Thirukkural Aran Valiyuruthal Adhikaram-4 திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரம்-4 பாயிரவியல் அறத்துப்பால் Payiraviyal Arathupal in Tamil

0

Thirukkural Aran Valiyuruthal Adhikaram-4 (Aran Valiyuruthal) திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரம்-4 பாயிரவியல் அறத்துப்பால் Thirukkural Aran Valiyuruthal Adhikaram-4 Payiraviyal Arathupal in Tamil. திருக்குறள் அறன் வலியுறுத்தல் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-4 பாயிரவியல் அறத்துப்பால். அறன் வலியுறுத்தல் Aran Valiyuruthal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Aran Valiyuruthal Chapter-4. அறன் வலியுறுத்தல் அதிகாரம் 4.

Thirukkural Aran Valiyuruthal Adhikaram-4

Thirukkural Aran Valiyuruthal Adhikaram-4

பெருநாவலரான திருவள்ளுவர் அவருடைய நான்காம் அதிகாரத்தில் அறத்தை பற்றி சிறப்புற விபரிக்கின்றார். அறம் என்பது ஒருவருடைய‌ நல்ல பண்பை உணர்த்துவது அதாவது நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல் தான் அறமாகும். ஒருவன் மனதால் நேர்மையுடன் இருப்பதே அறம். அறம் நமக்கு மற்றவர்கள் முன்னிலையில் மேன்மையையும் பெருமையும் கொடுக்க வல்லது ஆகவே இதைவிட சிறந்தது ஒருவனுக்கு உண்டா. அறத்துடன் வாழ்வதை போல சிறந்தது ஒன்றும் இல்லை அறத்தை மறந்த ஒருவனுக்கு அதை விட கெடுதல் ஒன்றும் இல்லை. எப்போதும் இடைவிடாது நாம் அறத்தை கடைப்பிடிக்க வேண்டும். மனத்தூய்மையுடன் இருந்து நல்ல வழியில் நடப்பதே அறம் மற்ற செயல்கள் வெறும் ஆரவாரத்துக்காக செய்யப்படுபவை ஆகும்.

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் போன்ற நான்கும் அறவழியில் செல்ல முடியாத தடைகளாகும். அறவழியில் நடப்பதற்கு நேரம் காலம் பார்க்காது எப்போதும் அறத்துடன் வாழ்ந்தால் அந்த அறம் நாம் வீழும் போது நம்மை தாங்கி கொள்ளும். அறத்தின் வழி வருவது மட்டுமே இன்பமாகும் ஏனையவை துன்பங்களே. ஒருவருடைய‌ வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த அறத்தின் நற்செயல்களே விளங்குகின்றன. நம் வாழ்வில் உயர்வை மட்டுமே நாம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அறத்தை தலைமேல் கொண்டு அறத்தின் வழியில் வாழ பழகிக்கொள்வோம்.

By: Tamilpiththan

திருக்குறள் பா: 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

kural 31: sirappu eenum selvamum eenum araththinooungu aakkam evano uyirkku

திரு மு.வரதராசனார் பொருள்:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

மணக்குடவர் பொருள்:
முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று கூறிற்று.

கலைஞர் பொருள்:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.

சாலமன் பாப்பையா பொருள்:
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

திருக்குறள் பா: 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

kural 32: araththinooungu aakkamum illai adhanai maraththalin oongillai ketu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

மணக்குடவர் பொருள்:
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

கலைஞர் பொருள்:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

திருக்குறள் பா: 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

kural 33: ollum vakaiyaan aravinai ovaadhe sellumvaai ellaanj cheyal

திரு மு.வரதராசனார் பொருள்:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

கலைஞர் பொருள்:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

திருக்குறள் பா: 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

kural 34: manaththukkan maasilan aadhal anaiththu aran aakula neera pira

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

மணக்குடவர் பொருள்:
ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

கலைஞர் பொருள்:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

திருக்குறள் பா: 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

kural 35: azhukkaaru avaavekuli innaachchol naankum izhukkaa iyandradhu aram

திரு மு.வரதராசனார் பொருள்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

மணக்குடவர் பொருள்: மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

கலைஞர் பொருள்:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

திருக்குறள் பா: 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

kural 36: andrarivaam ennaadhu aranjeyka matradhu pondrungaal pondraath thunai

திரு மு.வரதராசனார் பொருள்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

மணக்குடவர் பொருள்:
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

கலைஞர் பொருள்:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

திருக்குறள் பா: 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

kural 37: araththaaru ithuvena ventaa sivikai poruththaanotu oorndhaan itai

திரு மு.வரதராசனார் பொருள்:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

மணக்குடவர் பொருள்:
நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

கலைஞர் பொருள்:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

திருக்குறள் பா: 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

kural 38: veezhnaal pataaamai nandraatrin aqdhoruvan vaazhnaal vazhiyataikkum kal

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

மணக்குடவர் பொருள்:
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.

கலைஞர் பொருள்:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

திருக்குறள் பா: 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

kural 39: araththaan varuvadhe inpam mar rellaam puraththa pukazhum ila

திரு மு.வரதராசனார் பொருள்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

மணக்குடவர் பொருள்:
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

கலைஞர் பொருள்:
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

சாலமன் பாப்பையா பொருள்:
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

திருக்குறள் பா: 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

kural 40: seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

மணக்குடவர் பொருள்:
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

கலைஞர் பொருள்:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Neethar Perumai Adhikaram-3 திருக்குறள் நீத்தார் பெருமை அதிகாரம்-3 பாயிரவியல் அறத்துப்பால் Payiraviyal Arathupal in Tamil
Next articleThirukkural Vaan Sirappu Adhikaram-2 திருக்குறள் வான் சிறப்பு அதிகாரம்-2 பாயிரவியல் அறத்துப்பால் Pairaviyal Arathupal in Tamil !