வட்டுக்கோட்டையில் வீட்டின் ஓட்டைப் பிரித்து வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள், மழையைச் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தவர்களை மிரட்டித், தாக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அராலி செட்டியார் மடம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை கடும் மழைக்கும் மத்தியில், முகத்தை மூடிக்கட்டியவாறு ஓட்டைப் பிரித்து வீட்டினுள் இறங்கியுள்ளனர். வீட்டில் இருந்த வயோதிபர்கள் இருவரையும், பெண் ஒருவரையும் மிரட்டி நகைகளைக் கேட்டுள்ளனர். வீட்டார் சத்தமிட்டபோதும், மழையால் அந்தச் சத்தம் அயவலர்களுக்குக் கேட்கவில்லை.
இதைச் சாதகமாக்கிய கொள்ளையர்கள் வீட்டைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வாள் முனையில் பெண்னை மிரட்டினர்.
பணிய மறுத்த அவரை வாளால் வெட்டி அணிந்திருந்த நகைகளை அபகரித்தனர். 80 வயது முதியவரை மிரட்டிக் கொட்டனால் தாக்கியுள்ளனர்.
அவரது மனைவியான 71 வயதுப் பெண்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 3 மணிநேரம் வீட்டிலே இருந்து வீட்டைச் சல்லடையிட்ட கொள்ளையர்கள் பணம், நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்துள்ளனர்.
கொள்ளையர்கள் வெளியே சென்ற பின்னர், அலயவர்களின் உதவியை வீட்டுக்காரர்கள் கோரினர். காயமடைந்த 80 வயது முதியவர் மற்றும் வாள்வெட்டுக்கு இலக்கான பெண் இருவரும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்த 71 வயதுப் பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட நகை, பணம் எவ்வளவு என்பது தொடர்பில் முழுமையான விவரத்தை அவர் கூறவில்லை. வாள்வெட்டுக்கு இலக்கான பெண் உள்பட்ட தான் அணிந்திருந்த 18 பவுண் நகையைக் கொள்ளையர்கள் அபகரித்தார்கள் என்றும், முழுமையான விவரம் காயமடைந்த பெண்ணுக்கே தெரியும் என்று அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என வட்டுக்கோட்டைப் பொரிஸார் தெரிவித்தனர். காயமடைந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அராலி செட்டியார் மடச் சந்தியில் இரவு வேளைகளில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அந்த வீதியால் செல்பவர்களை மறித்து விசாரணைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறிருக்க அந்தப் பகுதியிலேயே உள்ள வீடொன்றில் கொள்ளையிடப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது