Thirukkural Pochavamai Adhikaram-54 திருக்குறள் பொச்சாவாமை அதிகாரம்-54 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil

0

Thirukkural Pochavamai Adhikaram-54 (Pochaavaamai) திருக்குறள் பொச்சாவாமை அதிகாரம்-54 அரசியல் பொருட்பால் Thirukkural Pochavamai Adhikaram-54 Arasiyal Porutpal in Tamil. திருக்குறள் பொச்சாவாமை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-54 அரசியல் பொருட்பால். பொச்சாவாமை Pochavamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Pochavamai Chapter-54. பொச்சாவாமை அதிகாரம் 54.

Thirukkural Pochavamai Adhikaram-54

Thirukkural Pochavamai Adhikaram-54

திருக்குறள் பா: 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

kural 531: irandha vekuliyin theedhe sirandha uvakai makizhchchiyir sorvu

திரு மு.வரதராசனார் பொருள்:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

மணக்குடவர் பொருள்:
மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

கலைஞர் பொருள்:
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

சாலமன் பாப்பையா பொருள்:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

திருக்குறள் பா: 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

kural 532: pochchaappuk kollum pukazhai arivinai nichcha nirappuk kon raangu

திரு மு.வரதராசனார் பொருள்:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

மணக்குடவர் பொருள்:
மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல. இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.

கலைஞர் பொருள்:
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

திருக்குறள் பா: 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

kural 533: pochchaappaark killai pukazhmai adhuulakaththu eppaalnoo lorkkum thunivu

திரு மு.வரதராசனார் பொருள்:
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

மணக்குடவர் பொருள்:
பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.

கலைஞர் பொருள்:
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

திருக்குறள் பா: 534
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

kural 534: achcha mutaiyaarkku aranillai aangillai pochchaap putaiyaarkku nanku

திரு மு.வரதராசனார் பொருள்:
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

மணக்குடவர் பொருள்:
அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை. இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.

கலைஞர் பொருள்:
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

திருக்குறள் பா: 535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

kural 535: munnurak kaavaadhu izhukkiyaan thanpizhai pinnooru irangi vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

மணக்குடவர் பொருள்:
தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.

கலைஞர் பொருள்:
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

திருக்குறள் பா: 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

kural 536: izhukkaamai yaarmaattum endrum vazhukkaamai vaayin adhuvoppadhu il

திரு மு.வரதராசனார் பொருள்:
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் பொருள்:
யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை. இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

கலைஞர் பொருள்:
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தி யிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்:
எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

திருக்குறள் பா: 537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

kural 537: ariyaendru aakaadha illaipoch chaavaak karuviyaal potrich cheyin

திரு மு.வரதராசனார் பொருள்:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

மணக்குடவர் பொருள்:
செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின். இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

திருக்குறள் பா: 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

kural 538: pukazhndhavai potrich cheyalventum seyyaadhu ikazhndhaarkku ezhumaiyum il

திரு மு.வரதராசனார் பொருள்:
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

மணக்குடவர் பொருள்:
உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும். இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான். இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.

கலைஞர் பொருள்:
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

திருக்குறள் பா: 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

kural 539: ikazhchchiyin kettaarai ulluka thaandham makizhchchiyin maindhurum pozhdhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது. இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.

கலைஞர் பொருள்:
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

திருக்குறள் பா: 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

kural 540: ulliyadhu eydhal elidhuman matrundhaan ulliyadhu ullap perin

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

மணக்குடவர் பொருள்:
தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின். இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.

கலைஞர் பொருள்:
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural sengonmai Adhikaram-55 திருக்குறள் செங்கோன்மை அதிகாரம்-55 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil
Next articleThirukkural Otradal Adhikaram-53 திருக்குறள் சுற்றந்தழால் அதிகாரம்-53 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil