நாம் பயன்படுத்தும் தானியங்களில் அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் என ஒரு வரிசை வைத்துள்ளோம்.
அதில் கம்பு தானியத்தை கடைசிக்கு தள்ளிவிட்டோம். ஆனால், அதிக கலோரியை தருவதிலும், விளைவதில் தீங்கு இல்லாததிலும் முதலிடத்தில் இருப்பது கம்புதான்.
கம்பில் உள்ள சத்துகள்
100 கிராம் கம்பில் 378 கலோரியும், கோதுமையில் 339 கலோரியும், அரிசியில் வெறும் 130 கலோரி மட்டுமே உள்ளது.
அதுபோல, கார்போஹைட்ரேட் 100 கிராம் மக்காச்சோளத்தில் 74 கிராம், கம்பில் 73 கிராம், கோதுமையில் 71 கிராம், அரிசியில் 28 கிராம், ஓட்ஸில் 12 கிராமும் உள்ளது.
புரதச்சத்து கோதுமையில் 14, கம்பில் 11, அரிசியில் 2.7 கிராமும் உள்ளது. இரும்புச்சத்து கோதுமையில் 19, கம்பில் 16, அரிசியில் 1 கிராமும் உள்ளது. சர்க்கரை கோதுமையில்தான் அதிகம் 2 கிராம் உள்ளது கம்பில் 1.66, மக்கச்சோளத்தில் 0.6, அரிசியில் 0.1 கிராமும் உள்ளது.
கோதுமை சத்து நிறைந்ததுதான் ஆனாலும், அதை சுத்திகரிக்கும் போது, பிரான், ஜெர்ம் போன்ற சத்து நிறைந்த பகுதிகள் நீக்கப்பட்டுவிடுகின்றன.
எண்டோஸ்பெர்ம் என்ற மூன்றாவது பகுதி மட்டுமே நமக்கு கிடைக்கிறது. நீக்கப்பட்ட பகுதியில்தான் விட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், காப்பர், இரும்பு, நார்ச்சத்து, போலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆங்கிலத்தில் கம்பு தானியங்களை மில்லட் என பொதுப்பெயரில் அழைக்கின்றனர். கம்பு (பியர்ல் மில்லட்), சோளம் (கிரேட் மில்லட்), கேழ்வரகு (பிங்கர் மில்லட்), தினை (பாக்ஸ்டைல் மில்லட்), சாமை (லிட்டில் மில்லட்), வரகு (கோடோ மில்லட்), குதிரை வாலி (பார்ன்யார்ட் மில்லட்), பனிவரகு (காமன் மில்லட்)
நோயை விரட்டும் கம்பு
கம்பு வகைகளில் காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மெக்னீசியம் குறிப்பாக நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பை தடுப்பதற்கும் ஆஸ்துமாவின் வீரியத்தை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்பு உறுதிக்கும், ஏ.டி.பி. ஆற்றல் மூலக்கூறு உற்பத்திக்கும், நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. கம்பில் உள்ள அதிக அளவிலான மெக்னீசியம் 300 வகையான நொதிகளுக்கு (Enzyme) துணைகாரணியாக விளங்குகிறது.
இந்த நொதிகள் உடலில் குளுக்கோஸை பயன்படுத்துவதிலும் இன்சுலின் சுரத்தலிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் டைப் 2 நீரிழிவு நோயை கம்பு கட்டுப்படுத்துகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து பெண்களை தாக்கும் பித்தப்பை கல், மார்பக புற்றுநோயை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் கூறுகிற சத்தான தானியங்களில் மக்காச்சோளம் முதலிடத்திலும் கம்பு இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதற்கு பிறகே மற்றவை. கோதுமை நான்காம் இடம்தான்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உகந்தது
கம்பு சத்தில் மட்டுமல்ல உயிரினப் பரவலுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உகந்தது. இது விளைய தேவைகளும் குறைவு. இதற்கு வளமான மண்ணோ, உயிரியல் உரங்களோ, அதிக தண்ணீரோ தேவையில்லை.
இது பூச்சியினங்களை கவராத பயிர் அதனால், பயிருக்கு நோய்த்தொல்லை இல்லாததோடு, விஷமான மருந்துகள் தெளிக்கும் அவசியமும் இல்லை.
தகுதி அடிப்படையில் அரிசியைவிடவும் கோதுமையை விடவும் கம்புதான் முதன்மை உணவு தானியமாக மக்களுக்கு பயன்பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கம்பு பின்தங்கிப்போனது.
1971 ல் 18.41 மில்லியன் டன்னாக இருந்த கம்பு உற்பத்தி2006 ல் 17.97 டன்னாக குறைந்துள்ளது. அதே சமயம், நெல் 38.09 மில்லியன் டன்னிலிருந்து 85.72 மில்லியன் டன்னுக்கும், கோதுமை, 18.1 மில்லியன் டன்னிலிருந்து 70 மில்லியன் டன்னாகவும் உயர்ந்தது.
பல நோய்களை தரும் குளுடன் மிகுந்த கோதுமையையும் சத்து குறைவான அரிசியையும் முதலிடம் கொடுத்து உற்பத்தி செய்கிறோம். அதிக சத்துள்ள நீரிழிவு, மாரடைப்பு, மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கவல்ல கம்பை எப்படி கைவிட்டோம்.
இனியேனும் விழிப்புணர்வு பெறுவோம். பொது விநியோக திட்டத்தில் கம்பை சேர்ப்பது, பள்ளிகளிலும் விடுதிகளிலும் குழந்தைகளுக்கு மதிய உணவில் கம்புக்கு இடமளிப்பது, விவசாயிகளுக்கும் கம்பை பயிரிட ஆலோசனை வழங்குவது போன்ற செயல்களின் மூலம் கம்புக்கான ஆதரவை பெருக்கி வரும் தலைமுறைகளுக்கு நலத்தை கூட்டலாம்.