Thirukkural Maanam Adhikaram-97 திருக்குறள் மானம் அதிகாரம்-97 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil

0

Thirukkural Maanam Adhikaram-97 (Manam) திருக்குறள் மானம் அதிகாரம்-97 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Thirukkural Maanam Adhikaram-97 Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-97 ஒழிபியல் மானம் / குடியியல் மானம். Maanam Thirukkural by Thiruvalluvar. Thirukkural Maanam Chapter-97.

Thirukkural Maanam Adhikaram-97

Thirukkural Maanam Adhikaram-97

திருக்குறள் பா: 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

kural 961: indri amaiyaach chirappina aayinum kundra varupa vital

திரு மு.வரதராசனார் பொருள்:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

மணக்குடவர் பொருள்: இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.

கலைஞர் பொருள்: கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

திருக்குறள் பா: 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

kural 962: seerinum seeralla seyyaare seerotu peraanmai ventu pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

மணக்குடவர் பொருள்: தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.

கலைஞர் பொருள்: புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.

சாலமன் பாப்பையா பொருள்: புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

திருக்குறள் பா: 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

kural 963: perukkaththu ventum panidhal siriya surukkaththu ventum uyarvu

திரு மு.வரதராசனார் பொருள்:
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

மணக்குடவர் பொருள்: செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.

கலைஞர் பொருள்: உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

திருக்குறள் பா: 964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

kural 964: thalaiyin izhindha mayiranaiyar maandhar nilaiyin izhindhak katai

திரு மு.வரதராசனார் பொருள்:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

மணக்குடவர் பொருள்: தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.

கலைஞர் பொருள்: மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

சாலமன் பாப்பையா பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

திருக்குறள் பா: 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

kural 965: kundrin anaiyaarum kundruvar kundruva kundri anaiya seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

மணக்குடவர் பொருள்: மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.

கலைஞர் பொருள்: குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

திருக்குறள் பா: 966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

kural 966: pukazhindraal puththelnaattu uyyaadhaal enmatru ikazhvaarpin sendru nilai

திரு மு.வரதராசனார் பொருள்:
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

மணக்குடவர் பொருள்: இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி? இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.

கலைஞர் பொருள்: இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.

சாலமன் பாப்பையா பொருள்: உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.

திருக்குறள் பா: 967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

kural 967: ottaarpin sendroruvan vaazhdhalin annilaiye kettaan enappatudhal nandru

திரு மு.வரதராசனார் பொருள்:
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

மணக்குடவர் பொருள்: ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.

கலைஞர் பொருள்: தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

சாலமன் பாப்பையா பொருள்: இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

திருக்குறள் பா: 968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

kural 968: marundhomatru oonompum vaazhkkai perundhakaimai peetazhiya vandha itaththu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

மணக்குடவர் பொருள்: தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ. பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.

கலைஞர் பொருள்: சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?.

திருக்குறள் பா: 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

kural 969: mayirneeppin vaazhaak kavarimaa annaar uyirneeppar maanam varin

திரு மு.வரதராசனார் பொருள்:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

மணக்குடவர் பொருள்: ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.

கலைஞர் பொருள்: உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

திருக்குறள் பா: 970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

kural 970: ilivarin vaazhaadha maanam utaiyaar olidhozhudhu eththum ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

மணக்குடவர் பொருள்: இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.

கலைஞர் பொருள்: மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

சாலமன் பாப்பையா பொருள்: தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Perumai Adhikaram-98 திருக்குறள் பெருமை அதிகாரம்-98 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil
Next articleThirukkural Marunthu Adhikaram-95 திருக்குறள் மருந்து அதிகாரம்-95 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil