பொதுத்தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது!
9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், பொதுத்தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஜனாதிபதியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போதைய நாடாளுமன்றம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது. எனவே, நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சியினரும், சிவில் அமைப்பினரும், போராட்டக்காரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் படுதோல்வி ஏற்படும் என்ற அச்சத்தில், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் வரை காத்திருக்க ‘மொட்டு’க் கட்சி, ஜனாதிபதி ஊடாக வியூகம் வகுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆண்டுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், அடுத்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஜனாதிபதி உத்தேசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.