Thirukkural Aran Adhikaram-75 திருக்குறள் அரண் அதிகாரம்-75 அங்கவியல் / அரணியல் பொருட்பால் Angaviyal / Araniyal Porutpal in Tamil

0
114

Thirukkural Aran Adhikaram-75 (Aran) திருக்குறள் அரண் அதிகாரம்-75 அங்கவியல் / அரணியல் பொருட்பால் Thirukkural Aran Adhikaram-75 Angaviyal / Araniyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-75 அங்கவியல் அரண் / அரணியல் அரண். Aran Thirukkural by Thiruvalluvar. Thirukkural Aran Chapter-75.

Thirukkural Aran Adhikaram-75

Thirukkural Aran Adhikaram-75

திருக்குறள் பா: 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

kural 741: aatru pavarkkum aranporul anjiththar potru pavarkkum porul

திரு மு.வரதராசனார் பொருள்:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

மணக்குடவர் பொருள்: வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

கலைஞர் பொருள்: பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

சாலமன் பாப்பையா பொருள்: பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

திருக்குறள் பா: 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

kural 742: manineerum mannum malaiyum aninizhar kaatum utaiya tharan

திரு மு.வரதராசனார் பொருள்:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

மணக்குடவர் பொருள்: தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.

கலைஞர் பொருள்: ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

திருக்குறள் பா: 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

kural 743: uyarvakalam thinmai arumaiin naankin amaivaran endruraikkum nool

திரு மு.வரதராசனார் பொருள்:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

மணக்குடவர் பொருள்: உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.

கலைஞர் பொருள்: உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

திருக்குறள் பா: 744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

kural 744: sirukaappir peritaththa thaaki urupakai ookkam azhippa tharan

திரு மு.வரதராசனார் பொருள்:
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

மணக்குடவர் பொருள்: காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.

கலைஞர் பொருள்: உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்: காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

திருக்குறள் பா: 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

kural 745: kolarkaridhaaik kontakoozhth thaaki akaththaar nilaikkelidhaam neeradhu aran

திரு மு.வரதராசனார் பொருள்:
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

மணக்குடவர் பொருள்: பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது. எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.

கலைஞர் பொருள்: முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்: பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

திருக்குறள் பா: 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

kural 746: ellaap porulum utaiththaai itaththudhavum nallaal utaiyadhu aran

திரு மு.வரதராசனார் பொருள்:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

மணக்குடவர் பொருள்: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.

கலைஞர் பொருள்: போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்: உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.

திருக்குறள் பா: 747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

kural 747: mutriyum mutraa therindhum araippatuththum patrar kariyadhu aran

திரு மு.வரதராசனார் பொருள்:
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

மணக்குடவர் பொருள்: சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.

கலைஞர் பொருள்: முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்: முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

திருக்குறள் பா: 748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

kural 748: mutraatri mutri yavaraiyum patraatrip patriyaar velvadhu aran

திரு மு.வரதராசனார் பொருள்:
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

மணக்குடவர் பொருள்: சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.

கலைஞர் பொருள்: முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்: கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.

திருக்குறள் பா: 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

kural 749: munaimukaththu maatralar saaya vinaimukaththu veereydhi maanta tharan

திரு மு.வரதராசனார் பொருள்:
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

மணக்குடவர் பொருள்: முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.

கலைஞர் பொருள்: போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்: போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

திருக்குறள் பா: 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

kural 750: enaimaatchith thaakiyak kannum vinaimaatchi illaarkan illadhu aran

திரு மு.வரதராசனார் பொருள்:
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.

மணக்குடவர் பொருள்: சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.

கலைஞர் பொருள்: கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.

சாலமன் பாப்பையா பொருள்: எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: