Home Tamil Kavithaigal செம்மணித்தாய் semmani thaai Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-40)

செம்மணித்தாய் semmani thaai Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-40)

0

செந்நீரில் குளித்த மண் நான் என்பதால்
என் பெயர் செம்மணி!

கண்ணீரோடும் காயங்களோடும் பல ஏக்கங்களோடும்
அனாதைகளாய் மடிந்த என் பிள்ளைகளை
தாயாக நெஞ்சோடு அணைத்து கொண்டேன்!

பல கதறல்களையும் ஓலங்களையும்
பிஞ்சு மழலைகளின் துடிதுடிப்புக்களையும்
பார்த்திருந்த என் கண்ணில் வடியவில்லை கண்ணீர்
மாறாக வடிந்தது செந்நீர்!

தமிழர் தேசத்தில் பிறந்ததால் என்
காதில் கேட்கவில்லை தாலாட்டு
நான் கேட்டதெல்லாம் என்னவோ
மரண ஓலங்களின் முழக்கம்!

கயவனின் முன்னே ஒன்றும் செய்ய முடியாது
கூனிக்குறுகி நின்ற என் பிள்ளைகளை பார்த்தேன்
ஏதும் அறியாத பாலகர்கள் பதைபதைப்பதை பார்த்தேன்!

ஆடை அற்று என் குழந்தைகள்
கயவனின் காலடியில் கிடப்பதை விட‌
அவர்களை என் நெஞ்சோடு அணைத்த மகிழ்ச்சி
இன்னும் என் நெஞ்சோடு உறங்கிக்கிடக்கிறது!

என் நெஞ்சின் பாரம் என்னால் தாங்க முடியவில்லை
இன்னும் பலர் என் மடியில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர்
பேச முடியாது மெளனித்து நிற்கின்றேன்!

தூக்கம் தொலைத்த என் இரவுகளின் நிசப்தத்தில்
மெல்லிய காற்றின் ஓசை என் காதில் சொல்கிறது
ஏதும் செய்ய முடியாது வேடிக்கை பார்த்த‌
ஓர் குற்றவாழிதான் நீயும் என்று!

என் உயிர் உள்ளவரை
தமிழரின் இதயங்களில்
செந்நீரில் குளித்த செம்மணி புதைகுழியாய்
வாழ்ந்து கொண்டிருப்பேன்!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்