Thirukkural Solvanmai Adhikaram-65 திருக்குறள் சொல்வன்மை அதிகாரம்-65 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil சொல் வன்மை Sol Vanmai

0

Thirukkural Solvanmai Adhikaram-65 (Solvanmai) திருக்குறள் சொல்வன்மை அதிகாரம்-65 அமைச்சியல் பொருட்பால் Thirukkural Solvanmai Adhikaram-65 Amaichiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-65 அமைச்சியல் பொருட்பால். சொல்வன்மை solvanmai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Solvanmai Chapter-65.

Thirukkural Solvanmai Adhikaram-65

Thirukkural Solvanmai Adhikaram-65

திருக்குறள் பா: 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

kural 641: naanalam ennum nalanutaimai annalam yaanalaththu ulladhooum andru

திரு மு.வரதராசனார் பொருள்:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

மணக்குடவர் பொருள்: நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.

கலைஞர் பொருள்: சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

திருக்குறள் பா: 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

kural 642: aakkamung ketum adhanaal varudhalaal kaaththompal sollinkat sorvu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

மணக்குடவர் பொருள்: ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும். இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

திருக்குறள் பா: 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

kural 643: kettaarp pinikkum thakaiyavaaik kelaarum vetpa mozhivadhaam sol

திரு மு.வரதராசனார் பொருள்:
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

மணக்குடவர் பொருள்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்: நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).

திருக்குறள் பா: 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

kural 644: thiranarindhu solluka sollai aranum porulum adhaninooungu il

திரு மு.வரதராசனார் பொருள்:
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

மணக்குடவர் பொருள்: சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.

கலைஞர் பொருள்: காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்: எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

திருக்குறள் பா: 645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

kural 645: solluka sollaip piridhorsol achchollai vellunjol inmai arindhu

திரு மு.வரதராசனார் பொருள்:
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.

மணக்குடவர் பொருள்: சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.

கலைஞர் பொருள்: இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.

திருக்குறள் பா: 646
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

kural 646: vetpaththaanj chollip pirarsol payankotal maatchiyin maasatraar kol

திரு மு.வரதராசனார் பொருள்:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

மணக்குடவர் பொருள்: தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

திருக்குறள் பா: 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

kural 647: solalvallan sorvilan anjaan avanai ikalvellal yaarkkum aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

மணக்குடவர் பொருள்: ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.

கலைஞர் பொருள்: சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்: தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.

திருக்குறள் பா: 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

kural 648: viraindhu thozhilketkum gnaalam nirandhinidhu solludhal vallaarp perin

திரு மு.வரதராசனார் பொருள்:
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

மணக்குடவர் பொருள்: இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர். இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

திருக்குறள் பா: 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

kural 649: palasollak kaamuruvar mandramaa satra silasollal thetraa thavar

திரு மு.வரதராசனார் பொருள்:
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

மணக்குடவர் பொருள்: பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற – தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

திருக்குறள் பா: 650
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

kural 650: inaruzhththum naaraa malaranaiyar katradhu unara viriththuraiyaa thaar

திரு மு.வரதராசனார் பொருள்:
தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

மணக்குடவர் பொருள்: இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார். இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா பொருள்: தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Vinai Thuimai Adhikaram-66 திருக்குறள் வினைத்தூய்மை அதிகாரம்-66 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil வினைத் தூய்மை Vinai Thuimai
Next articleThirukkural Amaichu Adhikaram-64 திருக்குறள் அமைச்சு அதிகாரம்-64 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil