Thirukkural Kallunnaamai Adhikaram-93 திருக்குறள் கள்ளுண்ணாமை அதிகாரம்-93 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil

0

Thirukkural Kallunnaamai Adhikaram-93 (Kallunnamai) திருக்குறள் கள்ளுண்ணாமை அதிகாரம்-93 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Thirukkural Kallunnaamai Adhikaram-93 Angaviyal / Natpiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-93 அங்கவியல் கள்ளுண்ணாமை / நட்பியல் கள்ளுண்ணாமை. Kallunnaamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Kallunnaamai Chapter-93.

Thirukkural Kallunnaamai Adhikaram-93

Thirukkural Kallunnaamai Adhikaram-93

திருக்குறள் பா: 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

kural 921: utkap pataaar oliyizhappar egngnaandrum katkaadhal kontozhuku vaar

திரு மு.வரதராசனார் பொருள்:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

மணக்குடவர் பொருள்: பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

கலைஞர் பொருள்: போதைப் பொருள் மீத எப்போதும் பெரு விருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

திருக்குறள் பா: 922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

kural 922: unnarka kallai unilunka saandroraan ennap pataventaa thaar

திரு மு.வரதராசனார் பொருள்:
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

மணக்குடவர் பொருள்: கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.

கலைஞர் பொருள்: பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

திருக்குறள் பா: 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

kural 923: eendraal mukaththeyum innaadhaal enmatruch chaandror mukaththuk kali

திரு மு.வரதராசனார் பொருள்:
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

மணக்குடவர் பொருள்: தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

கலைஞர் பொருள்: கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.

திருக்குறள் பா: 924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

kural 924: naanennum nallaal purangotukkum kallennum penaap perungutrath thaarkku

திரு மு.வரதராசனார் பொருள்:
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

மணக்குடவர் பொருள்: நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.

கலைஞர் பொருள்: மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

திருக்குறள் பா: 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

kural 925: kaiyari yaamai utaiththe porulkotuththu meyyari yaamai kolal

திரு மு.வரதராசனார் பொருள்:
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

மணக்குடவர் பொருள்: பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

கலைஞர் பொருள்: ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

திருக்குறள் பா: 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

kural 926: thunjinaar seththaarin verallar egngnaandrum nanjunpaar kallun pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

மணக்குடவர் பொருள்: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான். இஃது அறிவிழப்பரென்றது.

கலைஞர் பொருள்: மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா பொருள்: உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

திருக்குறள் பா: 927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்

kural 927: ullotri ulloor nakappatuvar egngnaandrum kallotrik kansaai pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

மணக்குடவர் பொருள்: தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.

கலைஞர் பொருள்: மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

திருக்குறள் பா: 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

kural 928: kaliththariyen enpadhu kaivituka nenjaththu oliththadhooum aange mikum

திரு மு.வரதராசனார் பொருள்:
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

மணக்குடவர் பொருள்: கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.

கலைஞர் பொருள்: மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

திருக்குறள் பா: 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

kural 929: kaliththaanaik kaaranam kaattudhal keezhneerk kuliththaanaith theeththureei atru

திரு மு.வரதராசனார் பொருள்:
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

மணக்குடவர் பொருள்: கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.

கலைஞர் பொருள்: குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

திருக்குறள் பா: 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

kural 930: kallunnaap pozhdhir kaliththaanaik kaanungaal ullaankol untadhan sorvu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

மணக்குடவர் பொருள்: தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.

கலைஞர் பொருள்: ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

சாலமன் பாப்பையா பொருள்: போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Soothu Adhikaram-94 திருக்குறள் சூது அதிகாரம்-94 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil
Next articleThirukkural Padaiserukku Adhikaram-78 திருக்குறள் படைச்செருக்கு அதிகாரம்-78 அங்கவியல் / படையியல் பொருட்பால் Angaviyal / Padaiyiyal Porutpal in Tamil படைச் செருக்கு Padai Cheruku