Thirukkural Punarchi Vithumbal Adhikaram-129 திருக்குறள் புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்-129 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil

0

Thirukkural Punarchi Vithumbal Adhikaram-129 (Punarchchi Vithumbal) திருக்குறள் புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்-129 கற்பியல் காமத்துப்பால் Thirukkural Punarchi Vithumbal Adhikaram-129 karpiyal kamathupal in Tamil. திருக்குறள் பொருள் (thirukkural porul) Adhikaram-129.

Thirukkural Punarchi Vithumbal Adhikaram-129

Thirukkural Punarchi Vithumbal Adhikaram-129

திருக்குறள் பா: 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

kural 1281: ullak kaliththalum kaana makizhdhalum kallukkil kaamaththir kuntu

திரு மு.வரதராசனார் பொருள்:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

மணக்குடவர் பொருள்: காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.

கலைஞர் பொருள்: மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

சாலமன் பாப்பையா பொருள்: நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

திருக்குறள் பா: 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

kural 1282: thinaiththunaiyum ootaamai ventum panaith thunaiyum kaamam niraiya varin

திரு மு.வரதராசனார் பொருள்:
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

மணக்குடவர் பொருள்: நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

திருக்குறள் பா: 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

kural 1283: penaadhu petpave seyyinum konkanaik kaanaa thamaiyala kan

திரு மு.வரதராசனார் பொருள்:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

மணக்குடவர் பொருள்: தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

கலைஞர் பொருள்: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

திருக்குறள் பா: 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

kural 1284: ootarkan sendrenman thozhi adhumarandhu kootarkan sendradhu en nenju

திரு மு.வரதராசனார் பொருள்:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

மணக்குடவர் பொருள்: தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

சாலமன் பாப்பையா பொருள்: தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

திருக்குறள் பா: 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

kural 1285: ezhudhungaal kolkaanaak kannepol konkan pazhikaanen kanta itaththu

திரு மு.வரதராசனார் பொருள்:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

மணக்குடவர் பொருள்: கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

சாலமன் பாப்பையா பொருள்: முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

திருக்குறள் பா: 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

kural 1286: kaanungaal kaanen thavaraaya kaanaakkaal kaanen thavaral lavai

திரு மு.வரதராசனார் பொருள்:
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

மணக்குடவர் பொருள்: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

கலைஞர் பொருள்: அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

திருக்குறள் பா: 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

kural 1287: uyththal arindhu punalpaai pavarepol poiththal arindhen pulandhu

திரு மு.வரதராசனார் பொருள்:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?.

மணக்குடவர் பொருள்: தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

கலைஞர் பொருள்: வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா பொருள்: தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

திருக்குறள் பா: 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

kural 1288: iliththakka innaa seyinum kaliththaarkkuk kallatre kalvanin maarpu

திரு மு.வரதராசனார் பொருள்:
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

மணக்குடவர் பொருள்: பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

கலைஞர் பொருள்: என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

சாலமன் பாப்பையா பொருள்: இந்த வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

திருக்குறள் பா: 1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

kural 1289: malarinum mellidhu kaamam silaradhan sevvi thalaippatu vaar

திரு மு.வரதராசனார் பொருள்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

மணக்குடவர் பொருள்: எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.

கலைஞர் பொருள்: காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

திருக்குறள் பா: 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

kural 1290: kannin thuniththe kalanginaal pulludhal enninum thaanvidhup putru

திரு மு.வரதராசனார் பொருள்:
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

மணக்குடவர் பொருள்: கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

கலைஞர் பொருள்: விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.

சாலமன் பாப்பையா பொருள்: தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Nechodu Pulaththal Adhikaram-130 திருக்குறள் நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்-130 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil
Next articleThirukkural kuripparivuruthal Adhikaram-128 திருக்குறள் குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்-128 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil