வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லற நீ கூறுதிகாண், 1
விரிந்த பெரும்புறங்கள் மேலெறிந்துன் பேயலைகளை
பொருந்து மிடையே புதைத்த பிளவுகள்தாம், 2
பாதலம்போ லாழ்ந்திருப்பப் பார்க்கவரி தாயவற்றினை
மீதலம்பி நிற்குமொரு வெள்ளைச் சிறு தோணி. 3
“ஏனடா நீ கரையி லேக்குற்று நிற்கின்றாய்,
வானளா வென்திரைகள் வாளாதான் காண்பானாய்? 4
புன்படகு காணாய் புடைக்கு மென்றன வார் திரைமேலி
துன்பமிலா தேமிதந்து துள்ளிவிளை யாடுவதே. 5
அல்லா திதுவீழ்ந் தழிந்தாலும், என்னேகாண்?
பல்லா யிரமிதுபோற் பார்மிசைவே றுள்ளனவே. 6
சூழு மெனததிர்ச்சிக் கஞ்சேல், துணிக நீ!
ஏழைக் கரையி லிருப்ப தெளிமையடா. 7
வாராய், இடுக்கணினு மாறியதை யெற்றலினும்
பாராய், நல் லின்பப் பரவசமுண் டென்பதையே.” 8
என்று முழங்கி யழைக்கும் இருங்கடலே
நன்று நீ சொல்லினை காண், நான்வருவே னிக்கணமே. 9
நின்னில் வலியேன், நினதுதிரை வென்றிடுவேன்.
முன்னி யவற்றின் முடியேறி மேலெழுங்கால், 10
வானகத்தோ டாடல் செயவாய்க்குங் காண்; மூழ்குறினும்
யான கத்தே பேரொலிக்கீ ழுள்ள தறிகுவனால். 11
அபாயமிலா திக்கரையி லார்ந்திருப்போரீசனும்
உபாய மறியாத வூமரன்றோ ஓர்ந்திடுங்கால். 12
ஆழவுயிர் மானுடனுக் கையன் அருளிப்பின்
வாழி சிவத் தன்மை யதற்கிலக்கா வைத்தனனே. 13
ஆதலாற் கோடி யபாயமிடை யூறெல்லாம்
மோது கடல்களைப்போல் முன்னரிட்டா னவ்வுயிர்க்கே. 14
துன்பமருள் செய்தான் தோல்வி தனையளித்தான்.
மன்பதையின் கால்சூழ வைத்தான் வலைத்திரளே. 15
நெற்றிமேல் மேகத்து மின்னடிகள் நேர்வித்தான்.
எற்றியெமை வீழ்த்தப் பெருங்காற் றியற்றினனே. 16
இங்கு மனிதன்வரும் இன்னலெலா மாற்றியெதிரே
பொங்கு மிடுக்கணெலாம் போழ்ந்துவெற்றி கொள்கெனவே. 17
விதிதா னெதிர்த்துவர வெல்லொணாத் தன்னுயிரை
மதியா ததிற்றாக்கி மைந்தன்விஜயம் பெறவே. 18
ஏற்றிடுவா யென்னை யிருங்கடலே நின்மீது
தோற்றிடா தேறிப்போய் வானுலகு துய்ப்பேன்யான். 19
வாரிதியாங் கோளரியே வந்துன் பிடர் பிடித்துப்
பாருன்னை யென்னில் வசப்படுத்தும் பண்பினையே. 20
அல்லது நும்மால் அகழ்ப்பா தலங்களினும்
பொல்லாக் குகையினும்யான் போய் வீழ்ந்துவிட்டாலும், 21
அங்கிருந்துன் பார மனைத்தும் பொறுத்துவித்து
மங்கி யழியும் வகைதேட வல்லேன் காண். 22
தளையறியா வார்கடலே நின்னோடு சாடி
அளவறிவே னென்றன் பெரியவுயி ராற்றலுக்கே. 23