Thirukkural Perumai Adhikaram-98 திருக்குறள் பெருமை அதிகாரம்-98 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil

0

Thirukkural Perumai Adhikaram-98 (Perumai) திருக்குறள் பெருமை அதிகாரம்-98 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Thirukkural Perumai Adhikaram-100 Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-98 ஒழிபியல் பெருமை / குடியியல் பெருமை. Perumai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Perumai Chapter-98.

Thirukkural Perumai Adhikaram-98

Thirukkural Perumai Adhikaram-98

திருக்குறள் பா: 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

kural 971: olioruvarku ulla verukkai ilioruvarku aqdhirandhu vaazhdhum enal

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

மணக்குடவர் பொருள்: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.

கலைஞர் பொருள்: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

திருக்குறள் பா: 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

kural 972: pirappokkum ellaa uyirkkum sirappovvaa seydhozhil vetrumai yaan

திரு மு.வரதராசனார் பொருள்:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

மணக்குடவர் பொருள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

கலைஞர் பொருள்: பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

சாலமன் பாப்பையா பொருள்: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

திருக்குறள் பா: 973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

kural 973: melirundhum melallaar melallar keezhirundhum keezhallaar keezhal lavar

திரு மு.வரதராசனார் பொருள்:
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

மணக்குடவர் பொருள்: மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

கலைஞர் பொருள்: பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

திருக்குறள் பா: 974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

kural 974: orumai makalire polap perumaiyum thannaiththaan kontozhukin untu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

மணக்குடவர் பொருள்: கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போலப் பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக் கொண்டொழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.

கலைஞர் பொருள்: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.

திருக்குறள் பா: 975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

kural 975: perumai yutaiyavar aatruvaar aatrin arumai utaiya seyal

திரு மு.வரதராசனார் பொருள்:
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

மணக்குடவர் பொருள்: பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.

கலைஞர் பொருள்: அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

திருக்குறள் பா: 976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்
கொள் வேம் என்னும் நோக்கு.

kural 976: siriyaar unarchchiyul illai periyaaraip penikkol vemennum nokku

திரு மு.வரதராசனார் பொருள்:
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

மணக்குடவர் பொருள்: சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.

கலைஞர் பொருள்: பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.

திருக்குறள் பா: 977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

kural 977: irappe purindha thozhitraam sirappundhaan seeral lavarkan patin

திரு மு.வரதராசனார் பொருள்:
சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

மணக்குடவர் பொருள்: செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம். சீரல்லவர்- பெரியரல்லர்.

கலைஞர் பொருள்: சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

சாலமன் பாப்பையா பொருள்: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

திருக்குறள் பா: 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

kural 978: paniyumaam endrum perumai sirumai aniyumaam thannai viyandhu

திரு மு.வரதராசனார் பொருள்:
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

மணக்குடவர் பொருள்: பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.

கலைஞர் பொருள்: பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

திருக்குறள் பா: 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

kural 979: perumai perumidham inmai sirumai perumidham oorndhu vital

திரு மு.வரதராசனார் பொருள்:
பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

மணக்குடவர் பொருள்: பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.

கலைஞர் பொருள்: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

திருக்குறள் பா: 980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

kural 980: atram maraikkum perumai sirumaidhaan kutrame koori vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

மணக்குடவர் பொருள்: பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.

கலைஞர் பொருள்: பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 19.01.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை !
Next articleThirukkural Maanam Adhikaram-97 திருக்குறள் மானம் அதிகாரம்-97 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil