அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த 20 இலங்கை அகதிகளும் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு வரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
பிறிஸ்பனில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கையிலிருந்து 20 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி வந்த படகானது ஆட்கடத்தல்காரர்களது சோதனைப்படகு ஆகும்
புதிய ஆட்சியில் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை எப்படியுள்ளது என்பதை சோதனை செய்து பார்ப்பதற்கு வந்த படகுதான் அது.
ஆட்கடத்தல்காரர்களது பேச்சைக்கேட்டு அவுஸ்திரேலியா நோக்கி வருவதற்கு படகில் ஏறவிரும்பும் அப்பாவி மக்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும்.
மொறிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி அரசாங்கத்தின் குடிவரவுக்கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய எத்தனிப்பவர்கள் உடனடியாகவே சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் லேபர் கட்சி ஆட்சியைக்கைப்பற்றும் என்றும் அவ்வாறு கைப்பற்றினால் தாங்கள் பழையபடி படகுகளில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திக்கொண்டுபோகலாம் என்றும் ஆட்கடத்தல்காரர்கள் நிச்சயம் நம்பிக்கையோடு இருந்திருப்பார்கள்.
நடந்துமுடிந்த தேர்தலில் லேபர் கட்சி கண்ட தோல்வி நிச்சயம் ஆட்கடத்தல்காரர்களுக்கு ஏமாற்றத்தையளித்திருக்கும்.
ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும். Morrison அரசாங்கத்தின் ஆட்சியில் குடிவரக்கொள்கைகளில் மெத்தனப்போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை அகதிகள் 20 பேர் கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு கொண்டுவந்து சில நாட்கள் தடுத்துவைத்திருந்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த செய்தியை முற்றாக மறுக்கும் வகையில், அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று Peter Dutton தெரிவித்துள்ளார்.




