Thirukkural Poluthu Kandirangal Adhikaram-123 திருக்குறள் பொழுதுகண்டிரங்கல் அதிகாரம்-123 கற்பியல் காமத்துப்பால் Karpiyal Kamathupal in Tamil

0

Thirukkural Poluthu Kandirangal Adhikaram-123 (Pozhudhu Kandirangal) திருக்குறள் பொழுதுகண்டிரங்கல் அதிகாரம்-123 கற்பியல் காமத்துப்பால் Thirukkural Poluthu Kandirangal Adhikaram-123 Karpiyal Kamathupal in Tamil. திருக்குறள் பொருள் (thirukkural porul Vilakkam) Adhikaram-123. பொழுது கண்டு இரங்கல் (Pozhuthu Kandu Irangal)

Thirukkural Poluthu Kandirangal Adhikaram-123

Thirukkural Poluthu Kandirangal Adhikaram-123

திருக்குறள் பா: 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

kural 1221: maalaiyo allai manandhaar uyirunnum velainee vaazhi pozhudhu

திரு மு.வரதராசனார் பொருள்:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

மணக்குடவர் பொருள்: பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

கலைஞர் பொருள்: நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!.

சாலமன் பாப்பையா பொருள்: பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

திருக்குறள் பா: 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

kural 1222: punkannai vaazhi marulmaalai emkelpol vankanna thonin thunai

திரு மு.வரதராசனார் பொருள்:
மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.

மணக்குடவர் பொருள்: மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.

கலைஞர் பொருள்: மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.

சாலமன் பாப்பையா பொருள்: பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.

திருக்குறள் பா: 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

kural 1223: paniarumpip paidhalkol maalai thuniarumpith thunpam valara varum

திரு மு.வரதராசனார் பொருள்:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

மணக்குடவர் பொருள்: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

கலைஞர் பொருள்: பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

சாலமன் பாப்பையா பொருள்: அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

திருக்குறள் பா: 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

kaadhalar ilvazhi maalai kolaikkalaththu edhilar pola varum kural 1224

திரு மு.வரதராசனார் பொருள்:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

மணக்குடவர் பொருள்: காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.

கலைஞர் பொருள்: காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

சாலமன் பாப்பையா பொருள்: அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

திருக்குறள் பா: 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

kural 1225: kaalaikkuch cheydhanandru enkol evankolyaan maalaikkuch cheydha pakai

திரு மு.வரதராசனார் பொருள்:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

மணக்குடவர் பொருள்: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?. இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.

கலைஞர் பொருள்: மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன? என்று புலம்புகிறது.

சாலமன் பாப்பையா பொருள்: காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?.

திருக்குறள் பா: 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

kural 1226: maalainoi seydhal manandhaar akalaadha kaalai arindha thilen

திரு மு.வரதராசனார் பொருள்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

மணக்குடவர் பொருள்: மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.

கலைஞர் பொருள்: மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

திருக்குறள் பா: 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

kural 1227: kaalai arumpip pakalellaam podhaaki maalai malarumin noi

திரு மு.வரதராசனார் பொருள்:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

மணக்குடவர் பொருள்: இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.

கலைஞர் பொருள்: காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

திருக்குறள் பா: 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

kural 1228: azhalpolum maalaikkuth thoodhaaki aayan kuzhalpolum kollum patai

திரு மு.வரதராசனார் பொருள்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

மணக்குடவர் பொருள்: நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.

கலைஞர் பொருள்: காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

சாலமன் பாப்பையா பொருள்: முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

திருக்குறள் பா: 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

kural 1229: padhimaruntu paidhal uzhakkum madhimaruntu maalai patardharum pozhdhu

திரு மு.வரதராசனார் பொருள்:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

மணக்குடவர் பொருள்: என் மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி – மானம்.

கலைஞர் பொருள்: பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது. என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.

சாலமன் பாப்பையா பொருள்: இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

திருக்குறள் பா: 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

kural 1230: porulmaalai yaalarai ulli marulmaalai maayumen maayaa uyir

திரு மு.வரதராசனார் பொருள்:
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

மணக்குடவர் பொருள்: பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.

கலைஞர் பொருள்: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

சாலமன் பாப்பையா பொருள்: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Uruppu Nalan Azhiththal Adhikaram-124 திருக்குறள் உறுப்புநலனழிதல் அதிகாரம்-124 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil
Next articleThirukkural Kanavu Nilai Uraithal Adhikaram-122 திருக்குறள் கனவுநிலையுரைத்தல் அதிகாரம்-122 கற்பியல் காமத்துப்பால் Karpiyal Kamathupal in Tamil