Thirukkural Il Vazhkai Adhikaram-5 திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரம்-5 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil

0

Thirukkural Il Vazhkai Adhikaram-5 (Il Vazhkai) திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரம்-5 இல்லறவியல் அறத்துப்பால் Thirukkural Il Vazhkai Adhikaram-5 Illaraviyal Arathupal in Tamil. திருக்குறள் இல்வாழ்க்கை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-5 இல்லறவியல் அறத்துப்பால். இல்வாழ்க்கை Il Vazhkai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Il Vazhkai Chapter-5. இல்வாழ்க்கை அதிகாரம் 5. ilvazhkai thirukkural.

Thirukkural Il Vazhkai Adhikaram-5

Thirukkural Il Vazhkai Adhikaram-5

பொய்யில் புலவரான வள்ளுவனார் தன்னுடைய ஐந்தாவது அதிகாரத்தில் இல்வாழ்க்கையின் சிறப்புக்களை பற்றி கூறியிருக்கிறார். இல்லறமானது எல்லா அறங்களுக்கும் ஆதாரமாக விழங்குகின்றது. ஒருவன் தனித்து தன்னல வாழ்வு வாழாது துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறம் எனப்படும். தன் மனைவியோரு சேர்ந்து ஒருவன் வாழ்வானாகில் அவன் பெற்றோர் பிள்ளைகள் மற்றும் உறவினர்க‌ளுக்கு ஆதரவாக அவர்களுக்கு துணையாக எப்போதும் இருப்பான்.

சிறந்த முறையில் இல்லற வாழ்வு வாழ்பவன் ஏழை எளியவர்கள் மற்றும் ஆதரவு இல்லாதவர்கள் திக்கற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவனாக காணப்படுவான். ஒருவன் தன்னை நிலை நிறுத்தி ஐந்து வகையான அறநெறிகளான இறந்தவர்களை நினைவு கூறல் விருந்தினர் சுற்றத்தார் மற்றும் தேவர்களை மதித்தல் போனறவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஒருவன் தான் சேர்த்த செல்வத்தை தன் உறவுகளோடு பகிர்ந்து வாழ்ந்தால் அவனுடைய வம்சம் எப்போதும் நிலைத்து நிற்கும். தன் துணையை நேசித்து பிள்ளைகளை பேணிப்பாதுகாத்து தன் சுற்றத்தை மதித்து வாழும் இல்வாழ்க்கையானது எப்போதும் அன்புடன் நிலைத்து நிற்கும். அறத்துடன் கூடியதான இல்வாழ்க்கையை வாழ்வதால் கிடைக்கும் பயன் மற்றும் மகிழ்ச்சியை வேறு எங்கும் எவராலும் பெற முடியாது.

கடவுளை அறிய முயல்பவர்களுள் தன் மனைவியுடன் ஒழுக்கமான இல்லறம் நடத்தும் ஒருவன் முதன்மை பெறுவான்.மற்றவர்களையும் அறநெறி வாழ்வை வாழச்செய்து தானும் அறநெறியில் வாழ்பவர்களுடைய இல்லறம் தவம் செய்த ஒருவருடைய வாழ்வை விடச் சிறந்ததாகும். மற்றவர்களுடைய இழிசொல்லுக்கும் பழிப்புக்கும் ஆழாகாத வண்ணம் அறத்துடனான இல்லற வாழ்க்கை அமைவது சிறப்பாக கருதப்படுகிறது. ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும் வாழ்வானது பூமியில் நிகழ்ந்தாலும் அவ்வாறு வாழ்பவன் தேவர்களுக்கு இணையானவனாக போற்றப்படுவான்.

By: Tamilpiththan

திருக்குறள் பா: 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

kural 41: ilvaazhvaan enpaan iyalputaiya moovarkkum nallaatrin nindra thunai

திரு மு.வரதராசனார் பொருள்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

மணக்குடவர் பொருள்:
இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

கலைஞர் பொருள்:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

திருக்குறள் பா: 42
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

kural 42: thurandhaarkkum thuvvaa dhavarkkum irandhaarkkum ilvaazhvaan enpaan thunai

திரு மு.வரதராசனார் பொருள்:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

மணக்குடவர் பொருள்:
வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

கலைஞர் பொருள்:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

திருக்குறள் பா: 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

kural 43: thenpulaththaar theyvam virundhokkal thaanendraangu aimpulaththaaru ompal thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

மணக்குடவர் பொருள்:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

கலைஞர் பொருள்:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

சாலமன் பாப்பையா பொருள்:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

திருக்குறள் பா: 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

kural 44: pazhjanchip paaththun udaiththayin vaazkkai vazijengsal eannjanrum ill

திரு மு.வரதராசனார் பொருள்:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

மணக்குடவர் பொருள்:
இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

கலைஞர் பொருள்:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

சாலமன் பாப்பையா பொருள்: பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

திருக்குறள் பா: 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

kural 45: anpum aranum utaiththaayin ilvaazhkkai panpum payanum adhu

திரு மு.வரதராசனார் பொருள்:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

மணக்குடவர் பொருள்:
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

கலைஞர் பொருள்:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சாலமன் பாப்பையா பொருள்:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

திருக்குறள் பா: 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.

kural 46: araththaarrin ilvazkkai aarrin puraththarrin poo oip peruva eavan

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.

மணக்குடவர் பொருள்:
இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.

கலைஞர் பொருள்:
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

சாலமன் பாப்பையா பொருள்:
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.

திருக்குறள் பா: 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

kural 47: iyalpinaan ilvaazhkkai vaazhpavan enpaan muyalvaarul ellaam thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

மணக்குடவர் பொருள்:
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

கலைஞர் பொருள்:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

சாலமன் பாப்பையா பொருள்:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

திருக்குறள் பா: 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

kural 48: aatrin ozhukki aranizhukkaa ilvaazhkkai norpaarin nonmai utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

மணக்குடவர் பொருள்:
பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

கலைஞர் பொருள்:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

திருக்குறள் பா: 49
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

kural 49: aran enap pattadhe ilvaazhkkai aqdhum piranpazhippa thillaayin nandru

திரு மு.வரதராசனார் பொருள்:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

மணக்குடவர் பொருள்:
அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

கலைஞர் பொருள்:
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

திருக்குறள் பா: 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

kural 50: vaiyaththul vaazhvaangu vaazhpavan vaanunatyum theyvaththul vaikkap patum

திரு மு.வரதராசனார் பொருள்:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

மணக்குடவர் பொருள்:
இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

கலைஞர் பொருள்:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா பொருள்:
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Ozhukkam Udaimai Adhikaram-14 திருக்குறள் ஒழுக்கமுடைமை அதிகாரம்-14 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleதன் திருமணம் குறித்து கூறிய காஜல் தற்போது ஆண் நண்பர் தோளின் மீது ஏறி அமர்ந்த நிலையில் !