My Story! 42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா! –

0

எனக்கு கல்யாணமாகி ஏறத்தாழ 15 வருஷம் ஆகுது.18 வருஷமா வேலை பண்ணிட்டு வரேன். எம்பிஏ படிச்சு எச்.ஆர் எக்சிகியூடிவ் வேலையில என்னோட கேரியர ஆரம்பிச்சேன். சும்மாவே ஒரு பொண்ணு வேலை பாக்குற இடத்துல பிரமோஷன் வாங்குனா அதுக்கு காரணம் அவ வேற மாதிரின்னு பேசுற உலகம் இது. அதுலயும் எச்.ஆரா இருந்துட்டா போதும் அதுதான் காரணம்னு எழுதி வைக்காத குறையா பேசுவாங்க.

என் வாழ்க்கையில ஒரு பொண்ணு பிரமோஷன் வாங்குனதுக்கு, அவ மேனஜர் கூட வேற மாதிரியான உறவுல இருந்ததுதான் காரணம்னு மொட்டை கடுதாசி எழுதி போட்டு, அந்த பொண்ண வேலைய விட்டு விரட்டுனது வரைக்குமான சம்பவங்கள கடந்து வந்தவ நான். இது மத்த பொண்ணுங்க வாழ்க்கையை மட்டுமே இல்ல, என்னோட வாழ்க்கையையும் ஒரு கட்டத்துல பாதிச்சது.

ஒரே பொண்ணு!
என் வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. ஆனா, குடும்பத்துல மொத்தமும் பொண்ணுக தான். அதாவது, என் அப்பா, பெரியப்பா, அத்தை, சித்தப்பான்னு எல்லாருக்குமே பெண் குழந்தைங்க தான். என்ன எல்லாருக்கும் ரெண்டு, மூணு பெண் குழந்தைங்க. எங்க வீட்டுலே நான் ஒரே ஒரு பொண்ணு. அதனாலேயே எங்கப்பா என்ன ஒரு பையன் மாதிரி வளர்த்தாரு. கேட்டதுக்கு, எதிர்பார்த்தத்துக்கும் அதிகமான சுதந்திரம் எனக்கு கெடச்சது.

பசங்க!
எங்க ஏரியாவுல பசங்க கூட கிரிக்கெட், ஓடி பிடிச்சு, கில்லி, நொண்டினு விளையாடி சுத்திட்டு இருந்திருக்கேன். சின்ன வயசுல இருந்தே பசங்க கூட பழகுறது எனக்கு ஒன்னும் புதுசா தெரியல. அதுக்குன்னு எங்கப்பா கொடுத்த சுதந்திரத்த நான் அட்வாண்டேஜா எடுத்துக்கல. அந்த சுதந்திரத்த பாஸிட்டிவா பயன்படுத்திக்கிட்டேன்.

டெல்லி!
பேச்சுலர் டிகிரி முடிச்சதும் டெல்லில எம்பிஏ படிக்க சீட் கெடச்சது. எங்க குடும்பத்துலயே ரெண்டாவது டிகிரி, அதுவும் ஊரவிட்டு வெளியூர் போய் படிச்ச முதல் ஆளு நான்தான். நிறைய கனவுகள், எதிர்பார்ப்புகள், எதிர்கால திட்டங்களோட தான் நான் டெல்லி போனேன்.

கத்துக்கிட்டேன்!
டெல்லி எனக்கு வெறும் எம்பிஏ பாடம் மட்டும் கத்துக்கொடுக்கல… நிறைய வாழ்க்கை பாடங்களும் கத்து கொடுத்தது. உதாரணமா தேசிய அரசியல்ல இருந்து, பொண்ணுங்க எப்படி எல்லாம் இருக்கலாம், எப்படி எல்லாம் இருக்க கூடாது… வேறுபட்ட கலாச்சாரம், பல்வேறு பகுதிகள சேர்ந்த மக்களோட பழகின அனுபவம் எல்லாமே என்ன வேற ஒரு ஆளா மாத்துச்சு. முக்கியமா ஃபிட்னஸ் & யோகா.

உடல்திறன்!
நாம இந்த சமூகத்துல நல்ல இடத்துக்கு வரணும்னா மனசு உறுதியா இருந்தா மட்டும் போதாது, உடலும் உறுதியா இருக்கணும்னு என்னோட பஞ்சாபி தோழி ஒருத்திக்கிட்ட இருந்த கத்துக்கிட்டேன். உடல் பயிற்சி செய்யிறது, யோகா செய்யிறதுனு எனக்குள்ள நிறைய மாற்றங்கள் மற்றும் நல்ல உடற்திறன் அமைய காரணமா இருந்தது நான் டெல்லியில இருந்த அந்த ரெண்டு வருஷம் தான்.

சுகப்பிரசவம்!
இன்னிக்கி சொன்னா பல பொண்ணுக வாயடைச்சு போவாங்க… ஆனா, இது தான் உண்மை. என்னோட ரெண்டு பிரசவமும் சுகப்பிரசவம் தான். அதுக்கு முக்கிய காரணம் என்னோட உடற்திறன். இதை தான் நான் என்னோட தோழிகளுக்கும், என்னோட ஜூனியர்ஸ், கூட வர்க் பண்ற பொண்ணுகளுக்கு நிறையா அட்வைஸ் பண்ணுவேன். நிறைய பேர் தேவையே இல்லாம பயந்து சுகப்பிரசவம் ஆகுற சூழல் இருந்தும் சிசேரியன் பண்ணிக்கிறாங்க. இவங்க பயம் தான் நிறைய பிரைவேட் ஹாஸ்பிடல் பயனடைய காரணமா இருக்கு.

அழகு!
ஒரு பொண்ணு கல்யாணம் ஆகுற வரைக்கும் அழகா இருந்தா இந்த சமூகத்துக்கு எந்த பிரச்னையும் இல்ல. அதே பொண்ணு முதல் குழந்தை பிறகும் அழகா இருந்தா… கொஞ்சம் பொறாமைப்படும். அதுவே அந்த பொண்ணு ரெண்டாவது குழந்தையும் பிறந்த பிறகு அழகா இருந்தா… ஆச்சரியமா பேசும். அதுவே, அந்த ரெண்டு குழந்தைகளுக்கும் பத்து வயசாகியும் அந்த பொண்ணு அழகா இருந்தா… அவள மேனாமினுக்கின்னு பொண்ணுங்களே பேசுவாங்க. பொண்ணுங்களே பேசுவாங்கன்னா ஆம்பளைங்கள சொல்லவா வேணும்.

பேச்சு!
ஏறத்தாழ கடந்த ஆறேழு வருஷமா இந்த பேச்சு நான் போற இடமெல்லாம் கேட்டிருக்கேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு. என் கணவர் கிட்ட சொல்லி அழுதிருக்கேன். ஆனா, அவரோட ஆறுதல் மற்றும் என்ன மனா உறுதி மட்டும் தான் என்ன இன்னிக்கும் சமூகத்துலயும், அலுவலகத்துலயும் ஒரு நல்ல இடத்துல இருக்க வெச்சிருக்கு.

கடுதாசி தான் வரல!
ஏறத்தாழ இந்த 18 வருஷ கெரியர்ல.. என்னோட கடின உழைப்பால மேனேஜர் அளவுக்கு உயர்ந்திருக்கேன். ஆனா, என்னோட ஆபீஸ்ல நான் இந்த இடத்துக்கு வரதுக்கு நான் சி.இ.ஓ கூட ஒத்துழைச்சு போனது தான் காரணம்னு பேசுறாங்க. பேசுறவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. இதுவே, அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு வேலை வேணும், இல்ல என் மூலமா ஏதாவது ஆதாயம் வேணும்னா பல் இழிச்சுட்டு முன்னாடி வந்து நிப்பாங்க.

தைரியமா இருங்க!
இது எனக்கு மட்டும் நடக்குற விஷயமோ, என் ஆபீஸ்ல மட்டும் நடக்குற விஷயமோ இல்ல. ஏன் இத படிக்கிற பொண்ணுக, ஆம்பளைங்க கூட இத கண் கூட பார்த்திருக்கலாம். உங்க வீட்டு பொண்ணுகள கூட சிலர் இப்படியான வன்முறைக்கு ஆளாக்கி அவங்க வளர்ச்சியை தடுத்திருக்கலாம். திறமையால் போட்டிப்போட முடியாட்டி சிலர் இப்படி சூழ்ச்சி பண்ண பார்ப்பாங்க. அந்த சகுனிகளுக்கு பயந்து நீங்க போர்க்களத்த விட்டு விலகிடாதீங்க. வெற்றி மட்டுமே நம்ம குறிக்கோளா இருக்கணும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகணுக்கால் வலி குணமாக இதை வெற்றிலை சாறில் இளம் சூடாக்கி காலில் பூசுங்கள்!
Next articleபடுத்து தூங்க இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க!