இலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்!

0
469

இலங்கை அரசாங்கம் தீர்மானம்: 2020 டிசம்பரில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் குறித்த கடனை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுருந்ததாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நவம்பரில் 165 மில்லியன் டொலர் கடனுக்கு அங்கீகாரம் வழங்கியது.

இந்நிலையில் ஏற்கனவே 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கம் இந்த ஆண்டு ஒக்டோபரில் திருப்பி செலுத்தியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு இன்னும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்த வேண்டும்.

இதேவேளை இலங்கையின் மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு வருகிறது, இது கடனை திருப்பிச் செலுத்துவதற்கான இருப்புக்களை சேகரிப்பதை எளிதாக்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பொது முதலீட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக 2020 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 31 வரை வெளிநாட்டு அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் 11 உடன்படிக்கைகளை மேற்கொண்டது.

இதன்மூலம் 742.8 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியுதவிகளை திரட்ட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே சீனா கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்குரிய மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் நீர் விநியோகம் போன்றவற்றுக்கு 9 கோடி டொலர்கள் நன்கொடையை வழங்கியிருந்தது.

மேலும், சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு இரு கடன்களை அதாவது 2020 இல் வரவு -செலவு திட்டதிற்கு ஆதரவாக 50 கோடி டொலர்களையும் அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கிக்கு 14 கோடி டொலர்களையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: