கோடை காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வழிமுறைகள்!

0

கோடை காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வழிமுறைகள்

காற்று, மழை, குளிர், கோடை காலம் என தட்பவெப்பநிலை மாறி, மாறி வருகிறது. பொதுவாக மழை காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சினைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதற்கு தீர்வாக பருவ நிலைக்கு ஏற்றவாறு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கோடைகால நோய்கள்
கோடை காலம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த கோடை காலத்தில் எத்தகைய நோய்கள் தாக்கும்? அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ பிரிவின் ஓமியோபதி டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

வெயில் காலத்தில் அதிகம் வியர்க்கும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படும். இதனால் அதிகளவில் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி கண்ணுக்கு தெரியாத அளவில் நீர்ச்சத்து குறைபாடும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. காற்றில் வெப்பம் அதிகரிக்கும் போது, நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து அதிகளவில் நீர்ச்சத்து உடலில் இருந்து வெளியேறும். குறிப்பாக வெயில் கால உபாதைகள் என்பது நீர்ச்சத்து குறைபாட்டை கூறலாம்.

நீர்ச்சத்து குறைபாடு
நீர்ச்சத்து குறைபாட்டால், ரத்தத்தில் பிளாஸ்மா அளவு குறைகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் குறைவாக கொண்டு செல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இதயத்தின் பணி குறைந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் குறைவாக செல்லும் சூழல் உருவாகிறது. குறிப்பாக, ஹைப்போ தெலாமஸ் என்னும் மூளையின் ஒரு பகுதி உடல் சூட்டை சரிசமமாக வைத்திருக்கும் பணியை செய்கிறது.

மூளையின் இந்த முக்கிய பகுதிக்கு ரத்தம் குறைவாக செல்லும்போது, அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தலைசுற்றல் ஏற்பட்டு சுயநினைவின்றி மயக்கம் அடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் இறப்பு நேரிடவும் வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக பாதிப்பு
இதுதவிர நீர்ச்சத்து குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படும் உறுப்பு சிறுநீரகம். இந்த உறுப்புக்கும் ரத்தம் குறைவாக செல்வதால், இதன் வேலை பளுவும் குறைந்து போகிறது. அதனால் சிறுநீர் மிக குறைந்த அளவே வெளியேற்றப்படுகிறது. இதனால் சிறுநீர்ப்பையில் கிருமி தொற்று ஏற்பட்டு அது நீர்க்கடுப்பை உண்டாக்குகிறது.

இதுதவிர நமது குடல் பகுதியும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அஜீரணகோளாறு ஏற்படும். இதையொட்டி மலச்சிக்கல் ஏற்பட்டு, அது நாளடைவில் மூலம், பவுத்திரம் போன்ற உபாதைகளை உண்டாக்குகிறது. இதற்கு அடுத்தநிலையில் தோலில் வறட்சி ஏற்பட்டு, அதனால் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படும். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் கிருமி தொற்றும் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.

பச்சிளம் குழந்தைகள்
பச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரை குளிர் காலம் தான் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. குளிர் காலத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் சூடு குறைந்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் அதற்கென சிறப்பு பராமரிப்பை கையாள வேண்டும். ஆனால் கோடை காலத்தை பொறுத்தவரை பயப்பட தேவையில்லை. பிறந்ததில் இருந்து 9 மாதம் வரை பச்சிளம் குழந்தைகளுக்கு வியர்க்காது. அதன்பிறகே தோல் வியர்வையை வெளியேற்றும் தன்மையை பெறும்.

அதனால் அவர்களுக்கு தாய்ப்பாலை தவறாமல் கொடுத்தால் போதும். நீர்ச்சத்து குறைவு ஏற்படாது. மேலும் தாயின் அரவணைப்பு அவசியம். இவை இரண்டையும் முறையாக செய்தால் போதும். கோடை காலத்தில் பச்சிளம் குழந்தைகளை சமாளித்து விடலாம்.

3 வயது வரை
3 வயது வரை உள்ள குழந்தைகளை, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தொண்டையில் கட்டி போன்ற நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கக் கூடும். அதனால் அவர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். கோடை மற்றும் குளிர் காலம் என்ற வேறுபாடின்றி இவர்களை கவனித்து கொள்வது நல்லது.

அதற்கு பிறகு 8 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் தானாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் நீர்ச்சத்தை இழக்கும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் உள்ளது. அதனால் இவர்களை கோடை காலத்தில் சிறப்பாக கண்காணிக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர், இளநீர், மோர் ஆகியவற்றை குடிக்க கொடுப்பது நல்லது.

சிறுவர்-சிறுமிகள்
8 வயதுக்கு மேற்பட்டவர்களும், பெரியவர்களை போன்று தான். கோடை காலத்தில் இவர்களுக்கு அதிகம் நீர்ச்சத்து இழக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக சிறுவர்- சிறுமிகள் வெயிலில் இஷ்டத்திற்கு விளையாடுவார்கள். தாகம் எடுத்ததும் தண்ணீர் குடிப்பார்கள். அது சுத்தமான குடிநீராக இல்லாதபட்சத்தில் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

அதேபோல் தெருவோரம் விற்கும் ஈ மொய்த்த திண்பண்டங்களை வாங்கி உண்பார்கள். அதனாலும் இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்க கூடும். அதனால் இவர்களை கோடை காலத்தில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகளை பொறுத்தவரை நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமின்றி முட்டை, கீரை, பேரீட்சை போன்ற இரும்புசத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், பழச்சாறுகளை அருந்துவது நல்லது. கோடை காலம் என்றில்லாமல் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருப்பது எப்போதும் நல்லது.

கர்ப்ப கால பரிசோதனைகளை தவறாமல் செய்து டாக்டரின் ஆலோசனைப்படி வாழ்வியல் முறையை அமைத்துக்கொண்டால் கோடை காலத்தை பற்றி இவர்கள் பயப்பட தேவையில்லை.

60 வயதுக்கு மேல்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் நீர்ச்சத்து இழப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு வகையில் இவர்களும் குழந்தைகளை போன்றவர்கள் தான். இவர்கள் வெயிலில் அதிகம் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும். அவ்வாறு வெளியே செல்ல நேரிட்டால் கையுடன் குடை மற்றும் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்பட்டால் நிழலில் அமர்ந்து சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.

உடலின் வெப்பம்
கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகரித்து சூட்டை கிளப்பும். அதனால் உடலின் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை உண்பது அவசியம். அப்போது தான் உடலின் சூடு அதிகரிக்காமல் இருக்கும். அதனால் மோர், இளநீர், பழச்சாறுகளை அருந்துவது நல்லது. வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதால் உடலின் சூடு தணிவதோடு உடல் வறட்சியும் நீங்கும்.

முள்ளங்கியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. அத்துடன் வைட்டமின்-சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதேபோல் சீரகத்தண்ணீர் அருந்துவதும் உடல் சூட்டை தணிக்கும். இதுதவிர புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை மற்றும் கற்றாழை சாறுகளை அருந்துவது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதைவிட நல்ல பிராண்ட் ஒன்று இருக்கு தரவா? Dr. ஹாலித் (இலங்கை)!
Next articleநோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா!