சளி, சைனஸ், மூக்கடைப்பு, ரத்தம் வடிதல், மூக்கில் சதை, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூக்கில் புண், நோய்த் தொற்று!

0

முகத்தை அழகாகக் காட்டுவதில் மூக்குக்குத்தான் முதல் பங்கு. சுவாசிக்கும் காற்றை உடலின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாற்றி, நுரையீரலுக்கு அனுப்பும் பணியைச் செய்வதுடன், மணத்தை நுகரும் கருவியாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன.

இவை முக்கியமாக சுவாச மண்டலத்தைத் தாக்குகின்றன. இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த் தொற்று ஏற்படுகிறது. குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது, சளி, மூக்கடைப்பு, தும்மல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதனால் வாய் வழியே சுவாசிக்க நேரிடும். அப்போதும், மூச்சுக் குழாய்க்குள் கிருமிகள் எளிதில் நுழைந்து மூச்சுவிடுவதற்கே கஷ்டப்பட நேரிடும்.

சளி
நுரையீரல் தனக்கே உரிய எதிர்ப்பு சக்தி மூலம் கிருமிகளை எதிர்த்துப் போராடும். சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகளுக்கு கிருமிகளின் ஆக்கிரமிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

இதனால், மூச்சுக் குழாய்க்குள் அழற்சி உண்டாகி, அங்கு நீர் கோத்து சளி பிடிக்கும். காய்ச்சல், இருமலும் வரும். இதற்கு மூச்சுக் குழாய் அழற்சி என்றுபெயர்.

இந்த தொந்தரவு ஒரு வாரம் வரை நீடிக்கும். இதனால் அதிக ஆபத்து இல்லை. நோயுள்ள குழந்தைக்கு அடிக்கடி சூடான வெந்நீரை தரவேண்டும். சத்துள்ள உணவுகளை வெதுவெதுப்பாகக் கொடுக்கவேண்டும்.

ஆவி பிடிக்கவேண்டும். இவற்றுடன் உரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதன் மூலம் நோய் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.

சைனஸ்
மூக்கின் அருகில் இருக்கும் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கடைப்பு ஏற்படுவதே சைனஸ். மூக்கில் உள்ள சளியால் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது தலைவலி, மூக்கில் சீழ் வடிதல், தொண்டையில் வீக்கம், காய்ச்சல், காது வலி ஏற்படும். லேசர் கருவி மூலம் எண்டோஸ்கோபிக் சிகிச்சை அளிக்கலாம்.

மூக்கில் ரத்தம் வடிதல், மூக்கில் சதை வளர்வது, மூக்கினுள் உள்ள ரத்தக் குழாய் உடைதல், சைனஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரத்தம் வடியலாம்.

அதிக வேலை பளு, மூக்கில் காயம், வேகமாக மூக்கை சிந்துதல் போன்ற காரணங்களால் மூக்கில் ரத்தம் வடியலாம்.

மூக்கில் ரத்தம் வடிந்தால், தலையைச் சற்றே முன்பக்கமாகச் சாய்த்துக்கொள்ளவேண்டும். இதனால், ரத்தம் தொண்டைக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

மூக்கைப் பிடித்தபடி, வாய்வழியாக சில மணித்துளிகள் சுவாசிக்க வேண்டும்.
ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியை மூக்கின் மேல் வைக்கலாம்.

இது ரத்தம் வடிவதைத் தடுக்கும். நாசித் துவாரத்திலிருந்து ரத்தம் வடிந்தால் குறைந்தது 10 நிமிடங்கள் இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படியும் விடாமல் ரத்தம் வடிந்தால், மூக்கில் பஞ்சை வைத்து, ரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்தி, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மூக்கில் சதை, தூசு நிறைந்த காற்று, டீசல் புகை போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டு மூக்கில் ‘பாலிப்ஸ்’ எனப்படும் சதை வளரும். இதனால், மூச்சுத் திணறல் வரலாம். நுகர்வுத் தன்மை பாதிக்கப்படும். அறுவை சிகிச்சை மூலம் ‘பாலிப்ஸ்’-ஐ அகற்றிவிடலாம். மாத்திரைகள் மூலமாக அலர்ஜியைக் கட்டுப்படுத்தலாம். தும்மல் யாருக்கு எப்போது தும்மல் வரும் என்று சொல்லமுடியாது.

தும்மல் வந்தாலும் நொடியில் நின்றுவிடும். தூசியைத் தட்டும்போது, உதறும்போது, ஒட்டடை அடிக்கும்போது, மாசுபடிந்த சாலையைக் கடக்கும்போது தூசியின் காரணமாகத் தும்மல் வரும்.

மேலும், காரப் பொருளை வதக்கும்போதோ, காரமான அல்லது சூடான உணவைச் சாப்பிடும்போதோ தும்மல் வரலாம்.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் தூசுகள், காரம், கிருமிகள் போன்றவை மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழையும்போது, ‘ஹிஸ்டமைன்’ என்ற தும்மல் சுரப்பியைத் தூண்டும். இதனால் தும்மலின்போது நீர்த்துளிகளும் வெளியேறும். அது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கான ஒரு செயல்தானே தவிர, ஒரு நோய் கிடையாது.

தும்மல் வரும்போது அடக்கவே கூடாது. அதுவே நோயாக மாறிவிடலாம். தும்மல் வரும்போது தும்முவதுதான் அதற்கான நல்ல சிகிச்சையே. மூக்கைப் பாதுகாக்க வழிகள் தூசுகள் நிறைந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுவது நல்லது.

இளம் காலை நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்கலாம்.

முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு செல்லலாம்.

ஈரமான இடத்தில் நிற்பதைத் தவிர்க்கவேண்டும். மூக்கை பலமாக சிந்தக் கூடாது.

டாக்டர் பரிந்துரைக்காத எந்த மருந்துகளையும் மூக்கில் விடக்கூடாது. இதனால் மூக்கு அதிகமாக அடைத்துவிடக்கூடும்.

அடிக்கடி மூக்கினுள் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும்.

கர்ச்சீப் முனையைச் சுருட்டி மூக்கினுள் நுழைத்து செயற்கையாகத் தும்மலை வரவழைக்கக்கூடாது.

மூக்குப்பொடி போடுவது கூடாது.

நார்ச்சத்து நிறைந்த பழங்கள், முளைக்கட்டிய பயறுகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.

சைனஸ் அலர்ஜி இருப்பவர்கள் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிக்கலாம்.

மிதமான சூட்டில் சூப் குடிக்கலாம். சளி இளகி, எளிதில் வெளியேறும்.

ஜலதோஷம் என்றால், மூக்கு சிந்தும்போது அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம்.

சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும் பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் நல்ல பலனைத் தரும். (மூலி)கை வைத்தியம்
ஒரு கைப்பிடி அருகம்புலை அரைத்துச் சாறு எடுத்துக் குடித்து வந்தால் சளித் தொல்லை இருக்காது.

சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு தொல்லை இருப்பவர்கள் கறந்த பால், தயிர், வாழைப்பழம், முட்டை இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

துளசிச் சாறு அல்லது தூதுவளைச் சாறை தினமும் ஒரு சின்ன டம்ளர் அளவுக்குக் குடித்து வந்தால் சளி, இருமல், நெஞ்சு கபம், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் சரியாகும். மேலும் தினமும் இரண்டு துளசி இலையை மெல்லலாம்.

சளி, மூச்சுத் திணறல் சீராவதற்கு ஒரு தக்காளியைச் சாறாக்கி, அதில் இரண்டு துளி தேன் கலந்து அருந்தலாம்.

பழுத்த நேந்திரம் பழத்தைத் தினமும் பாதி அளவு இரவில் சாப்பிட்டு வந்தால் மூச்சு சீராகும்.

சளி இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் மூலிகை டீ, துளசி காபி, தூதுவளை சூப், எள்ளு லட்டு, முருங்கைக் கீரை அடை, முருங்கைக்காய் பொரியல், கொத்தமல்லி தோசை, புதினா அவல் மிக்ஸ், பேரீட்சை ஜாம், தூதுவளை தோசை, அடை, வில்வ சூப் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் பெறலாம்.

கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும்.

மூக்கில் புண் இருந்தால், மஞ்சள் கிழங்கைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து, வேப்ப எண்ணெயில் குழைத்துத் தடவ புண் ஆறும்.

சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டவுடன் தொண்டையில் தங்கி, சளி ஏற்படலாம். பழம் சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் பருகினால் சளி ஏற்படாது.

சப்போட்டா பழ ஜூஸுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சளித் தொல்லை இருக்காது.

உடல் சூட்டினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்க, மாதுளம்பழச் சாறுடன் அருகம்புல் சாறை சம அளவு கலந்து குடிக்கவேண்டும்.

கொய்யாப் பழம் சளித்தொல்லையை விரட்டும் தன்மை கொண்டது. வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழம் சாப்பிடலாம்.

ரோஜா பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்ள மூச்சு இரைப்பு நீங்கும். ரோஜாவை முகர்ந்தாலே, சளி, மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்க முடியும்.

Previous articleரெண்டு நாளா காது வலியா இருக்கு, எச்சில் கூட முழுங்க முடியலை, காது அடைப்பு, காது இரைச்சல், சீழ் வடிதல்!
Next articleகொரோனா போன்ற‌ நுண்கிருமி தாக்குதலால் தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்!