மூட்டுவலிக்கு மருந்தாகும் புங்கன் மரத்தின் நன்மைகள்!!

0

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது புங்கன் மரம். இதன் இலைகள் புறவூதா கதிர்களை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. புங்கன் மரம் கோடைகாலத்தில் குளிர் நிழலை தரக்கூடியது. இதன் இலைகள், பூக்கள், பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. இது, மாதவிலக்கை முறைப்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஈரலை பலப்படுத்த கூடியதாக விளங்குகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது.

புங்கன் மரத்தின் இலைகளை பயன்படுத்தி மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புங்கன் இலைகள், சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் 10 முதல் 15 புங்கன் இலைகளை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிகட்டி குடித்துவர இடுப்பு வலி, மூட்டுவலியை குணமாகும். இந்த தேனீர் ஈரலை பலப்படுத்துவதுடன், காமாலை நோயை தடுக்கிறது. காய்ச்சல், சளி, இருமல் இல்லாமல் போகும். தோல்நோய்கள் குணமாகும்.

சாலையோரங்களில் நிழல் தருவதற்காக வைக்கப்படும் புங்கன் மரத்தின் பூக்களை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புங்கன் மர பூக்கள், நெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன், வெயிலில் காயவைத்த புங்கன் பூக்களை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

புங்கன் மரத்தின் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். இந்த பூக்களை சேகரித்து காயவைத்து கொண்டால் சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. கணையத்தை பலப்படுத்தி சீராக இயங்க வைக்கிறது. புங்கன் மரத்தின் பட்டையை பயன்படுத்தி கழிச்சல், ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்கன் மரத்தின் பட்டையுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்த மூலம் குணமாகும். கழிச்சல், சீதக்கழிச்சல் பிரச்னை சரியாகும். இந்த நீரை புண்களை கழுவும் மேல் மருந்தாகவும் பயன்படுத்தலாம். மருத்துவ குணங்களை கொண்ட புங்கன் மரத்தின் பாகங்களை பயன்படுத்திவர நாம் பல்வேறு நலன்களை பெறலாம்.

குதிகால் வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். இப்பிரச்னைக்கு மாம்பருப்பு மருந்தாகிறது. தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, விளக்கெண்ணெய். செய்முறை: கோடை காலத்தில் எளிதாக கிடைக்கும் மாம்பழத்தின் பருப்பை எடுத்து அரைத்து விளக்கெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசிவர வெடிப்பு குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாதவிலக்கு பிரச்னையை போக்கும் கழற்சிக்காய்!
Next articleபல் வலி, வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் ஈச்சங்காய் !!