கொரோனா போன்ற‌ நுண்கிருமி தாக்குதலால் தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்!

0

தொண்டையைப் பாதுகாக்க வழிகள் மூலிகை வைத்தியம்

அதிக சூடு, குளிர்ந்த பானங்களைத் தவிர்க்கவேண்டும்.

தினமும் தூங்கும்போது சூடான பாலில் மஞ்சள்ள், மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

சப்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

வெற்றிலை போடும் பழக்கம்கூட குரல்வளத்தைத் தக்கவைக்கும். தொண்டையில் கிருமி பாதிக்காமல் காக்கும்.

சிகரெட், பான்பராக், பாக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புகைபிடிக்கும் நபர்களின் அருகில் நிற்பதும் தொண்டையை பாதிக்கும்.
தொடர்ந்து பேசும்நிலை ஏற்பட்டால், இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும்.

தொண்டையில் சளி இருந்தால், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். தொண்டைக்கு இதம் அளித்து சளி வெளியேற உதவும்.

கரகரப்பு சளி, தொண்டைக்கட்டு நீங்க மா இலையைச் சுட்டு தேனில் வதக்கி சாப்பிட வேண்டும்.

பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கு இதமாக இருக்கும். குரல் வளம் பெருகும்.

குழந்தைகளுக்கு ஃப்ரிட்ஜில் வைத்த பழங்களைக் கொடுக்கவே கூடாது.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர தொடர் விக்கலையும் விரட்டிவிடலாம்.

இஞ்சிச் சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.

மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால், இருமல், காய்ச்சல் குணமாகும். புளிக்குழம்பைத் தவிர்க்கவும்.

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி, மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்கள் குறையும்.

சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தண்ணீரில் நான்கு துளசி இலையை தினமும் போட்டுக் குடிக்கத் தொடர் இருமல் நீங்கும்.

சுடுதண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். சளி, மண்டைக் குத்தல் குணமாகும்.

மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச்சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடி போகும்.

பசும்பாலில் காய்ந்த திராட்சையை பசும்பாலில் ஊற வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சளி இருமல் போகும். அன்னாசிப் பழச் சாறுடன் மிளகுத் தூள், தேன் கலந்து சாப்பிடலாம்.

விளாம் மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இழப்பு, வாய் கசப்பு நீங்கும்.

வறட்டு இருமலைப் போக்க, துளசியுடன் இஞ்சி சேர்த்து அரைத்து மாத்திரையாக உருட்டி காயவைத்து தேனில் கலந்து குடிக்கலாம்.

மாந்தளிரை நன்றாகக் காய வைத்து பொடித்து, அதில் 3 சிட்டிகை தண்ணீரில் கலந்து குடித்தால் தொண்டை தொடர்பான நோய் நெருங்காது. குரல் வளம் பெருகும்.

மா இலைச் சாறுடன் அதே அளவு தேன், பால், பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டைக் குரலும் இனிமையாக மாறும்.

தொண்டைப் புண், எரிச்சல் நீங்க, மல்லிகை இலையை நெய்யில் வறுத்து துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

தினமும் காதுகளில் சோப்பு போட்டு சுத்தம் செய்யவேண்டும். வயதானவர்களுக்கு காதுகளை சரிவர சுத்தம் செய்ய கொள்ள முடியாமல் போகலாம். இதனால், காது ஓரம் அழுக்கு அடைபோல் படிந்துவிடும். எடுப்பது மிகவும் கடினம். ஒரு காட்டன் பஞ்சில் எண்ணெய், தோய்த்து, காது வெளிப்புற இடுக்குகளில் ஒற்றி எடுத்து, மிதமான வெந்நீரில் சுத்தம் செய்தால், அழுக்கு மறைந்து காது பளிச்சென மின்னும்.

சிலரது காதின் தோல் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும். இவர்கள் தினமும் மாய்ச்சரைசர் க்ரீம் தடவி வரலாம். பஞ்சு போல் காது மெல்லியதாகும்.

காதில் சிலருக்கு ஆங்காங்கே முடி இருக்கும். இதுவும் நல்லதுதான். தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

காது திடீரெனக் கேட்கவில்லை எனில், 24 மணி நேரத்துக்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது கேட்புத் திறனையே பாதித்துவிடும்.

காது கேட்கவில்லை என்பதற்காக கடைகளில் விற்கும் ஹியரிங் எய்டை நாமே வாங்கி பயன்படுத்துவது கூடாது. மருத்துவரிடம் காட்டி, செவித்திறன் குறைவு அளவை அறிந்த பிறகே அதற்கேற்ற ஹியரிங் எய்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.

அதிக எண்ணெய் சருமம் மற்றும் மூக்கின் மேல் அழுக்குப் படியும்போது பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் வரும். இதற்கு நல்ல தீர்வு ஆவி பிடிப்பதுதான். கொதிக்கும் வெந்நீரில் வெட்டிவேரைப் போட்டு நன்றாக ஆவிப் பிடிப்பதன் மூலம் மூக்கு சரும துளை பெரிதாகும். ஒரு காட்டன் பஞ்சினால் துடைத்து எடுக்கலாம்.

பெரியவர்கள் மூக்கு சளிக்காகப் பயன்படுத்தும் துண்டை குழந்தைகள் தொடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு சட்டென கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

சிலர், இருமல் வந்தால் உடனடியாக கடையில் இருமல் மருந்தைக் கேட்டு வாங்கி அளவுத் தெரியாமல் குடிப்பார்கள். குழந்தை இருமும் போதும் ஒரு ஸ்பூன் கொடுப்பார்கள். இது பெரும் ஆபத்து. இருமல் மருந்து எதுவானாலும், மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வாங்கக் கூடாது.

ஆசிரியர்கள், பாடகர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள், டிரில் மாஸ்டர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தொழிலையே பெரும் கேள்விக்குறி ஆக்கிவிடுவது, அவர்களின் குரல் பாதிப்புதான். மோஸ்ட் யூஸ், ஓவர் யூஸ், அப்யூஸ் என மூன்று காரணங்களால் குரலில் பாதிப்பு ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு 20 வருடமாக ஆசிரியைப் பணியில் இருப்பவருக்கு தங்கள் குரல் ஆண் குரலாக மாறலாம். அதிகம் கத்தி கத்தி, தொண்டை சோர்வுற்று ‘குரல் நாண் மொட்டுக்கள்’ அடிபட்டு, தேய்ந்து போகலாம். நோய்த் தொற்று ஏற்படலாம். இதற்கு அறுவைசிகிச்சை செய்தாலும் திரும்பவும் வர வாய்ப்புகள் அதிகம்.

டான்சில்: இது தொண்டையில் ஏற்படும் பிரச்னை. நுண்கிருமி தாக்குதலால் தொண்டைச் சதையில் சீழ் கோத்துக் காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். தொற்று பரவும்போது டான்சில்ஸ் வீங்கும். இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தக்க சமயத்தில் சிகிச்சை பெற்றால் மருந்துகளால் சரிசெய்துவிடமுடியும். டான்சில் முற்றிய நிலையில், சீழ் பிடித்து செப்டிக் ஆன புரையேறிய திசுக்களை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டியிருக்கும்.

அடினாய்டு சதை வளர்ச்சி: மூக்கில் உள்ள திசுக்களின் அபரிமித வளர்ச்சி காரணமாக அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு ஏற்பட்டு வாயில் மூச்சு விடுதல், காதில் சீழ் கோத்தல், காது கேளாமை குறட்டை மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால், மூளை மற்றும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். அறுவை சிகிச்சை மூலம் அடினாய்டு சதை வளர்ச்சியை நீக்க முடியும்.

குரல் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குரல்வளை நோயின் அறிகுறிகள்.

குரல் நாண் பாதிக்கப்பட்டால் குரல் நாண் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இந்தச் சிகிச்சைக்குப் பின் பேச்சுப் பயிற்சி அளிப்பதன் மூலம் நல்ல குரலைப் பெற முடியும். குறட்டை ஈ.என்.டி. தொடர்பான பிரச்னைதான் இது. குறட்டையால் தம்பதிகளே பிரிந்து போன சம்பவங்களும் உண்டு.

மூக்கு முதல் தொண்டை வரை இதன் பாதிப்பு இருக்கும். மூக்கடைப்புதான் இதற்கு முக்கிய காரணம்.

மூச்சு உள்ளே போய் வெளியே வருவது தடைப்படுகிறது. இந்த அதிர்வினால் உள்நாக்கும் தடிக்கும்.

பலரும் குறட்டையை நோயாக நினைப்பதில்லை. லேசான அளவில் குறட்டை விடும்போது பிரச்னையில்லை. ஆனால், குறட்டையின் அளவு அதிகரிக்கும்போது அது ஒரு நோயாகி விடும்.

அதிக உடல் எடை, கழுத்துப் பகுதியில் அதிக சதை, சைனஸ் தொல்லை, மூக்கு, உள் நாக்கு, தொண்டைப் பகுதியில் பிரச்னை, ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டைப் பிரச்னை ஏற்படும்

குறட்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகலில் எப்பவும் தூக்கம் வரும். மதியம் சாப்பிடும்போது, வண்டி ஓட்டும்போதுகூட தூக்கம் வரும். பேசிக்கொண்டே இருக்கும்போது தூங்கிவிடுவார்கள். சிலசமயம் இரவு தூக்கத்தில் மூச்சுவிடவும் மறப்பது உண்டு. இதனால் தூங்கக்கூட பயப்படுவார்கள். இதனால் தூக்கம் கெடலாம்.
எப்போதும் ஒருவித சோர்வு, அசதி, மறதி, கோபம், எரிச்சல், உணர்ச்சிவசப்படுதல், மன உளைச்சல் இருக்கும்.

இதைப் போக்க உடல் எடையைக் குறைக்கவேண்டும். மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளைப் பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் சிகிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்துவிடலாம். சுவாச அடைப்பைச் சரி செய்துவிட்டால் ஆரோக்கியமான, ஆழ்ந்த தூக்கத்தையும் தெளிவான மனநிலையையும் உற்சாகத்தையும் பெறலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசளி, சைனஸ், மூக்கடைப்பு, ரத்தம் வடிதல், மூக்கில் சதை, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மூக்கில் புண், நோய்த் தொற்று!
Next articleகுருபெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: தனுசு ராசியினரே நீங்கள் இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்