வாழை நம்மை வாழ வைக்கும் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். வாழை இலையில் சாப்பிடுவது யாருக்குத் தான் பிடிக்காது. வாழை அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். அதில் வீணாகிற விஷயமே கிடையாது.
பொதுவாக சாப்பிடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவோம். சில நேரங்களில் வாழை இலையில் வைத்து மடித்து கொழுக்கட்டை, மீன் போன்ற சில ரெசிபிகளை சமைத்தும் சாப்பிட்டிருப்போம். சுடச்சுட சாப்பாட்டை வாழையில் போட்டதும் இலையின் நிறம் மாறி அதில் உள்ளதெல்லாம் உணவில் கலந்து அந்த உணவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.
இளநரை
அடிக்கடி வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், தலையில் இளநரை வராமல், உங்களுடைய முடி நீண்ட நாட்களுக்குக் கருப்பாகவே இருக்கும்.
தீக்காயம்
உடலின் வெப்பத்தைக் குறைக்கும் ஆற்றல் வாழை இலைக்கு உண்டு. அதேபோல் தீக்காயம் பட்டால் அதற்கு சிறந்த மருந்தாக வாழை இலை இருக்கும். அதனால் தான், தீக்காயம் பட்டவர்களை வாழை இலையின் மேல் வைத்து, தீக்காயத்தின் தீவிரத்தைக் குறைப்பார்கள்.
கெட்டுப்போகாமல் இருக்க
வெளியிடங்களுக்குச் செல்லுகின்ற பொழுது, வாழை இலையில் உணவை வைத்துப் பேக் செய்து எடுத்துச் சென்றால், உணவு வெகுநேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். அதேசமயம் மிகுந்த வாசனையாகவும் இருக்கும்.
குழந்தைக்கு
குழந்தையின் உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையை விரித்து அதில் குழந்தையை சூரிய ஒளியில் படுக்க வைத்திருந்தால் குழந்தைக்கு வைட்டமின் டி அதிகமாகவே கிடைக்கும். குழந்தையின் உடல் சூடு தணிந்து சரும நோய்கள் வராமல் தடுக்கும்.
வெளிமருந்து
இதுவரையிலும் மேலே சொல்லப்பட்ட அனைத்துக்கும் வாழை இலையை வெளி மருந்து போல பயன்படுத்தப்பட்டது. ஆனால் வாழை இலையை உள் மருந்தாகவும் சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதுவும் மருந்தாக இல்லை. உணவைப் பரிமாறும் இலையையே உணவாகச் சாப்பிட முடியும்.
சித்தர் உணவில்
சித்தர்கள் வாழையில் பட்சணங்கள் செய்து வாழையின் மற்ற பாகங்களைப் போல இலையையும் சாப்பிட்டிருக்கிறார்கள்.
சித்த மருத்துவத்தில் வாழை இலைத்துவையல் பல நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
வாழை இலையில் அப்படி என்ன சத்துக்கள் இருந்துவிடப் போகிறது. நாம் தான் தினமும் வாழைப்பழம், வாழைக்காய், தண்டு, பூ என சாப்பிடுகிறோமே அதில் கிடைக்காததா இந்த இலையில் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வாழை இவை எல்லாவற்றிலும் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் வாழை இலையில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன.
வாழை இலையில் இயற்கையாகவே நிறைய ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறையவே இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது அதேபோல் கால்சியமும் நிறைந்திருக்கிறது.
சிறுநீரகக் கல்
வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு இந்த வாழை இலைத்துவையல் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். அதேபோல் சிறுநீரகக் கல் உண்டாகாமல் தடுக்கவும் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
வாழை இலை துவையல்
தேவையான பொருள்கள்
வாழை இலை – அரை இலை (மீடியம் சைஸ்)
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 7
பூண்டு – 10 பல் (தோல் உரிக்காமல்)
சின்ன வெங்காயம் – 25 (உரித்தது)
உப்பு – தேவையான அளவு
புளி – ஒரு கொட்டையளவு
செய்முறை
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வதங்கியதும் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும். இஞ்சி சுவை பிடித்தால் ஒரு சின்ன துண்டு இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வாழை இலையினைப் போட்டு நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கவும். சிறிய நெல்லிக்காய் இளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள்.
பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு, மிக்சியில் போட்டு நன்கு மை போல அரைத்து எடுத்துக் கொண்டு, எல்லா சட்னிகளையும் தாளிப்படு போல, கடுகு உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டுங்கள். சுவையான ஆரோக்கியமான வாழை இலை சட்னி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.