Thirukkural Marunthu Adhikaram-95 (Marundhu) திருக்குறள் மருந்து அதிகாரம்-95 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Thirukkural Marunthu Adhikaram-95 Angaviyal / Natpiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-95 அங்கவியல் மருந்து / நட்பியல் மருந்து. Marundhu Thirukkural by Thiruvalluvar. Thirukkural Marunthu Chapter-95.
Thirukkural Marunthu Adhikaram-95
திருக்குறள் பா: 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
kural 941: mikinum kuraiyinum noiseyyum noolor valimudhalaa enniya moondru
திரு மு.வரதராசனார் பொருள்:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
மணக்குடவர் பொருள்: உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
கலைஞர் பொருள்: வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையா பொருள்: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
திருக்குறள் பா: 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
kural 942: marundhena ventaavaam yaakkaikku arundhiyadhu atradhu potri unin
திரு மு.வரதராசனார் பொருள்:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
மணக்குடவர் பொருள்: யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.
கலைஞர் பொருள்: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
சாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
திருக்குறள் பா: 943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
kural 943: atraal aravarindhu unka aqdhutampu petraan netidhuykkum aaru
திரு மு.வரதராசனார் பொருள்:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
மணக்குடவர் பொருள்: முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.
கலைஞர் பொருள்: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
சாலமன் பாப்பையா பொருள்: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
திருக்குறள் பா: 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
kural 944: nayanotu nandri purindha payanudaiyaar paNpupaa raattum ulagu
திரு மு.வரதராசனார் பொருள்:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
மணக்குடவர் பொருள்: முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.
கலைஞர் பொருள்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
திருக்குறள் பா: 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
kural 945: maarupaatu illaadha unti maruththunnin oorupaatu illai uyirkku
திரு மு.வரதராசனார் பொருள்:
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
மணக்குடவர் பொருள்: சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.
கலைஞர் பொருள்: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
திருக்குறள் பா: 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
kural 946: izhivarindhu unpaankan inpampol nirkum kazhiper iraiyaankan noi
திரு மு.வரதராசனார் பொருள்:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
மணக்குடவர் பொருள்: அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.
கலைஞர் பொருள்: அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.
சாலமன் பாப்பையா பொருள்: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
திருக்குறள் பா: 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
kural 947: theeyala vandrith theriyaan peridhunnin noyala vindrip patum
திரு மு.வரதராசனார் பொருள்:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
மணக்குடவர் பொருள்: பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.
கலைஞர் பொருள்: பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
சாலமன் பாப்பையா பொருள்: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
திருக்குறள் பா: 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
kural 948: noinaati noimudhal naati adhudhanikkum vaainaati vaaippach cheyal
திரு மு.வரதராசனார் பொருள்:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
மணக்குடவர் பொருள்: நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.
கலைஞர் பொருள்: நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
சாலமன் பாப்பையா பொருள்: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
திருக்குறள் பா: 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
kural 949: utraan alavum piniyalavum kaalamum katraan karudhich cheyal
திரு மு.வரதராசனார் பொருள்:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
மணக்குடவர் பொருள்: நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.
கலைஞர் பொருள்: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா பொருள்: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
திருக்குறள் பா: 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
kural 950: utravan theerppaan marundhuzhaich chelvaanendru appaal naar kootre marundhu
திரு மு.வரதராசனார் பொருள்:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
மணக்குடவர் பொருள்: நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.
கலைஞர் பொருள்: நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
சாலமன் பாப்பையா பொருள்: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)