பக்தி தோத்திரப் பாடல் Bhakthi By Subramaniya Bharathiyar

0

பக்தி (Bhakthi) தோத்திரப் பாடல் – பாரதியார் பாடல் – Bhakthi Song By Subramaniya Bharathiyar

பக்தியி Bhakthi னாலே இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும், இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும், (பக்தியி னாலே)

காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத்
தாமசப் பேயைக் கண்டு
தாக்கி மடித்திட லாகும்; எந் நேரமும்
தீமையை எண்ணி அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகி யெறிந்துபொய்ந்
நாம மில்லாதே உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்,
(பக்தியி னாலே)

ஆசையைக் கொல்வோம், புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்,
(பக்தியி னாலே)

சோர்வுகள் போகும், பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும், நற்
பார்வைகள் தோன்றும், மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும், பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும், பிணி
தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும்,
(பக்தியி னாலே)

கல்வி வளரும், பல
காரியங் கையுறும், வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும், நல்ல
ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம் மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய்
வல்லமை தோன்றும், தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம், உண்மை
(பக்தியி னாலே)

சோம்ப லழியும், உடல்
சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும், நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,
பொய்ப் பாம்பு மடியும், மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும்,
(பக்தியி னாலே)

சந்ததி வாழும், வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
‘இந்தப் புவிக்கே இங்கொர்
ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்த மலர்த்தாள் துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என்
சிந்தை யறிந்தே அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்,
(பக்தியி னாலே)

பாரதியார் பாடல்கள் தொகுப்புYoutube

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.07.2020 Today Rasi Palan 09-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleகடல் – Kadal By Subramaniya Bharathiyar பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்