கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

0

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவதையும், சீட் பெல்ட் போடுவதையும் உறுதி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை, ஆகவே அதை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரைச்சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, கடந்த 2015-ம் ஆண்டு கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த மூன்றாண்டுகளாக எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், பல்வேறு விளம்பர யுக்திகள் குறித்தும் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 2015-ல் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள் பதிவானது என்பது தொடர்பான ஆண்டு வாரியான மற்றும் மாவட்ட வாரியான அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைப் படித்த நீதிபதிகள், இந்த நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை. பெரும்பான்மையான நபர்கள் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதில் அரசின் தன்மை நடைமுறையில் திருப்தி இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பள்ளி கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது, ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது மோட்டார் வாகன விதிகளிலேயே உள்ள சட்ட விதிகளை அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டினர்.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தில் தமிழக அரசின் விதிமுறைகளில் திருப்தி இல்லை கட்டாய ஹெல்மெட் குறித்த ராஜேந்திரன் வழக்கில் நாளை (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அது குறித்த விழிப்புணர்வை அரசு கட்டாயம் மக்களிடையே கொண்டுச்செல்ல வேண்டும்.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிற விதிகளையும், ஹெல்மெட் அணிவதன் மூலமாக ஏற்படும் நன்மைகள் குறித்தும், சாலை விபத்தில் ஏற்படுகிற உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு கட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவை செயல்படுத்த வேண்டும், இதனை கண்டிப்புடன் அரசு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கட்டாய ஹெல்மெட் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றுகளை சரியாக செயல்படுத்தி அதுகுறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்.23-க்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை!
Next articleசீனாவின் பிரபல நாயகியும், அதிகம் வருமானம் பெறும் நடிகையாகவும் வலம் வந்த ஃபேன் பிங்பிங் கடந்த இரண்டு மாதங்களாக மாயம்!