் ஒரு கணப்பொழுதாகிலும் சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து அவர்களை காப்பது கடினம். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராக இருந்தாலும் அவர் அந்தணர் என்று சொல்லப்படுவார்கள்.

By: Tamilpiththan

திருக்குறள் பா: 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

kural 21: ozhukkaththu neeththaar perumai vizhuppaththu ventum panuval thunivu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

மணக்குடவர் பொருள்:
ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

கலைஞர் பொருள்:
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

திருக்குறள் பா: 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

kural 22: thurandhaar perumai thunaikkoorin vaiyaththu irandhaarai ennikkon tatru

திரு மு.வரதராசனார் பொருள்:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

மணக்குடவர் பொருள்:
காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

கலைஞர் பொருள்:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்:
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

திருக்குறள் பா: 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

kural 23: irumai vakaidherindhu eentuaram poontaar perumai pirangitru ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

மணக்குடவர் பொருள்:
பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

கலைஞர் பொருள்:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

திருக்குறள் பா: 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

kural 24: uranennum thottiyaan oraindhum kaappaan varanennum vaippirkor viththu

திரு மு.வரதராசனார் பொருள்:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

மணக்குடவர் பொருள்:
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

கலைஞர் பொருள்:
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

சாலமன் பாப்பையா பொருள்:
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

திருக்குறள் பா: 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

kural 25: aindhaviththaan aatral akalvisumpu laarkomaan indhirane saalung kari

திரு மு.வரதராசனார் பொருள்:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

மணக்குடவர் பொருள்:
நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

கலைஞர் பொருள்:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

சாலமன் பாப்பையா பொருள்:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

திருக்குறள் பா: 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

kural 26: seyarkariya seyvaar periyar siriyar seyarkariya seykalaa thaar

திரு மு.வரதராசனார் பொருள்:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

மணக்குடவர் பொருள்:
செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர். செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

கலைஞர் பொருள்:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

திருக்குறள் பா: 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

kural 27: suvaioli ooruosai naatramendru aindhin vakaidherivaan katte ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

மணக்குடவர் பொருள்:
சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.

கலைஞர் பொருள்:
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

சாலமன் பாப்பையா பொருள்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

திருக்குறள் பா: 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

kural 28: niraimozhi maandhar perumai nilaththu maraimozhi kaatti vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

மணக்குடவர் பொருள்:
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

கலைஞர் பொருள்:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

திருக்குறள் பா: 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

kural 29: kunamennum kundreri nindraar vekuli kanameyum kaaththal aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

மணக்குடவர் பொருள்:
குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

கலைஞர் பொருள்:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

சாலமன் பாப்பையா பொருள்:
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

திருக்குறள் பா: 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

kural 30: andhanar enpor aravormar revvuyir kkum sendhanmai poontozhuka laan

திரு மு.வரதராசனார் பொருள்:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

மணக்குடவர் பொருள்:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

கலைஞர் பொருள்:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

சாலமன் பாப்பையா பொருள்:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரண்டு உலகங்கள்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Irandu Ulagangal!
Next articleThirukkural Aran Valiyuruthal Adhikaram-4 திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரம்-4 பாயிரவியல் அறத்துப்பால் Payiraviyal Arathupal in Tamil