Thirukkural Ulavu Adhikaram-104 (Ulavu) திருக்குறள் உழவு அதிகாரம்-104 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Thirukkural Ulavu Adhikaram-104 Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-104 ஒழிபியல் உழவு / குடியியல் உழவு.
Thirukkural Ulavu Adhikaram-104
திருக்குறள் பா: 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
kural 1031: suzhandrumerp pinnadhu ulakam adhanaal uzhandhum uzhave thalai
திரு மு.வரதராசனார் பொருள்:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
மணக்குடவர் பொருள்: உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.
கலைஞர் பொருள்: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா பொருள்: உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
திருக்குறள் பா: 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
kural 1032: uzhuvaar ulakaththaarkku aaniaq thaatraadhu ezhuvaarai ellaam poruththu
திரு மு.வரதராசனார் பொருள்:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
மணக்குடவர் பொருள்: உலகத்தாராகிய தேரினுக்கு அச்சாணிபோல்வார் உழுவாரே: அதனைச் செய்யாதாரே பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பார். இஃது உழுவார் தம்மையும் அரசனையும் பெரியராக்குதலன்றி உலகத்தையும் தாங்குவரென்பது கூறிற்று.
கலைஞர் பொருள்: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
சாலமன் பாப்பையா பொருள்: உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.
திருக்குறள் பா: 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
kural 1033: uzhudhuntu vaazhvaare vaazhvaarmar rellaam thozhudhuntu pinsel pavar
திரு மு.வரதராசனார் பொருள்:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
மணக்குடவர் பொருள்: உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
கலைஞர் பொருள்: உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
சாலமன் பாப்பையா பொருள்: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
திருக்குறள் பா: 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
kural 1034: palakutai neezhalum thangutaikkeezhk kaanpar alakutai neezha lavar
திரு மு.வரதராசனார் பொருள்:
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
மணக்குடவர் பொருள்: பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்).
கலைஞர் பொருள்: பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
சாலமன் பாப்பையா பொருள்: உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.
திருக்குறள் பா: 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
kural 1035: iravaar irappaarkkondru eevar karavaadhu kaiseydhoon maalai yavar
திரு மு.வரதராசனார் பொருள்:
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
மணக்குடவர் பொருள்: பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
கலைஞர் பொருள்: தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
சாலமன் பாப்பையா பொருள்: தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.
திருக்குறள் பா: 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
kural 1036: uzhavinaar kaimmatangin illai vizhaivadhooum vittemen paarkkum nilai
திரு மு.வரதராசனார் பொருள்:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
மணக்குடவர் பொருள்: உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை. எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு. .
கலைஞர் பொருள்: எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
திருக்குறள் பா: 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
kural 1037: thotippuzhudhi kaqsaa unakkin pitiththeruvum ventaadhu saalap patum
திரு மு.வரதராசனார் பொருள்:
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
மணக்குடவர் பொருள்: ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.
கலைஞர் பொருள்: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
சாலமன் பாப்பையா பொருள்: உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.
திருக்குறள் பா: 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
kural 1038: erinum nandraal eruvitudhal kattapin neerinum nandradhan kaappu
திரு மு.வரதராசனார் பொருள்:
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
மணக்குடவர் பொருள்: உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
கலைஞர் பொருள்: உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
சாலமன் பாப்பையா பொருள்: உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.
திருக்குறள் பா: 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
kural 1039: sellaan kizhavan iruppin nilampulandhu illaalin ooti vitum
திரு மு.வரதராசனார் பொருள்:
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
மணக்குடவர் பொருள்: நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.
கலைஞர் பொருள்: உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா பொருள்: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.
திருக்குறள் பா: 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
kural 1040: ilamendru asaii iruppaaraik kaanin nilamennum nallaal nakum
திரு மு.வரதராசனார் பொருள்:
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
மணக்குடவர் பொருள்: பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.
கலைஞர் பொருள்: வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
சாலமன் பாப்பையா பொருள்: நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)