3 வருடங்களின் பின் எடுக்கப்பட்ட 42 சாட்சிகள்! யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை!

0

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 42 சாட்சிகளும் மன்றினால் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 20 சாட்சிகள் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி உள்ளனர்.

இதன்போது, பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வரும் நவம்பர் 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என பதில் நீதிவான் அறிவித்தார்.

அன்றைய தினம் மன்றினால் அழைக்கப்பட்ட அனைத்து சாட்சிகளையும் முன்னிலையாகுமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு கொக்குவில் – குளப்பிட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸார் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டு ஐவரும் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும், 5 பேரில் மூவர் வழக்கிலிருந்து விடுதலையாகினர்.

மேலும் இருவருக்கு எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக நவம்பர் 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என பதில் நீதிவான் அறிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாழ்க்கையில் கடந்து வந்த சோகமான பாதைகள்! பிக்பாஸ் ரித்விகாவா இது?
Next articleமஹத்தைப் பற்றி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ஐஸ்வர்யா கூறியதை பாருங்க!