மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு உரிமை கோரும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி போலீஸார்!

0

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று உண்ணாவிரதம் இருந்த நிலையில், ஆந்திரா பவனுக்கு வெளியே மாற்றுத்திறனாளி ஒருவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கிந்தாலி கிராமத்தைச் சேர்ந்த தவாலா அர்ஜுன் ராவ் (வயது 40) தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அர்ஜுன் ராவ், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி உயிர்த்தியாகம் செய்துள்ளார் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகிறார். ஆனால், டெல்லி போலீஸாரோ, அர்ஜுன் ராவ், நிதிப்பிரச்சினை, கடன் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஆந்திராவில் உள்ள மக்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதான நமது கோரிக்கை தேசியப் பிரச்சினை. நமக்கு அனைவரின் ஆதரவும் கிடைத்துள்ளது. நாம் தனியாக இல்லை. நமக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது.

யாரும் தவறான முடிவு எடுத்து, தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. சமூகத்துக்கு இது நல்லதல்ல. உங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிக்கவிடாதீர்கள். நாம் போராடுவோம், இலக்கை அடைவோம் ” எனத் தெரிவித்தார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி மாற்றுத்திறனாளி தற்கொலை செய்யவில்லை என்று டெல்லி போலீஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா கூறுகையில், ” உண்ணாவிரதம் தொடங்கும் முன்பாக அந்த இளைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனக்கு பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை இருப்பதால், தற்கொலை முடிவு எடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி தற்கொலை செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உடற்கூறு ஆய்வு முடிந்த பின் அர்ஜுன் ராவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமெக்ஸிகோவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கம்!
Next articleமலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: கேரள எம்எல்ஏ கருத்து!