ஆண்களே! சிகரெட் பிடிப்பதால் உண்டாகும் கருப்பான உதடுகளை இயற்கையான முறையில் போக்க டிப்ஸ்!

0

ஆண்களைவிட பெண்களுக்கே உதடுகளைப் பற்றிய அக்கறை அதிகம் என்றாலும், பாதிப்பு அதிகம் இருப்பதென்னவோ ஆண்களிடம்தான். மன சோர்வு, மன அழுத்தம், புகைபிடிப்பது போன்றவை அவர்களின் உடலுக்கு மட்டுமல்ல, உதடுகளுக்கும் பாதிப்பாகி விடுகிறது.

அதுபோல, உதடுகள் கறுப்பது, உதடு வெடிப்புகள் ஏற்படுவது போன்றவை ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் அதிகம் ஏற்படும், அதுவும் மழைக்காலங்களில் அதிகம் ஏற்படும் ஒரு வியாதியாகிறது, இந்த உதட்டு வெடிப்பு பாதிப்புகள் எல்லாம். இதனால் உதடுகள் வெடிப்புண்டாகி, கறுத்து, முகத்தின் தன்மையை வயோதிகக் கோலமாக ஆக்கிவிடுகின்றன.

இதுபோன்ற பையனின் முக லட்சணம் கண்டவுடனே, ரொம்ப ஸ்மோக் பண்ணுவான் போலருக்கே, வேறு பையன் பார்க்கலாம் என்று பையனின் புகைப்படத்தைப் பார்த்தவுடனே ரிஜக்ட் ஆகிவிடும்.

எப்படி போக்குவது இந்த பாதிப்பை? சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டாலும், கறுத்த உதடுகள் அத்தனை எளிதில், நிறம் மாறி, இயல்பான நிறத்தை அடையாது, என்பதே அவர்களுக்கு இன்னும் வேதனை அளிக்கும் ஒரு நிகழ்வாகும். உதடுகள் முகத்தின் பொலிவை வெளிக்காட்டுவதில், முக்கியமானவை. அவை கறுத்து இருப்பது, முகத்தை பொலிவிழக்க செய்யும் என்பதே உண்மை.

புகைபிடிக்காத ஆண்களுக்கு ஏன் உதடு கருக்கிறது?

அதிக உடல் சூடு எனும் காரணத்தோடும்கூட, உணவு உண்டபின் வாயை முறையாக சுத்தம் செய்யாமல் இருத்தல், சரியாக தண்ணீர் பருகாமல் இருத்தல் இதுபோன்ற காரணங்களால் ஏற்படும் பதிப்புகளால் உதட்டில் உள்ள செல்கள் இறந்து அதனால், உதடுகளின் ஈரத்தன்மை குறைந்து, உதடுகள் வெடித்து கறுமை நிறத்தை அடைகின்றன. இதனால், அவர்களின் முகமும் கறுமை நிறமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம், இந்த கறுத்த உதடுகளால் ஏற்படும். ஆயினும் இவற்றை இயற்கையான பொருட்களைக் கொண்டே விரைவில் போக்கி விடலாம்.

ஏன் கருமையாகிறது?

என்னதான் ஃபில்டர் வைத்த கிங்ஸ் பிடித்தாலும், மெலிதான உதடுகளின் மேல் தோலில், புகையை உள் இழுக்கும்போது படியும் நிகோடின் பாதிப்பால், உதடுகள் கறுமை நிறத்தை அடைகின்றன. இந்த பாதிப்பு உதடுகளோடு மட்டும் நிற்பதில்லை, முகத்தில் உள்ள இரத்த நாளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, முகத்தையும் காலப்போக்கில் கறுமை ஆக்கும் தன்மை மிக்கது.

உடல் சூடு :

உதடுகள் வெடிப்பதற்கு மூல காரணம், உடலின் அதிக வெப்பமே ஆகும். உதடு வெடிப்பு மட்டுமல்ல, சருமத்தில் தோன்றும் தோல் வறட்சி போன்ற பாதிப்புகளுக்கும் உடலில் ஏற்படும் அதிக சூடே, காரணமாகிறது. நேரந்தவறிய உணவுப் பழக்கங்களாலும், தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் போன்ற காரணங்களாலும் ஏற்படும் இந்த உடல் சூட்டை போக்கினாலே, உதடு வெடிப்பு மற்றும் உதடு கறுப்பது போன்ற பாதிப்புகளை சரிசெய்துவிட முடியும்.

கீழே குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகளில், எந்தப் பொருள் இலகுவாக கிடைக்கிறதோ, அதை முதலில் பயன்படுத்துங்கள், மேலும், உடனே தீர்வு கிடைக்கவில்லை என்று வேறு பொருளுக்கு மாறிவிட வேண்டாம். சிறிது கால அவகாசம் வரை காத்திருந்து தொடர, மாற்றங்களை சிறிது சிறிதாக காண முடியும்.

வெண்ணெய் :

நல்ல சுத்தமான வெண்ணையை எடுத்து, இரவு படுக்கும்போது, காலையில் குளிப்பதற்குமுன்பு உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்வதுபோல சிறிது நேரம் தடவி வர, சில நாட்களில் உதடுகளின் கரிய நிறம் மறைந்து, பழைய பொலிவில் உதடுகள் விளங்கும். வெண்ணை உடலுக்கு குளிர்ச்சி அளித்து, வறண்ட சருமத்தையும் மென்மையாக்கும் தன்மை வாய்ந்தது, எனவே, பலன்கள் நிச்சயம் கிடைக்கும், பொறுமையுடன் தினமும் தடவிவரவேண்டும்.

தேங்காய் எண்ணெய் :

இதேபோல தேங்காயெண்ணை கொண்டும், உதடுகளில் மசாஜ் செய்து வர, உதடுகள் விரைவில், இளஞ்சிவப்பு நிறத்தை அடையும்.

பீட்ரூட் :

பீட்ரூட் கிழங்கின் சாறெடுத்து, அந்த சாற்றை தினமும் சிறிது நேரம் மேற்சொன்ன முறையில் உதடுகளில் மென்மையாகத் தடவி வர, உதடுகளின் இயல்பான நிறத்தை விரைவில் அடைய முடியும்.

தேன் :

இதேபோல, தேனும் உடலின் இறந்த செல்களை தோல்களில் இருந்து அகற்றி, அந்த இடங்களில் உள்ள கறுமை நிறத்தைப் போக்கி, சருமத்தில் பளபளப்பும் மென்மையும் தோன்றச் செய்யும், அத்தகைய ஆற்றல் மிக்க தேனை உதடுகளில் தடவி வர, உதடுகள் கறுமை நிறம் நீங்கி, மென்மையாக மாறிவிடும்.

எலுமிச்சை :

எலுமிச்சையின் இயல்பான சுத்தம் செய்யும் தன்மைகளால், எலுமிச்சை சாற்றில் சிறிது இந்துப்பு எனும் பாறை உப்பு சேர்த்து, உதடுகளை அதன் மூலம், ஒரு காட்டன் துணியைக் கொண்டு, இதமாக தடவிவர, உதடுகளின் கறுப்பு நிறம் மறைந்து, இயல்பான நிறத்தை விரைவில் அடையலாம்.

விளக்கெண்ணெய் :

இதேபோல, விளக்கெண்ணை மற்றும் குளிர்ந்த நீர் கொண்டும், உதடுகளை மேற்சொன்ன முறைகளில் மசாஜ் செய்து, நல்ல பலன்களை அடையலாம்.

மேற்சொன்ன முறைகளில், உங்கள் உதடுகளின் வெடிப்பை சரிசெய்து, உதடுகளில் பழைய நிறத்தை அடைந்தாலும், உணவுப்பழக்கம் மற்றும் உறக்கம் போன்றவற்றை சரிசெய்யவில்லை எனில், மீண்டும் இந்த பாதிப்புகள், உடல் சூட்டால் உண்டாகக்கூடும்.

எப்படி தவிர்ப்பது உடல் சூடு பாதிப்புகளை ?

முறையான தினசரி பழக்கவழக்கங்களைக் கடைபிடித்துவர வேண்டும். காலை எழுந்து குளித்து சாப்பிட்டு அலுவலகம் செல்வது முதல், இரவு வீடு திரும்பி ஓய்வெடுத்து உணவு அருந்தி படுக்க செல்லும்வரை, ஒரு ஒழுங்கியல் வழியில் தினசரி கடமைகளை ஆற்றி வர வேண்டும்.

உடல் சூட்டை தவிர்க்க :

தினமும், காலையில் இட்லி, இடியாப்பம் போன்ற வேக வைத்த உணவுகள் அல்லது கஞ்சி போன்ற திட உணவுகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்வது நலம். மதிய வேளையில் கோடைக்காலமாக இருப்பின் முளைக்கீரை, சண்டிக்கீரை உள்ளிட்ட கீரைகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் வெப்பத்தைத் தணிக்க ஒரு சிறந்த வழியாகும்.

நன்னாரி சர்பத் :

உடல் வெப்பம் தணிக்கும் மருந்தாக, நன்னாரி வேர் கலந்த சர்க்கரைப் பாகை, தினமும் நீரில் கலந்து சிறிது பருகிவரலாம். வாரமொருமுறை அவசியம், எண்ணை தேய்த்து குளித்துவர வேண்டும். இரவில், சப்பாத்தி, இட்லி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவு வகைகளை சாப்பிட உடலின் சூடு குறைய வழியாகும்.

நொறுக்குத் தீனிகளை தவிர்க்க :

பகலில் குளிர்பானங்களை அருந்துவது, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், ஃபாஸ்ட்ஃபுட் உணவுவகைகள் இவற்றை கண்டிப்பாக விலக்குவது, நன்மைகள் தரும்.

உடலின் செரிமான ஆற்றலை பாதிக்கும் இத்தகைய மேலைவகை உணவு மற்றும் நொறுக்குத்தீனிகள், உடலின் செரிமான ஆற்றலை பாதித்து, உடல் உறுப்புகளை சூடாக்கி, அதனால் உடலையும் சூடாக்கிவிடுகின்றன. இந்த செயற்கை பாதிப்பின் காரணமாக ஏற்படும் உடல் சூட்டினாலேயே கட்டிகள், கண்களில் நீர் வடிதல், உதடுகள் மற்றும் கை கால்கள் வெடிப்புண்டாகி, பாதிப்புகள் ஏற்படுகின்றன. செயற்கை உணவுகளை விடுத்து, இயற்கை வழி நடந்தால், நலமுடன் வாழலாம்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் முகத்தை வசீகரமாக்கும் தயிர் மற்றும் தேன் கலவை. நிச்சயம் பலனளிக்கும்!
Next articleதினமும் சுறுசுறுப்பாக இருக்க இஞ்சிப் பால் குடிங்க! ஏராளமான நன்மைகளும் உண்டு!