Thirukkural Vaan Sirappu Adhikaram-2 திருக்குறள் வான் சிறப்பு அதிகாரம்-2 பாயிரவியல் அறத்துப்பால் Pairaviyal Arathupal in Tamil !

0

Thirukkural Vaan Sirappu Adhikaram-2 (Vaan Sirappu) திருக்குறள் வான் சிறப்பு அதிகாரம்-2 பாயிரவியல் அறத்துப்பால் Thirukkural Vaan Sirappu Adhikaram-2 Payiraviyal Arathupal in Tamil. திருக்குறள் வான் சிறப்பு பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-2 பாயிரவியல் அறத்துப்பால். வான் சிறப்பு Vaan Sirappu Thirukkural by Thiruvalluvar. Thirukkural Vaan Sirappu Chapter-2. வான் சிறப்பு அதிகாரம் 2.

Thirukkural Vaan Sirappu Adhikaram-2

Thirukkural Vaan Sirappu Adhikaram-2

பெருநாவலரான திருவள்ளுவர், தமது இரண்டாவது அதிகாரமான வான்சிறப்பில், ஐம்பூதங்களான நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று போன்றவற்றில் ஒன்றான நீரின் பெருமைகளையும், வளத்தையும், இவ்வுலகில் உள்ள உயிரினங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பதையும் உணர்வுப்பூர்வமாக விளக்கியுள்ளார். இந்த உலகத்திற்கு தேவையான நேரத்தில் எப்போதும் மழை பெய்வதால் மழைதான் அமிழ்தம் என திருவள்ளுவர் விபரிக்கிறார். இந்த பூவுலகிலுள்ள‌ எல்லா உயிர்களுக்கும் அத்தியாவசியமான ஓர் உணவாக மழை நீர் விளங்குகின்றது.

மழை நீர் உரிய காலத்தில் பொழியவில்லை என்றால் இந்த உலகமானது பஞ்சத்தால் வாடிவிடும். உழவர் உழவுத்தொழில் செய்ய முடியாது வருந்துவார்கள். மழை பொழியாது போனால் பசை மரங்களே இல்லாது போகும் பச்சை புல்லின் நுணியை கூட காணமுடியாது. பெரும் கடலுக்கு ஆதாரமும் மழை தான் மழை இல்லாமல் போனால் கடல் கூட வற்றி போய்விடும். மழை இல்லாவிட்டால் மக்கள் தெய்வத்திற்கு செய்யும் பூஜைகள் கூட இல்லாது போய்விடும். திருவிழாவும் நடைபெறாது. எத்தனை பெரியவரானாலும் எவ்வளவு பணம் பொருள் படைத்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. என்று மழையின் பெருமைகளை திருவள்ளுவர் வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் அழகாக கூறியிருக்கிறார்.

By: Tamilpiththan

திருக்குறள் பா: 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

kural 11: vaannindru ulakam vazhangi varudhalaal thaanamizhdham endrunarar paatru

திரு மு.வரதராசனார் பொருள்:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

மணக்குடவர் பொருள்:
மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.

கலைஞர் பொருள்:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

சாலமன் பாப்பையா பொருள்:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

திருக்குறள் பா: 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

kural 12: thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth thuppaaya thooum mazhai

திரு மு.வரதராசனார் பொருள்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

மணக்குடவர் பொருள்:
பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.

கலைஞர் பொருள்:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.

சாலமன் பாப்பையா பொருள்:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

திருக்குறள் பா: 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

kural 13: vinindru poippin virineer viyanulakaththu ulnindru utatrum pasi

திரு மு.வரதராசனார் பொருள்:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

மணக்குடவர் பொருள்:
வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

கலைஞர் பொருள்:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

திருக்குறள் பா: 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

kural 14: erin uzhaaar uzhavar puyalennum vaari valangundrik kaal

திரு மு.வரதராசனார் பொருள்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

மணக்குடவர் பொருள்:
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

கலைஞர் பொருள்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்

சாலமன் பாப்பையா பொருள்:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

திருக்குறள் பா: 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

kural-15: ketuppadhooum-kettaarkkuch-chaarvaaimar-raange-etuppadhooum-ellaam-mazhai-

திரு மு.வரதராசனார் பொருள்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

மணக்குடவர் பொருள்:
பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.

கலைஞர் பொருள்:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

திருக்குறள் பா: 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

kural 16: visumpin thuliveezhin allaalmar raange pasumpul thalaikaanpu aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

மணக்குடவர் பொருள்:
வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

கலைஞர் பொருள்:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

திருக்குறள் பா: 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

kural 17: netungatalum thanneermai kundrum thatindhezhili thaannalkaa thaaki vitin

திரு மு.வரதராசனார் பொருள்:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

மணக்குடவர் பொருள்:
நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.

கலைஞர் பொருள்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

திருக்குறள் பா: 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

kural 18: sirappotu poosanai sellaadhu vaanam varakkumel vaanorkkum eentu

திரு மு.வரதராசனார் பொருள்:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

மணக்குடவர் பொருள்:
சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

கலைஞர் பொருள்:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.

சாலமன் பாப்பையா பொருள்:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

திருக்குறள் பா: 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

kural 19: thaanam thavamirantum thangaa viyanulakam vaanam vazhangaa thenin

திரு மு.வரதராசனார் பொருள்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

மணக்குடவர் பொருள்:
தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.

கலைஞர் பொருள்:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

திருக்குறள் பா: 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

kural 20: neerindru amaiyaadhu ulakenin yaaryaarkkum vaanindru amaiyaadhu ozhukku

திரு மு.வரதராசனார் பொருள்:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

மணக்குடவர் பொருள்:
நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.

கலைஞர் பொருள்:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Aran Valiyuruthal Adhikaram-4 திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரம்-4 பாயிரவியல் அறத்துப்பால் Payiraviyal Arathupal in Tamil
Next articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 17-12-2019 ராசி பலன்!