குழந்தைகளை சரியாக சாப்பிட வைப்பதற்கு சிரமப்படுகிறீர்களா? குழந்தைகளை இலகுவாக சாப்பிட வைப்பதற்கான சில டிப்ஸ் இதோ!

0

குழந்தைகளை சரியாக சாப்பிட வைப்பதற்கு சிரமப்படுகிறீர்களா? குழந்தைகளை இலகுவாக சாப்பிட வைப்பதற்கான சில டிப்ஸ் இதோ

குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது அம்மாக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தனிக்கலை என்பதுடன், அடம்பிடிக்காமல் சாப்பிடும் குழந்தை என்பதே உலகில் இல்லை எனும் நிலையில் சப்பிட மறுத்து அடம்பிடிக்கும் அத்தகைய குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு அம்மாக்கள்; செய்யும் தந்திரங்களை வரிசைப்படுத்துவது எளிமையான ஒன்றல்ல.

குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் அல்லது ஒருசில வகை உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதனால் இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது ஓரளவுக்கு எளிதான விஷயமாக காணப்பட்ட போதிலும், கொஞ்சம் விபரம் தெரிந்த பின்னர் குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது யானையை கட்டி இழுப்பதற்கு அல்லது யானையை பானைக்கள் நுழைப்பதற்கு சமமான ஒரு செயலாக காணப்படும்.

இத்தகைய கடின செயற்பாட்டை இலகுவாக செய்யவும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் அவசியமான குழந்தைகளை சாப்பிட வைக்கும் முறைகள் மற்றும்; குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் பற்றியும் நோக்குவோம்.

பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியில் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு ஜங்க் புட் உணவுகளை பழக்கப்படுத்துவதனைத் தவிர்த்து, நமது பாரம்பரிய உணவுகளான தினை முறுக்கு, கம்பு தட்டை, பருத்திப்பால் மற்றும் கேழ்வரகுப் பால் போன்றவைகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவது நல்லதும் மிகவும் ஆரோக்கியமான ஒரு சந்ததியையும் உருவாக்கும்.

ஒரு வயதினை நிறைவு செய்த குழந்தைகளிற்கு பொதுவாக அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடக் கொடுக்கலாம். இங்கு, பற்கள் முளைக்க ஆரம்பித்ததும், அவர்களாகவே எடுத்துச் சாப்பிடும் பழக்கத்தை சொல்லி கொடுத்தல் நல்லது.

ஒவ்வொரு உணவினையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து, அதன் சிறப்புகள் பற்றி அவர்கள் புரியும் வகையில் நன்கு எடுத்துக் கூறுதல் வேண்டும். பொதுவாக, காலையில் இட்லி, பொங்கல், கேசரி மற்றும் கிச்சடி ஆகிய உணவு வகைகளும், மதியம் வேளையில் சோறு, பருப்பு, மசித்த கேரட், உருளைக்கிழங்கு, காய்கறிகள், சாம்பார், ரசம், தயிர் சாதம் மற்றும் மோர் சாதம் போன்றனவும், மாலை வேளையில் ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிடக் கொடுக்கலாம். குறிப்பாக, ஒன்பது மாதங்கள் பூர்த்தியானதும், முட்டையின் மஞ்சள்கரு சாப்பிடக் கொடுக்கலாம்.

உணவு தயாரிக்கும் போது அவை குழந்தைகளை கவரும் வகையில் தயாரிப்பது முக்கியம். எடுத்துக்காட்டாக, தோசையை சாதாரணமாக வட்டமாக சுடுவதற்கு பதிலாக விதவிதமான டிசைனில், தோசையின் மேல் காரட் போன்ற தூவல்களை போட்டு கவர்ச்சியான வகையிலும் நறுமணம் வீசக் கூடியதாகவும் சுவை மிக்கதாகவும் தயாரித்தால் குழந்தைகள் அதனை விரும்பி உண்ணுவார்கள். மிகச் சிறப்பம்சமாக, ஒருசிலர் தோசையின் மீது தமது குழந்தைகளின் பெயரை ஜாம் கொண்டு எழுதி கூட தயாரிப்பார்கள்.

பெரும்பாலும் தினமும் வீட்டில் தயாரித்த உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதை பழக்கப்படுத்திக் கொள்வதே ஆரோக்கிய உணவுக்கான முதல் வழியாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி மற்றும் அரிசிக் கஞ்சி போன்றனவும் தயாரித்து சாப்பிடக் கொடுக்கலாம்.

கொஞ்சம் விபரம் தெரிந்த குழந்தைகளுக்கு உணவு எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது பற்றி எடுத்துக் கூறி, உணவின் மேல் மதிப்பை ஏற்படுத்தி, சாப்பிடும் போது உணவை வீணாக்காமல் சிந்தாமல் சாப்பிட வைப்பது ஒரு அம்மாவின் பிரதான கடமை ஆகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலகின் பாரமான பெண் என்னும் சாதனைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) உயிரிழந்தார்.
Next articleஇன்றைய ராசிபலன் 27-09-2017