இனி போர் கிடையாது: ஜனாதிபதிகள் அதிரடி அறிவிப்பு- இன்று நடந்தது என்ன?

0

கொரிய தீபகற்பத்தில் இனி போர் கிடையாது என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய தலைவர் மூன் ஜேவும் இணைந்து அறிவித்துள்ளார்கள்.

கொரியப்போர் கடந்த 1953-ல் முடிந்த பின்னர் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் இணக்கமான சூழல் இல்லாமல் இருந்தது.

கொரிய போர் முடிந்த போதும் இரு நாட்டுக்கும் இடையில் பனிப்போர் முடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தொடர் அணு ஆயுத சோதனைகள் நடத்தி உலகை மிரட்டி வந்த வடகொரியா இனி சோதனைகள் நடத்தமாட்டோம் என கூறியது.

இதைத்தொடர்ந்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்கும், தென் கொரிய தலைவர் மூன் ஜேவும் உச்சி மாநாட்டில் சந்தித்து பேச முடிவெடுத்து அதன்படி இன்று காலை அந்நாட்டு நேரப்படி 8.30 மணிக்கு சந்தித்தார்கள்.

இருதலைவர்களும் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அதை தற்போது செய்துள்ளார்கள்.

அதன்படி கொரிய தீபகற்பத்தில் இனி போரை மேற்கொள்ள மாட்டோம் என கிம் ஜாங்கும், மூன் ஜேவும் தற்போது அறிவித்துள்ளார்கள்.

அதன்படி கொரிய தீபகற்பத்தில் இனி அணுஆயுத சோதனைகள் மேற்கொள்ளப்படாது எனவும், இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கொரியா பிராந்தியத்தின் துரதிருஷ்டவசமான வரலாறு இனி தொடர்வதை அனுமதிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளனர்.

துயரங்களை கடந்து செல்லாமல் ஒருபோதும் வெற்றியை சுவைக்க முடியாது என குறிப்பிட்ட இரு நாட்டுத் தலைவர்களும், இந்த அதிரடி முடிவால் பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் ஏற்படலாம் எனவும், அதையும் கடந்து சாதிப்போம் என ஒன்றாக அறிவித்துள்ளனர்.
மேலும் இருநாட்டுக்கு இடையேயான விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும்,

தற்போது இருநாட்டின் எல்லையில் ராணுவமயமற்ற மண்டலமாக பாவிக்கப்படும் பகுதியை அமைதி மண்டலமாக மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் எல்லையில் ஆயுத குவிப்பை மட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மட்டுமின்றி கொரியா பிராந்திய அமைதி பேச்சுவார்த்தைக்கு சீனா மற்றும் அமெரிக்காவின் உதவியை நாடவும், மூன்று வழி பேச்சுவார்த்தையாக மாற்றிக் கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப ஒன்று கூடல் நிகழ்வை மீண்டும் துவங்கவும் முடிவு செய்துள்ளனர்.

மிக முக்கியமாக இருநாடுகளை இணைக்கும் வகையில் சாலை வழி போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை நவீனப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் இருநாடுகளும் இணைந்தே சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை நாடவும் இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். வடகொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் கூட்டான அறிக்கையை சீனா மற்றும் அமெரிக்கா வரவேற்றுள்ளதுடன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நல்ல நிகழ்வுகள் நடந்தேறத் துவங்கியுள்ளது என தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரவேற்றுள்ளார்.

இதோடு, இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று சந்திப்பதற்கு நீண்ட காலம் பிடித்திருக்கிறது. வடகொரியர்களும் தென் கொரியர்களும் ஒரு இனம், ஒரு ரத்தம், அவர்களை பிரிக்க முடியாது என கிம் ஜாங் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article8 வயது சிறுமியை கொலை செய்தது ஏன்? முக்கிய குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!
Next articleஉங்களில் யார் ஆண் ராசிக்காரர்கள் யார் பெண் ராசிக்காரர்கள் தெரியுமா?