வாடகைத்தாய் மனிதத்துக்கு எதிரானதா ! வாடகைத்தாய் முறைமையில் சிக்கல்கள் உள்ளதா !

0

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2016 இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏழ்மையின் பொருட்டு பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் சுரண்டலைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா அமைந்திருக்கிறது. கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட வேண்டிய இம்முறையோ கல்வி, மருத்துவம் போல் வர்த்தகமயமாகியுள்ளது. இடைத்தரகர்கள், அரசியல் புள்ளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத் தொழிலால் வாடகைத்தாய்மார்கள் பெரும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏழ்மையின் காரணமாக ஒரு பெண்ணின் உடலை வாடகைக்கு எடுப்பது பெண்ணியத்துக்கும் மனிதத்துக்கும் எதிரானது என்கிற குரலும் நீண்ட காலமாக ஓங்கி ஒலிக்கிறது. இச்சூழலில் வாடகைத்தாய் குறித்து பல துறை சார்ந்த பார்வைகளை முன் வைப்பது அவசியமாகிறது.வாடகைத்தாய் முறையின் மருத்துவத் தொழில்நுட்பம் குறித்து குழந்தையின்மை மற்றும் மெனோபாஸ் சிகிச்சை நிபுணர் கௌரிமீனா கூறுகிறார்.

வாடகைத்தாய் முறை மூன்று வகையான பெண்களுக்குத் தேவைப்படுகிறது. உடல்நலப் பிரச்னை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டோ அல்லது வேறு பிற காரணங்களாலோ கர்ப்பப்பை இல்லாத பெண்கள் முதல் வகை. இவர்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் தேவைப்படும். அவர்கள் கருமுட்டையைக் கொண்டிருப்பார்கள். கருமுட்டையும் இல்லாத பெண்கள் இரண்டாவது வகை. இச்சூழலில் கருமுட்டையை தானமாகப் பெற்றுதான் கருவை உருவாக்க முடியும். கர்ப்பப்பை, கருமுட்டை இருந்தும் குழந்தை பெறுவதற்கான உடல் வலு இல்லாத பெண்கள் மூன்றாவது வகை. 40 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். மேற்சொன்ன காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை ஒரு வரப்பிரசாதம்.

பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் உயிரணுக்களையும் கொண்டு சோதனைக்குழாய் மூலம் கருவை உருவாக்கி அதை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி விடுவதுதான் இத்தொழில்நுட்பம். பெண்ணின் கரு முட்டைகளையும், ஆணின் விந்தணுக்களையும் தானமாகப் பெற்றும் கருவை உருவாக்கலாம். இது போன்று கருமுட்டை, விந்தணுக்களை தானமாகப் பெற்று உருவாக்கப்படும் கருவுக்கும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் மரபியல் ரீதியில் எந்தத் தொடர்பும் இருக்காது. அத்தம்பதியில் ஆணின் விந்தணு குழந்தைப் பேறுக்குத் தகுதியுடையதாக இருந்தும் பெண்ணிடம் கருமுட்டை இல்லை என்று வைத்துக் கொள்வோம். கருமுட்டையை தானமாகப் பெற்று கருவை உருவாக்கும்போது அந்தக் கருவுக்கும் ஆணுக்கும் மட்டுமே மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கும்.

வாடகைத்தாய் முறை காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் என்றாலும் இதனை உதவி மனப்பான்மையோடுதான் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. வாடகைத்தாய்க்கும் கருவுக்கும் மரபியல் ரீதியிலாக எந்தத் தொடர்பும் இல்லையே தவிர பிரசவ வலி தொடங்கி தாய்ப்பால் சுரப்பு வரை தாய்மைக்கான எல்லாமும் அவர்களுக்கும் உள்ளது. அவர்கள் சுமக்கும் குழந்தை மீது அவர்களுக்கு பற்றுதல் இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் உள்ளது. இதனால்தான் இதுவரையிலும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் வாடகைத்தாய்மார்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத படியிலான அமைப்பு இருந்து வருகிறது.

தங்கள் கருவைச் சுமந்த வாடகைத்தாய் யார் எனத் தெரிந்தாலோ அல்லது தான் சுமந்த கரு யாரிடம் வளர்கிறது என்று தெரிந்தாலோ எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர். எனவே குழந்தை பிறந்தவுடன் வாடகைத்தாயிடமிருந்து, கருவுக்கு சொந்தமான தம்பதிக்கு குழந்தையைக் கொடுத்து விடுவர். கருவைச் சுமக்காத தாய்க்கு தாய்மைக்கான மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆகவே அவருக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்காது. மருத்துவ ரீதியில் சுரப்பை ஏற்படுத்தலாம் அல்லது தாய்ப்பால் வங்கிகளிலிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொடுக்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்காகவாவது தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையானது” என்கிறார் கௌரி மீனா.

உளவியல் சிக்கல்கள்

கருவைச் சுமக்கும் வாடகைத்தாய்க்கு பிறக்கப்போகும் குழந்தை மீது ஒட்டுதல் ஏற்படும் நிலையில் அவர்கள் அக்குழந்தையைப் பிரிவதன் மூலம் உளவியல் ரீதியிலாக ஏதேனும் பாதிப்புக்கு ஆளாவார்களா? மரபியல் ரீதியிலாக தாயாக அல்லாமல் வெறுமனே குழந்தையை வளர்க்கப்போகிறவருக்கு அக்குழந்தையை அணுகுவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா? உளவியல் மருத்துவர் ஜெயக்குமாரிடம் கேட்டோம்

குழந்தையின்மை பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. சமூகத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. குழந்தைப்பேறு அடைந்து பெற்றோர் ஆவதென்பது வாழ்வின் முக்கியமானதொரு கட்டம். அது இல்லாமல் வாழ்க்கை முழுமையடைவதில்லை. இச்சூழலில் உடலியல் ரீதியிலாக குழந்தையைப் பெற இயலாத தம்பதிகளுக்கு வாடகைத்தாய் முறை நல்லதொரு வடிகால்தான்.

வாடகைத்தாய் முறைக்கும், தத்தெடுப்பதற்கும் உள்ள ஒரே வேறுபாடு மரபியல் ரீதியிலான தொடர்பு மட்டுமே. வாடகைத்தாய் முறையைப் பொறுத்தவரை கருமுட்டை இருந்து கர்ப்பப்பைக்கு மட்டும் வாடகைத்தாய் தேவைப்படும்போது பிரச்னையில்லை. ஆனால், வாடகைத்தாயிடமிருந்தே கருமுட்டையையும் பெறும்போது, வாடகைத்தாய் மரபுரீதியிலான தாயுமாகிறார். இதனால் அவர்களுக்கு அக்குழந்தை மீது அளவுக்கதிக பற்றுதல் உண்டாக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்று வாடகைத்தாயாக குழந்தையைச் சுமந்து, குழந்தை மீது கொண்ட பற்றுதல் காரணமாக குழந்தையைக் கொடுக்க மறுத்து பின் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பின்னர் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

இது போன்ற வழக்குகள் வெளிநாடுகளில் நிறைய நடந்திருக்கின்றன. தான் ஒரு வாடகைத்தாய்தான் என்கிற மனத்தயாரிப்புடன் குழந்தையைச் சுமக்கிறவருக்கு அக்குழந்தை மீது பற்று வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. வாடகைத்தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும்போது சுமக்கிற குழந்தை மீதான பற்றுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு குழந்தையேனும் பெற்றவர்களே வாடகைத்தாயாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணம் இதுதான். உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் தேர்ச்சி அடைந்தவர்களே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.

மரபுரீதியில் எந்தத் தொடர்புமில்லையென்றாலும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுக்கப்படும் குழந்தை மீது தாய்க்கு ஒட்டுதல் இருக்கும். அதே போல் தத்தெடுக்கும் குழந்தை மீதும் அதிகமான அக்கறை செலுத்துகிறார்கள். வாடகைத்தாய் மூலம் பிறந்ததை எதிர்காலத்தில் குழந்தைக்குச் சொல்லலாமா? என்பது எல்லோருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி. 60 சதவிகித பெற்றோர்கள் இதனைத் தெரியப்படுத்துகிறார்கள். தந்தையின் உயிரணு அல்லாமல் தானம் பெறப்பட்ட உயிரணுவால் உருவான கரு எனும்போது அதை வெளிப்படுத்துவதில்லை. ஏனென்றால் இது தந்தை வழிச்சமூகமாக இருப்பதால் மரபியல் ரீதியிலாக தந்தை இல்லை என்பதை வெளிப்படுத்தும்போது அது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என பெற்றோர் நினைக்கின்றனர் என்கிறார் ஜெயக்குமார்.

இது சரியா?வாடகைத்தாய் முறை என்பது பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் பொருள் ரீதியிலான சுரண்டல் மட்டுமல்ல, அப்பெண்களின் நலவாழ்வையே கேள்விக்குள்ளாக்கும் முறை என்கிறார் ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன்

”வாடகைத்தாய் முறையை உலகளவில் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தடை செய்திருக்கின்றன. ரத்த உறவு உள்ளவர்கள் மட்டும் வாடகைத்தாயாக இருப்பதற்கு சில நாடுகள் அனுமதி அளித்திருக்கின்றன. வியாபார நோக்கம் இல்லாமல் நல்லெண்ண அடிப்படையில் வாடகைத் தாயாக இருப்பதற்கு சில நாடுகள் அனுமதித்திருக்கின்றன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் வறுமையின் காரணமாக பெண்கள் வாடகைத்தாய் முறைக்குத் தள்ளப்படுகிறார்கள். கருவைச் சுமப்பது அவர்களாயினும் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இடைத்தரகர்களே இதன் மூலம் பெருத்த லாபம் பெறுகின்றனர்.

பெண்ணின் உடலைக் கொண்டு இங்கு மிகப்பெரும் சுரண்டலே நடைபெற்று வருகிறது. அடிப்படையில் வாடகைத்தாய் என்கிற கருத்தே தவறானது. பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அது என்ன தங்கும் விடுதியா? மனித உடலை வாடகைக்குப் பயன்படுத்துவது என்பது மனிதநேயமற்றது. ஆகவே வாடகைத்தாய் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதை முறைப்படுத்தலாம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா வர்த்தக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது. இந்த மசோதாவின் அம்சங்கள் நிச்சயம் வரவேற்கத்தகுந்தவை.

இந்த மசோதா ரத்த உறவுக்குள் மட்டும் வாடகைத்தாய் முறையை அனுமதிக்கிறது. ஆனால், நடைமுறையில் இது தவறாகப் பயன் படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. போலியான ஆவணங்கள் மூலம் யாரை வேண்டுமானாலும் ரத்த உறவாகக் காண்பிக்க முடியும். போலி ஆவணங்கள் மூலம் ரத்த உறவு எனக்கூறி சிறுநீரக பரிவர்த்தனை நடத்தப்பட்டதே இதற்கு சாட்சி. இதுவரை இந்தியாவில் ரத்த உறவில் எவரேனும் வாடகைத்தாயாக இருந்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் இருக்கலாமே தவிர மற்றபடி படிப்பறிவில்லாத மக்களை ஏழ்மையின் காரணமாக சுரண்டும் முறைதான் இது.

ஏழைகள் தங்கள் அறியாமையின் காரணமாகவும் பணத்தேவையின் பொருட்டும் இதற்கு பலியாகின்றனர். சென்னையில் ஒரு குடும்பமே வாடகைத்தாய் குடும்பமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். வாடகைத் தாய்மார்களுக்கு பிரசவம் வரையிலும் ஊட்டச்சத்து மருந்துகளும், ஹார்மோன் ஊசிகளும் அதிகப்படியாக செலுத்தப்படுகிறது. இதன் விளைவை அப்போது யாரும் உணர மாட்டார்கள். பிற்காலத்தில் இந்த விதை விதைத்ததற்கான வினையை அறுவடை செய்ய நேரிடும். உடலில் செலுத்தப்படும் ஹார்மோன் மருந்துகளால் அவர்கள் தைராய்டு பிரச்னையை சந்திக்க வேண்டிவரும். அது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட மேலும் பல நோய்களின் காரணமாக நோயாளிகளாக மாறுகிறார்கள்.

குழந்தை பிறக்கும் வரை அந்தக் குழந்தைக்காக வாடகைத் தாயையும் அரச மரியாதையுடன் நடத்துவார்கள். வேண்டியதைக் கொடுப்பார்கள். பிரசவம் முடிந்த பிறகு சக்கையாய் தூக்கி வீசப்படுவார்கள். அதன் பிறகு அவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்கிற அவல நிலை. பிறக்கிற குழந்தை ஏதேனும் உடல் குறையோடு பிறந்தால் குழந்தை வேண்டுவோர் அக்குழந்தையைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இச்சூழலில் அக்குழந்தையின் எதிர்காலம் என்னவாவது? வாடகைத்தாய் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. ஆகவே இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லை. அரசியல் புள்ளிகள் மற்றும் இடைத்தரகர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இருட்டு உலகமாக இது இருக்கிறது.

வாடகைத்தாய் குறித்த களப்பணியில் வாடகைத்தாய்மார்களைச் சந்தித்துப் பேச நேரிட்டது. அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். இது ஒரு வலைப்பின்னல் போல் இயங்கி வருகிறது. ஐந்து லட்சம் தருவதாகக் கூறி இறுதியில் இரண்டு லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் எத்தனையோ பேர். இரட்டைக் கரு உருவானால் அதில் எந்தக் கரு வீரியமாக வளர்கிறதோ அதை வைத்துக்கொண்டு மற்றதை அழித்து விடுகிறார்கள். ஒரு பெண்ணின் கர்ப்பப்பையை சோதனைக்கூடமாக்குகிறது இம்முறை. இம்முறை முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும்போது இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் நாராயணன்.

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2016ஐ முன்வைத்து வாடகைத்தாய் முறை மீதான சட்ட ரீதியிலான பார்வையை முன்வைக்கிறார் வழக்கறிஞர் லூசி.”1985ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட Surrogacy Arrangement Act வர்த்தகரீதியிலான வாடகைத்தாய் முறையை அனுமதிக்கிறது. அதன் விளைவுகளை உணர்ந்ததன் வெளிப்பாடாகத்தான் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதா அவற்றின் பல அம்சங்களை மறுத்திருக்கிறது. வர்த்தகரீதியிலான வாடகைத்தாய் முறையை முற்றிலும் தடைசெய்வது என்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தன்பாலீர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுவதைத் தடுக்க முடியும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியரும் இம்முறை மூலம் குழந்தை பெற முடியாது. வர்த்தக ரீதியில் வாடகைத்தாய் முறையை மேற்கொள்கிறவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை என்பது இதனை ஓரளவு கட்டுப்படுத்தும். வெறும் சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே குற்றங்கள் ஒழிக்கப்பட்டு விடுவதில்லை. முறையாக அதனைக் கண்காணிப்பதும் அவசியம். மத்திய அரசும், மாநில அரசும் இதற்கென கண்காணிப்பு வாரியம் அமைக்க வேண்டும். முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதாக இம்முறையை மாற்றிஅமைக்க வேண்டும்” என்கிறார் லூசி.

வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2016ன் முக்கிய அம்சங்கள்

1.குழந்தை வேண்டும் தம்பதியில் பெண் 23 முதல் 50 வயதுக்குள்ளும், ஆண் 26 முதல் 55 வயதுக்குள்ளும் இருப்பவராக இருக்க வேண்டும்.

2.அவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

3.தம்பதியில் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். (வெளிநாட்டவராகவோ, வெளிநாட்டில் வாழும் இந்தியராகவோ இருக்கக்கூடாது).

4.தம்பதிக்கு ஏற்கனவே குழந்தையோ அல்லது தத்துப்பிள்ளையோ அல்லது வாடகைத்தாய் முறையில் ஈன்ற குழந்தையோ இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் நிலையில் அக்குழந்தை உடல் மற்றும் மனரீதியிலான நிரந்தரக் குறைபாடுள்ள குழந்தையாக இருக்கும் நிலையில் அனுமதிக்கலாம்.

5.வாடகைத்தாய் முறையில் பெறப்படும் குழந்தையை எந்த ஒரு நிலையிலும் கைவிடக்கூடாது.

6.வாடகைத்தாய் மூலம் பெறப்படும் குழந்தைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.

7.நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும்.

8.25 முதல் 35 வயதுக்குட்பட்டவரே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.

9.ஒருவர் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.

10.குழந்தை வேண்டும் தம்பதியில் யாரேனும் ஒருவருக்கேனும் மரபுரீதியான தொடர்புடைய கருவைத்தான் சுமக்க வேண்டும்.

11.வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தையை வளர்க்கும் உரிமையை முதல் நிலை மாஜிஸ்திரேட் மூலம் பெற வேண்டும்.

12.கர்ப்ப காலத்தில் வாடகைத்தாய்க்கு காப்பீடு செய்து கொடுக்க வேண்டும்.

13.கருவை உருவாக்கி வாடகைத்தாயின் வயிற்றில் பொருத்துவதற்கு போதுமான வசதிகள் கொண்ட மருத்துவமனையில்தான் இம்முறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

14.வர்த்தக ரீதியிலாக வாடகைத்தாய் முறையை பின்பற்றினாலோ, வாடகைத்தாயாக்க ஒருவரைக் கட்டாயப்படுத்தினாலோ 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

15.வாடகைத்தாய் மூலம் பிறக்கப்போகும் குழந்தை குறித்த ஆவணத்தை 25 ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபித்ரு தோஷத்தை போக்க வேண்டுமா? இதோ எளிய பரிகாரங்கள் !
Next articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷப ராசிக்கு அஷ்டம குரு – விபரீத ராஜயோகம் !