குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கன்னி.

0

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
மென்மையான குணமும், அனைவரிடமும் இதமாக பழகும் ஆற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இதுவரை தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கிய ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களும் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். இது மட்டுமன்றி சனி 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனியும் நடைபெறுகிறது. இதனால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் கேது 4-ஆம் வீட்டிலும் ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். இதுவும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். குருபார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்கு பின்பு அனுகூலப்பலனைப் பெற முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, நேரத்திற்கு உணவு உண்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தியபடியே இருக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை ஏற்படும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் தடையும் உடன்பிறப்புகளால் தேவையற்ற மனசஞ்சலங்களும் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களும் உங்களை ஒரு விரோதி போலவே பாவிப்பார்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கூட பல தடைகளுக்கு பின் தான் கிடைக்கும். அசையா சொத்துகளால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். பண வரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டியிருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.

கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பல இடையூறுகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய ஆடர்கள் கைமாறி போகும். மறைமுக எதிர்ப்புகள் எங்கிருந்து வருகிற தென்று கண்டு பிடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஒருசில வாய்ப்புகள் வந்தாலும் குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவு செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். லாபங்கள் குறையும்.

உத்தியோகம்
பணியிலிருப்பவர்கள் மிகவும் வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய காலமாகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். இது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கும் உங்களை பொறுப்பேற்க செய்வார்கள். வீண் பழிச்சொற்கள் உங்களின் மன நிம்மதியை குறைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையானது சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள அதிக பாடுபட வேண்டிய இருக்கும். மக்களின் ஆதரவு குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுவதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். வீண் விரயங்கள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காமல் பணியில் தடை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை ஏற்படும். நீர்மட்டம் குறைவு, அதிக காற்று, மண் வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். விளைநிலங்கள் வாங்கும் முயற்சிகளில் தடை ஏற்படும்.

கலைஞர்கள்
கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொண்டால் மட்டுமே காலத்தை நகர்த்த முடியும். பிடிவாதம், முன்கோபம், அதிகார குணம், போன்ற அனைத்தையும் தவிர்த்து சக கலைஞர்களையும் அனுசரித்து நடப்பதே நல்லது. பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

பெண்கள்
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு, உடல் சோர்வு, புத்திர பாக்கியம் தாமதப்படும் நிலை ஏற்படும். கணவர் வழி உறவுகளை அனுசரித்து நடப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சுமாராக தான் இருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் சிலரிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனதில் உள்ள குறைகளை கூறுவதென்றால் கூட தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடி உண்டாகும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. மந்தநிலை, ஈடுபாடுயின்மை, தேவையற்ற பொழுதுபோக்கு மற்றும் நண்பர்களின் சகவாசங்கள் போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். குரு பகவானை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும்.

பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தால் 4-ல் கேது 10-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பது சுமாரான அமைப்பே ஆகும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை ஓரளவுக்கு அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும் என்றாலும், சனி 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமதநிலை ஏற்படும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் சில ஆதாயங்களை பெற முடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். மாணவர்கள் உடல்நல பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். சனி 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம்.

வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்றாலும், ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதும், 4-ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8 நிறம் – பச்சை, நீலம் கிழமை – புதன், சனி
கல் – மரகத பச்சை திசை – வடக்கு தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 சிம்மம்.
Next article19.09.2018 இன்றைய ராசிப்பலன் புரட்டாசி 03, புதன்கிழமை!