அன்பிற் கினிய இந்தியா! அகில
மதங்கள், நாடுகள், மாந்தருக் கெல்லாம்
தாயே! எங்கள் உணர்வினைத் தூண்டிய
சேய் நெடுங் காலத்தின் முன்னே சிறந்தொளிர்
குருக்களை யளித்துக் குவலயங் காத்தனை!
திருக்கிளர் தெய்வப் பிறப்பினர் பலரை
உலகினுக் களித்தாய். உனதொளி ஞானம்
இலகிட நீயிங் கெழுந் தருளுகவே!
விடுதலை பெறநாம் வேண்டிநின் மறைவு
படுமணி முகத்தைத் திறந்தெம் பார்வைமுன்!
வருக நீ! இங்குள மானுடச் சாதிகள்
பொருகளந் தவிர்ந்தமை வுற்றிடப் புரிக நீ!
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக!
செற்றவர் படைகளை மனையிடந் திருப்புக!
தாயே, நின்றன் பண்டைத் தநயராம்!
மாயக் கண்ணன், புத்தன், வலிய சீர்
இராமனும், ஆங்கொரு மஹமது மினையுற்ற
விராவுபுகழ் வீரரை வேண்டுதும் இந்நாள்!
“தோன்றினேன்” என்று சொல்லி வந்தருளும்
சான்றோன் ஒருமுனி தருகநீ எமக்கே!
மோசே, கிறிஸ்து, நானக் முதலியோர்
மாசற வணங்கி மக்கள் போற்றிடத்
தவித்திடுந் திறத்தினர் தமைப் போலின்றொரு
பவித்திர மகனைப் பயந்தருள் புரிக நீ!
எம்முன் வந்து நீதியின் இயலைச்
செம்மையுற விளக்குமொரு சேவகனை அருளுக நீ.
கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடை
யாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?
உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்
விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.
மலிவு செய்யாமை; மனப்பகை யின்மை;
நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை;
தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;
ஆச்சரியப்பட உரைத்தனன் — அவையெலாம்.
வருக காந்தி! ஆசியா வாழ்கவே!
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.
ஆன்மா அதனால் ஜீவனை யாண்டு
மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்!
பாரத நாட்டின் பழம்பெருங் கடவுளர்
வீரவாள் கொடியை விரித்துநீ நிறுத்தினாய்!
மானுடர் தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவை யுருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினை நீ கனல் உறுத்துவாய்! எங்கள்
காந்தி மஹாத்மா! நின்பாற் கண்டனம்!
மாந்தருட் காண நாம் விரும்பிய மனிதனை!
நின்வாய்ச் சொல்லில், நீதி சேர் அன்னை
தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்
தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம்யாம்
எழுந்தோம்; காந்திக் கீந்தோம் எமதுயிர்.
இங்கவன் ஆவிக் கொள்கை வென்றிடவே.
அன்றைக் குணவுதான் அகப்படு மாயின்
நன்றதில் மகிழ்வோம்; விடுதலை நாடி
எய்திடுஞ் செல்வ எழுச்சியிற் களிப்போம்;
மெய்திக ழொற்றுமை மேவுவோம்; உளத்தே
கட்டின்றி வாழ்வோம்; புறத்தளைக் கட்டினை
எட்டுணை மதியா தேறுவோம்; பழம்போர்க்
கொலைத் தொழிற் கருவிகள் கொள்ளா தென்றும்
நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும்
அறிவும் கொண்டே அரும்போர் புரிவோம்;
வறியபுன் சிறைகளில் வாடினும்; உடலை
மடிய விதிப்பினும்; “மீட்டு நாம் வாழ்வோம்” என்
றிடியுறக் கூறி வெற்றி யேறி,
ஒடிபடத் தளைகள், ஓங்குதும் யாமே.