பற்களில் பிரச்சனையா இவற்றை செய்து பாருங்கள்! பற்களைப் பாதுகாக்கும் எளிய வழிகள்!

0

எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துப் பராமரித்தாலும், பற்களில் ஏதாவது பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது என்பது இந்தத் தலைமுறையினரின் குற்றச்சாட்டு. அந்தக் காலத்தில் வேப்பங்குச்சி, கருவேலங்குச்சி, ஆலங்குச்சி… என இயற்கை முறையில் பல் துலக்கிய நம் முன்னோர்கள், கடைசி காலம் வரை பற்கள் பளிச்சென்று இருக்கும்படி ஆரோக்கியத்துடனும் வைத்திருந்தனர். அவர்களைப்போல இந்தத் தலைமுறையினரும் தங்கள் பற்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். அதற்குச் சில வழிகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாமா?

இன்றைய தலைமுறையினரில் பலரும் அடிக்கடி பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களை செக்கப் செய்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், பற்களுக்கிடையே ரத்தக்கசிவு ஏற்படுதல், ஈறுகளில் வலி ஏற்படுதல் போன்றவை. இந்த மாதிரியான பிரச்னைகளைச் சில இயற்கையான பொருள்களின் உதவியால் நம்மால் தவிர்க்க முடியும். அவற்றில் சில இங்கே…

கடல் உப்பு
கடலிலிருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட இந்த உப்பில் நிறைய சத்துகள் நிறைந்துள்ளன. இந்த உப்பு மக்னீசியம், ஃப்ளோரைடு, பொட்டாசியம், கால்சியம் குளோரைடு ஆகிய தாதுக்களைக்கொண்டது. அந்தக் காலத்தில் இதை வீட்டுப் பொருள்களுள் ஒன்றாக வைத்திருந்தனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் பல் மருத்துவர்கள் பற்களில் சிகிச்சை நடந்த பின்னர், உப்புநீரில் வாய் கொப்பளிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். அப்போழுதுதான் பல்வலியோ, கோளாறோ விரைவாகக் குணமடையும், இன்ஃபெக்‌ஷன் ஏற்படாமல் இருக்கும். ஆக, கடல் உப்பு பல் பாதுகாப்பில் இன்றியமையாத ஒன்று.

தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பாலைத் தண்ணீருடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை நன்றாகக் கொப்பளித்தால், வாயில் உள்ள கொப்புளங்கள், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆகியவை குணமாகி நல்ல தீர்வு கிடைக்கும்.

வெந்தய இலை
வெந்தயச் செடியின் இலைகளை எடுத்து, அதை நன்றாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். அதை ஆறவைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப் புண்ணுக்கும் ரத்தக்கசிவுக்கும் உடனடித் தீர்வு கிடைக்கும்.

விட்ச் ஹசல் (Witch Hazel) என்னும் மூலிகைச் செடி
இந்தச் செடிக்கு இயற்கையாகவே தோல்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் குணம் உண்டு. இந்தச் செடியின் இலைகளைத் தண்ணீரில் கலந்து கொப்பளித்து வந்தால், ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். அதோடு, ஈறுகளிலும் பற்களுக்கிடையிலும் ஏற்படும் ரத்தக்கசிவையும் குறைக்கும். மேலும், தொண்டைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும். மருத்துவர் பரிந்துரைத்த பிறகு பயன்படுத்தலாம்.

பெப்பர்மின்ட் எண்ணெய்
பெப்பர்மின்ட் எண்ணெய் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதைப் பயன்படுத்துவதால், உடல் குளிர்ச்சியடைந்து நாக்கிலுள்ள புண்கள், வாயில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும்; வாயிலிருந்து வெளிப்படும் துர்நாற்றமும் குறையும்.

மேலே சொன்ன பொருள்கள்தான் வாய் மற்றும் பற்கள் தொடர்பான மருந்துகளிலும் முக்கியமாக இடம்பெறுபவை. மேலும், உடலில் எந்தப் பகுதியில் தொந்தரவு ஏற்பட்டாலும், அதன் அறிகுறி வாயிலும் பற்களிலும்தான் முதலில் தெரியும். அதைத் தெரிந்துகொண்டு முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், வயிற்றுப் புண்கள், நுரையீரல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்.

பொதுவாக, அதிகளவில் காய்கறிகள், கீரைகள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. தினமும் இருமுறை பல்துலக்கவேண்டியது அவசியம். இரண்டு முறை பல்துலக்கினால், வாய் துர்நாற்றம் அடிக்காது; அதோடு புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும். பற்களை நன்கு சுத்தமாகத் துலக்க வேண்டும். அதேபோல் உபயோகிக்கும் பிரஷ்களையும் சரியானதாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றாகத் துலக்க வேண்டும் என்று அழுத்தி அழுத்திப் பற்களைத் தேய்த்தால், ஈறுகளிலும் வாய் ஓரத்திலும் காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே, வாய் மற்றும் பற்களைப் பொறுத்தவரை, பொறுமை மிக மிக அவசியமானது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாயகல்பம்! இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன்!
Next articleஇன்றைய ராசிபலன் 21.6.2018 வியாழக்கிழமை !