மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

0

ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் மாதவிடாய். இந்த காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள். சில பெண்களால் இரவில் தூங்க முடியாது, சிலருக்கு இனிப்பு பலகாரங்களின் மீது ஆசை இருக்கும். இது பரவாயில்லை. ஆனால் சில பெண்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் வாய்வு பிடிப்புக்களால் கஷ்டப்படுவார்கள். இவற்றை ஒருசில உணவுகளை உண்பதன் மூலம் குறைக்கலாம்.

ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் பல பெண்கள் மாதவிடாய் சுழற்சி காலத்தில் அதிகப்படியான உதிரப்போக்கினால் அவஸ்தைப்படுகிறார்கள். மேலும் மாதவிடாய் காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், தசை வலி, வயிற்று உப்புசம், தலை வலி, அஜீரண பிரச்சனைகள் என பலவற்றையும் சந்திப்பார்கள். அதோடு சில பெண்கள் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால், பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒருசில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரையில் அந்த உணவுகள் எவையென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்தால், மாதவிடாய் கால பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

மாதவிடாய் காலத்தில் வயிற்று உப்புசப் பிரச்சனை பொதுவானது தான். இக்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், அது வயிற்றில் நீர்த்தேக்கத்தை உண்டாக்கி, வயிற்றை மீண்டும் வீங்கச் செய்யும். ஆகவே எவ்வளவு தான் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீது ஆசை இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் இருங்கள். இல்லையெனில் நிலைமை மோசமாகும்.

மாட்டிறைச்சிகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகளவில் இருக்கும். இம்மாதிரியான உணவை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று பிடிப்பு, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றை கடுமையாக சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவேளை உங்களுக்கு இறைச்சி சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், தோல் நீக்கப்பட்ட சிக்கன் நெஞ்சுக் கறி அல்லது மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

மாதவிடாய் காலத்தில் தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்டால், அப்போது ஆல்கஹாலை அருந்தாதீர்கள். சிறிது அருந்தினால் ஒன்றும் நேரிடாது என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு. மாதவிடாய் காலத்தில் சிறிது குடித்தாலும், அதனால் மிகவும் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆச்சரியப்படாதீர்கள். பால் பொருட்களான பால், மில்க் க்ரீம் மற்றும் சீஸ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை. இருப்பினும் மாதவிடாய் காலத்தில் உட்கொள்ளாதீர்கள். ஏனெனில் இவற்றில் உள்ள அராசிடோனிக் அமிலம், மாதவிடாய் கால பிடிப்புக்களைத் தூண்டும். வேண்டுமானால் மோர் குடியுங்கள். இதனால் வயிற்று வலி குறையும்.

காப்ஃபைன் நிறைந்த காபி, டீ போன்றவற்றை மாதவிடாய் காலத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். காப்ஃபைன் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குவதோடு, பதற்றம், உடல் வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும் மற்றும் தூக்க சுழற்சியில் இடையூறு ஏற்படும். வேண்டுமானால், காபி, டீ போன்றவற்றிற்கு பதிலாக மூலிகை டீ குடியுங்கள்.

கொழுப்புமிக்க உணவுகளான பர்கர், சிப்ஸ் மற்றும் ப்ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, வயிற்று பிடிப்பு மற்றும் வாய்வு தொல்லையால் அவஸ்தைப்படச் செய்யும். மாதவிடாய் காலத்தில் தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், அதனால் மாதவிடாய் கால பிரச்சனைகள் தீவிரமாகி, உடல் வறட்சி ஏற்படக்கூடும்.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்ட பிரட், பிட்சா, செரில்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை உண்டாக்கும். இதற்கு மாற்றாக முழு தானிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இவற்றில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. இதனால் செரிமான மண்டலம் இடையூறு இல்லாமல் சிறப்பாக செயல்படுவதோடு, அடிக்கடி பசி எடுக்காமலும் இருக்கும்.

உப்புமிக்க உணவுகளான கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சூப், பேகான், சிப்ஸ் போற்வற்றை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உப்பு மிகவும் அதிகளவில் இருக்கும். ஏற்கனவே மாதவிடாய் சுழற்சிக்குக் காரணமான ஹார்மோன் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் உப்புமிக்க உணவுகளை உட்கொண்டால், அது வயிற்று உப்புசத்தால் அவஸ்தைப்படச் செய்யும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்காது மற்றும் பல பெண்களுக்கு இனிப்பு உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். சர்க்கரை உணவுகளை உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஏற்றஇறக்க மனநிலை மற்றும் டென்சனை உண்டாக்கும். இதற்கு மாற்றாக, நார்ச்சத்துள்ள பழங்களை சாலட்டுகளாக செய்து சாப்பிடலாம்.

மாதவிடாய் காலத்தில் காரமான உணவுகளை உட்கொண்டால், அது உடல் சூட்டை அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போடுவதோடு, சரும அரிப்புக்கள் மற்றும் பருக்களையும் உண்டாக்கும். அதோடு இரைப்பை மற்றும் குடல் சுவற்றை பாதித்து, அசிடிட்டி, வலிமிக்க வயிற்றுப் பிடிப்புக்களையும் ஏற்படுத்தும். ஆகவே மாதவிடாய் காலத்தில் அதிக காரம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் அளவாக வேண்டுமானால் சாப்பிடுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!
Next articleஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு?