Thirukkural mei unarthal Adhikaram-36 திருக்குறள் மெய்யுணர்தல் அதிகாரம்-36 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil

0

Thirukkural Mei Unarthal Adhikaram-36 (mei unarthal) திருக்குறள் மெய்யுணர்தல் அதிகாரம்-36 துறவறவியல் அறத்துப்பால் Thirukkural Mei Unarthal Adhikaram-36 Thuraviyal Arathupal in Tamil. திருக்குறள் அவாவறுத்தல் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-36 துறவறவியல் அறத்துப்பால். மெய்யுணர்தல் Mei Unarthal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Mei Unarthal Chapter-36. மெய் உணர்தல் அதிகாரம் 36.

Thirukkural Mei Unarthal Adhikaram-36

Thirukkural Mei Unarthal Adhikaram-36

திருக்குறள் பா: 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

kural 351: porulalla vatraip porulendru unarum marulaanaam maanaap pirappu

திரு மு.வரதராசனார் பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

மணக்குடவர் பொருள்:
பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

கலைஞர் பொருள்:
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.

சாலமன் பாப்பையா பொருள்:
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

திருக்குறள் பா: 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

kural 352: irulneengi inpam payakkum marulneengi maasaru kaatchi yavarkku

திரு மு.வரதராசனார் பொருள்:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

மணக்குடவர் பொருள்:
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

கலைஞர் பொருள்:
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

திருக்குறள் பா: 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

kural 353: aiyaththin neengith thelindhaarkku vaiyaththin vaanam naniya thutaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்

மணக்குடவர் பொருள்:
மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

கலைஞர் பொருள்:
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

திருக்குறள் பா: 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

kural 354: aiyunarvu eydhiyak kannum payamindre meyyunarvu illaa thavarkku

திரு மு.வரதராசனார் பொருள்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

மணக்குடவர் பொருள்:
மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.

கலைஞர் பொருள்:
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

திருக்குறள் பா: 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

kural 355: epporul eththanmaith thaayinum apporul meypporul kaanpadhu arivu

திரு மு.வரதராசனார் பொருள்:
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

மணக்குடவர் பொருள்:
யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும் அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம். மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.

கலைஞர் பொருள்:
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

திருக்குறள் பா: 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

kural 356: katreentu meypporul kantaar thalaippatuvar matreentu vaaraa neri

திரு மு.வரதராசனார் பொருள்:
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

மணக்குடவர் பொருள்:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

கலைஞர் பொருள்:
துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

திருக்குறள் பா: 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

kural 357: orththullam ulladhu unarin orudhalaiyaap perththulla ventaa pirappu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

மணக்குடவர் பொருள்:
உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.

கலைஞர் பொருள்:
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா

திருக்குறள் பா: 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

kural 358: pirappennum pedhaimai neengach chirappennum semporul kaanpadhu arivu

திரு மு.வரதராசனார் பொருள்:
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

மணக்குடவர் பொருள்:
பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

கலைஞர் பொருள்:
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

திருக்குறள் பா: 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

kural 359: saarpunarndhu saarpu ketaozhukin matrazhiththuch chaardharaa saardharu noi

திரு மு.வரதராசனார் பொருள்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

மணக்குடவர் பொருள்:
தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். சார்பு – வினைச்சார்பு. கெட ஒழுகல் – காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.

கலைஞர் பொருள்:
துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

திருக்குறள் பா: 360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

kural 360: kaamam vekuli mayakkam ivaimundran naamam ketakketum noi

திரு மு.வரதராசனார் பொருள்:
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

மணக்குடவர் பொருள்:
ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம். வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.

கலைஞர் பொருள்:
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Avaavaruththal Adhikaram-37 திருக்குறள் அவாவறுத்தல் அதிகாரம்-37 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil
Next articleThirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil