Thirukkural Niraiyalithal Adhikaram-126 திருக்குறள் நிறையழிதல் அதிகாரம்-126 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil

0

Thirukkural Niraiyalithal Adhikaram-126 (Nirai Azhiththal) திருக்குறள் நிறையழிதல் அதிகாரம்-126 கற்பியல் காமத்துப்பால் Thirukkural Niraiyalithal Adhikaram-126 karpiyal kamathupal in Tamil. திருக்குறள் பொருள் (thirukkural porul) Adhikaram-126.

Thirukkural Niraiyalithal Adhikaram-126

Thirukkural Niraiyalithal Adhikaram-126

திருக்குறள் பா: 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

kural 1251: kaamak kanichchi utaikkum niraiyennum naanuththaazh veezhththa kadhavu

திரு மு.வரதராசனார் பொருள்:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

மணக்குடவர் பொருள்: நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!.

கலைஞர் பொருள்: காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

சாலமன் பாப்பையா பொருள்: நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!.

திருக்குறள் பா: 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

kural 1252: kaamam enavondro kannindren nenjaththai yaamaththum aalum thozhil

திரு மு.வரதராசனார் பொருள்:
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

மணக்குடவர் பொருள்: காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.

கலைஞர் பொருள்: காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

சாலமன் பாப்பையா பொருள்: எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

திருக்குறள் பா: 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

kural 1253: cmaraippenman kaamaththai yaano kurippindrith thummalpol thondri vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

மணக்குடவர் பொருள்: காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

கலைஞர் பொருள்: எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்: என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

திருக்குறள் பா: 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

kural 1254: niraiyutaiyen enpenman yaanoen kaamam maraiyirandhu mandru patum

திரு மு.வரதராசனார் பொருள்:
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

மணக்குடவர் பொருள்: யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

கலைஞர் பொருள்: மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

சாலமன் பாப்பையா பொருள்: இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

திருக்குறள் பா: 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

kural 1255: setraarpin sellaap perundhakaimai kaamanoi utraar arivadhondru andru

திரு மு.வரதராசனார் பொருள்:
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

மணக்குடவர் பொருள்: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று. இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

திருக்குறள் பா: 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

kural 1256: setravar pinseral venti aliththaro etrennai utra thuyar

திரு மு.வரதராசனார் பொருள்:
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!.

மணக்குடவர் பொருள்: செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.

கலைஞர் பொருள்: வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.

சாலமன் பாப்பையா பொருள்: என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.

திருக்குறள் பா: 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

kural 1257: naanena ondro ariyalam kaamaththaal peniyaar petpa seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

மணக்குடவர் பொருள்: நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.

கலைஞர் பொருள்: நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

திருக்குறள் பா: 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

kural 1258: panmaayak kalvan panimozhi andronam penmai utaikkum patai

திரு மு.வரதராசனார் பொருள்:
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?.

மணக்குடவர் பொருள்: பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?. இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?.

சாலமன் பாப்பையா பொருள்: என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.

திருக்குறள் பா: 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

kural 1259: pulappal enachchendren pullinen nenjam kalaththal uruvadhu kantu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

மணக்குடவர் பொருள்: புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

சாலமன் பாப்பையா பொருள்: அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

திருக்குறள் பா: 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

kural 1260: ninandheeyil ittanna nenjinaarkku unto punarndhooti nirpem enal

திரு மு.வரதராசனார் பொருள்:
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

மணக்குடவர் பொருள்: தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

கலைஞர் பொருள்: நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

சாலமன் பாப்பையா பொருள்: கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi palan இன்றைய ராசி பலன் – 12.01.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை !
Next articleThirukkural Nenjodu Kilathal Adhikaram-125 திருக்குறள் நெஞ்சொடுகிளத்தல் அதிகாரம்-125 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil