நாட்டில் அடுத்த சில நாட்களில் (ஜூன் 03ஆம் திகதியிலிருந்து) தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஜூன் 03ஆம் திகதியில் இருந்து சிறிது அதிகரிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் உயர்வாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை தொடர்பில் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
தென் மாகாணத்திலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்குஅப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கடற் பிரதேசங்களில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்குஅப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மற்றும் காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்குஅப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.




