யாழில் வைத்து வெளிப்படுத்தப்பட்ட விடயம்! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு?

0
243

ஐ.நா சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு தமிழர் தரப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது என ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

ரெலோ அமைப்பின் செயற்குழுக் கூட்டம் யாழில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழர் தரப்புக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கமைய பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் சிறைகளிலுள்ள கைதிகளும் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா சபையில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட இருக்கிறார். அந்த அறிவிப்பானது தமிழர் தரப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆகவே, அந்த விடயம் குறித்து நாங்கள் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த அல்லது வெளிப்படுத்த வேண்டியதொரு தேவை ஏற்பட்டுள்ளது.

போரில் சர்வதேச சட்டங்களுக்கு மாறாக – மனித உரிமைகள் சட்டத்துக்கு முரணாக தமிழ் மக்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கவும், தமிழர் தரப்புக்களால் கோரப்படும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கையை விடுவிப்பதுடன் போர்க்குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு என்ற அடிப்படையில் அவரது யோசனை அமையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், எங்கள் கட்சியும் சரி நாங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்பதில் உறுதியாகவே இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: