Thirukkural Nenjodu Kilathal Adhikaram-125 திருக்குறள் நெஞ்சொடுகிளத்தல் அதிகாரம்-125 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil

0

Thirukkural Nenjodu Kilathal Adhikaram-125 (nenjodu kadhal) திருக்குறள் நெஞ்சொடுகிளத்தல் அதிகாரம்-125 கற்பியல் காமத்துப்பால் Thirukkural Nenjodu Kilathal Adhikaram-125 karpiyal kamathupal in Tamil. திருக்குறள் பொருள் (thirukkural porul) Adhikaram-125.

Thirukkural Nenjodu Kilathal Adhikaram-125

Thirukkural Nenjodu Kilathal Adhikaram-125

திருக்குறள் பா: 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

kural 1241: ninaiththondru sollaayo nenje enaiththondrum evvanoi theerkkum marundhu

திரு மு.வரதராசனார் பொருள்:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

மணக்குடவர் பொருள்: நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.

கலைஞர் பொருள்: எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?.

சாலமன் பாப்பையா பொருள்: நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.

திருக்குறள் பா: 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

kural 1242: kaadhal avarilar aakanee novadhu pedhaimai vaazhiyen nenju

திரு மு.வரதராசனார் பொருள்:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

மணக்குடவர் பொருள்: அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

கலைஞர் பொருள்: அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

சாலமன் பாப்பையா பொருள்: என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

திருக்குறள் பா: 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

kural 1243: irundhulli enparidhal nenje parindhullal paidhalnoi seydhaarkan il

திரு மு.வரதராசனார் பொருள்:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.

மணக்குடவர் பொருள்: நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.

கலைஞர் பொருள்: பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?.

சாலமன் பாப்பையா பொருள்: நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

திருக்குறள் பா: 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

kural 1244: kannum kolachcheri nenje ivaiyennaith thinnum avarkkaanal utru

திரு மு.வரதராசனார் பொருள்:
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

மணக்குடவர் பொருள்: நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன. கொள – பார்க்க.

கலைஞர் பொருள்: நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.

சாலமன் பாப்பையா பொருள்: நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

திருக்குறள் பா: 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

kural 1245: setraar enakkai vitalunto nenjeyaam utraal uraaa thavar

திரு மு.வரதராசனார் பொருள்:
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?.

மணக்குடவர் பொருள்: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.

கலைஞர் பொருள்: நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?.

சாலமன் பாப்பையா பொருள்: நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?.

திருக்குறள் பா: 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

kural 1246: kalandhunarththum kaadhalark kantaar pulandhunaraai poikkaaivu kaaidhien nenju

திரு மு.வரதராசனார் பொருள்:
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

மணக்குடவர் பொருள்: என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

கலைஞர் பொருள்: நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?.

சாலமன் பாப்பையா பொருள்: என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

திருக்குறள் பா: 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

kural 1247: kaamam vituondro naanvitu nannenje yaano poreniv virantu

திரு மு.வரதராசனார் பொருள்:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

மணக்குடவர் பொருள்: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது. இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.

கலைஞர் பொருள்: நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

திருக்குறள் பா: 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

kural 1248: parindhavar nalkaarendru engip pirindhavar pinselvaai pedhaien nenju

திரு மு.வரதராசனார் பொருள்:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

மணக்குடவர் பொருள்: என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.

கலைஞர் பொருள்: நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.

திருக்குறள் பா: 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

kural 1249: ullaththaar kaadha lavaraal ullinee yaaruzhaich cheriyen nenju

திரு மு.வரதராசனார் பொருள்:
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

மணக்குடவர் பொருள்: என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.

கலைஞர் பொருள்: உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.

சாலமன் பாப்பையா பொருள்: என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.

திருக்குறள் பா: 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

kural 1250: thunnaath thurandhaarai nenjaththu utaiyemaa innum izhaththum kavin

திரு மு.வரதராசனார் பொருள்:
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

மணக்குடவர் பொருள்: மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

கலைஞர் பொருள்: சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

சாலமன் பாப்பையா பொருள்: நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Niraiyalithal Adhikaram-126 திருக்குறள் நிறையழிதல் அதிகாரம்-126 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil
Next articleThirukkural Uruppu Nalan Azhiththal Adhikaram-124 திருக்குறள் உறுப்புநலனழிதல் அதிகாரம்-124 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil