Thirukkural Igal Adhikaram-86 திருக்குறள் இகல் அதிகாரம்-86 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil

0
294

Thirukkural Igal Adhikaram-86 (ikal) திருக்குறள் இகல் அதிகாரம்-86 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Thirukkural igal Adhikaram-86 Angaviyal / Natpiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-86 அங்கவியல் இகல்/ நட்பியல் இகல். Igal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Igal Chapter-86. Thirukkural ikal 86.

Thirukkural Igal Adhikaram-86

Thirukkural Igal Adhikaram-86

திருக்குறள் பா: 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

kural 851: ikalenpa ellaa uyirkkum pakalennum panpinmai paarikkum noi

திரு மு.வரதராசனார் பொருள்:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர.

மணக்குடவர் பொருள்: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.

கலைஞர் பொருள்: மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

திருக்குறள் பா: 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

kural 852: pakalkarudhip patraa seyinum ikalkarudhi innaasey yaamai thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

மணக்குடவர் பொருள்: தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

கலைஞர் பொருள்: வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

திருக்குறள் பா: 853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

kural 853: ikalennum evvanoi neekkin thavalillaath thaavil vilakkam tharum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

மணக்குடவர் பொருள்: மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.

கலைஞர் பொருள்: மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

திருக்குறள் பா: 854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

kural 854: inpaththul inpam payakkum ikalennum thunpaththul thunpang ketin

திரு மு.வரதராசனார் பொருள்:
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

மணக்குடவர் பொருள்: இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.

கலைஞர் பொருள்: துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

திருக்குறள் பா: 855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

kural 855: ikaledhir saaindhozhuka vallaarai yaare mikalookkum thanmai yavar

திரு மு.வரதராசனார் பொருள்:
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

மணக்குடவர் பொருள்: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.

கலைஞர் பொருள்: மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?.

திருக்குறள் பா: 856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

kural 856: ikalin mikalinidhu enpavan vaazhkkai thavalum ketalum naniththu

திரு மு.வரதராசனார் பொருள்:
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

மணக்குடவர் பொருள்: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

கலைஞர் பொருள்: மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

சாலமன் பாப்பையா பொருள்: பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.

திருக்குறள் பா: 857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

kural 857: mikalmeval meypporul kaanaar ikalmeval innaa arivi navar

திரு மு.வரதராசனார் பொருள்:
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

மணக்குடவர் பொருள்: மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

கலைஞர் பொருள்: பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

திருக்குறள் பா: 858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

kural 858: ikalirku edhirsaaidhal aakkam adhanai mikalookkin ookkumaam ketu

திரு மு.வரதராசனார் பொருள்:
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

மணக்குடவர் பொருள்: மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்: மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.

சாலமன் பாப்பையா பொருள்: மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

திருக்குறள் பா: 859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

kural 859: ikalkaanaan aakkam varungaal adhanai mikalkaanum ketu thararku

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

மணக்குடவர் பொருள்: மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.

கலைஞர் பொருள்: ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

திருக்குறள் பா: 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

kural 860: ikalaanaam innaadha ellaam nakalaanaam nannayam ennum serukku

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

மணக்குடவர் பொருள்: மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.

கலைஞர் பொருள்: மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

சாலமன் பாப்பையா பொருள்: மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: