Thirukkural Naan Udaimai Adhikaram-102 திருக்குறள் நாணுடைமை அதிகாரம்-102 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil நாண் உடைமை

0

Thirukkural Naan Udaimai Adhikaram-102 (Naanudaimai) திருக்குறள் நாணுடைமை அதிகாரம்-102 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Thirukkural Naan Udaimai Adhikaram-102 Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-102 ஒழிபியல் நாணுடைமை / குடியியல் நாணுடைமை / நாண் உடைமை.

Thirukkural Naan Udaimai Adhikaram-102

Thirukkural Naan Udaimai Adhikaram-102

திருக்குறள் பா: 1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

kural 1011: karumaththaal naanudhal naanun thirunudhal nallavar naanup pira

திரு மு.வரதராசனார் பொருள்:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

மணக்குடவர் பொருள்: தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

கலைஞர் பொருள்: ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

சாலமன் பாப்பையா பொருள்: இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.

திருக்குறள் பா: 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

kural 1012: oonutai echcham uyirkkellaam veralla naanutaimai maandhar sirappu

திரு மு.வரதராசனார் பொருள்:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

மணக்குடவர் பொருள்: உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்: உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.

சாலமன் பாப்பையா பொருள்: உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

திருக்குறள் பா: 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

kural 1013: oonaik kuriththa uyirellaam naanennum nanmai kuriththadhu saalpu

திரு மு.வரதராசனார் பொருள்:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

மணக்குடவர் பொருள்: பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.

கலைஞர் பொருள்: உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

திருக்குறள் பா: 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

kural 1014: aniandro naanutaimai saandrorkku aqdhindrel piniandro peetu natai

திரு மு.வரதராசனார் பொருள்:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

மணக்குடவர் பொருள்: சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.

கலைஞர் பொருள்: நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

சாலமன் பாப்பையா பொருள்: நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

திருக்குறள் பா: 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

kural 1015: pirarpazhiyum thampazhiyum naanuvaar naanukku uraipadhi ennum ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

மணக்குடவர் பொருள்: பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்: தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.

சாலமன் பாப்பையா பொருள்: தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

திருக்குறள் பா: 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

kural 1016: naanveli kollaadhu manno viyangnaalam penalar melaa yavar

திரு மு.வரதராசனார் பொருள்:
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

மணக்குடவர் பொருள்: உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.

கலைஞர் பொருள்: பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

திருக்குறள் பா: 1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

kural 1017: naanaal uyiraith thurappar uyirpporuttaal naandhuravaar naanaal pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

மணக்குடவர் பொருள்:

கலைஞர் பொருள்: நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:

திருக்குறள் பா: 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

kural 1018: pirarnaanath thakkadhu thaannaanaa naayin aramnaanath thakkadhu utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் பொருள்: உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.

கலைஞர் பொருள்: வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

திருக்குறள் பா: 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

kural 1019: kulanjutum kolkai pizhaippin nalanjutum naaninmai nindrak katai

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

மணக்குடவர் பொருள்: ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.

கலைஞர் பொருள்: கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

திருக்குறள் பா: 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

kural 1020: naanakath thillaar iyakkam marappaavai naanaal uyirmarutti atru

திரு மு.வரதராசனார் பொருள்:
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

மணக்குடவர் பொருள்: மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.

கலைஞர் பொருள்: உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்: மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Kudi Seyal Vagai Adhikaram-103 திருக்குறள் குடிசெயல்வகை அதிகாரம்-103 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil குடி செயல் வகை
Next articleThirukkural Nandriyil Selvam Adhikaram-101 திருக்குறள் நன்றியில் செல்வம் அதிகாரம்-101 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil நன்றியில்செல்வம்